
ஈரமற்ற கல்
கண்களில் திரளும் நீர்
உன் நெஞ்சில் குருதியாகப்
பாய வேண்டாம்
ஆனால்
நான் எதற்கெடுத்தாலும்
அழுபவள் இல்லை என
அறிந்த உன் கரங்கள்
என் தோளைத் தழுவி
இருக்கலாம்,என் தோழா!
கன்னங்களின் நீரை கைக்குட்டை கொண்டு
ஒத்தி இருக்கலாம்
என் அன்பே
வெம்பாலையின் கல்லைப் போல் ஈரமற்றுப் போனதில்
என் மனதிலும் வடிகிறது செந்நீர்
ஒரு நாள் அது உன்னை நனக்கட்டும்
யாருக்கேனும் உன் ஈரம்
கிடைக்கட்டும்.
தேவதை
போதாத மேல் சட்டை
வயிற்றை இறுக்கும்
பாவாடை
யாரோ கொடுத்ததை அணிந்து
மழைக்கால மாலையில்
அன்னையுடன் நடந்த அந்தச் சிறுமி,
அம்மா தன்தலைப்பால் போர்த்திய
கிழிசல்களின் ஊடாக மழையை முகத்தில் ஏந்திக் கொண்டு உல்லாசமாய்
குதித்துக் குதித்து செல்கிறாள்
மேல்தளத்தில் நாலு சுவருக்குள்ளிலிருந்து
நான் சுவாசிக்க மட்டுமே செய்கிறேன்.

“கிழிசல்களின் ஊடாக மழையை முகத்தில் ஏந்தி”
அற்புதமான வரிகள் !
மனத்தையும் கிழிசல் பண்ணுகிறது!👏👏🙏👌🌺🌈
நன்றி மேம்