ஆபன்ஹீமர்-அமெரிக்க வரலாறும் குற்றவுணர்வும்/முபீன் சாதிகா

ஆபன்ஹீமர் படத்தை நேற்றுப் பார்க்க முடிந்தது….

கிறிஸ்டோபர் நோலன் இயக்கியிருக்கும் ஆபன்ஹீமர் படம் வெறும் அமெரிக்க வரலாறு அல்லது அணு ஆயுதம் பற்றிய வரலாறு என்று மட்டும் பார்க்க முடியாது. ஏனெனில் அமெரிக்க ப்ரோமிதியஸ் என்று அழைக்கப்பட்ட அமெரிக்க அணுகுண்டின் தந்தையான ஆபன்ஹீமரின் சுயசரிதையை கிறிஸ்டோபர் நோலன் படமாக்க முயன்றதற்கு ஒரு தனிப்பட்ட ஆளுமையைப் பெரிய திரையில் கொண்டுவரவேண்டும் என்பதாக மட்டும் இருக்காது.

இரண்டாம் உலகப் போரின் போது அறிவியல் துறை அரசியலால் எப்படி பாதிக்கப்பட்டது என்பது முதல் செய்தியாகப் படத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம். அடுத்து அமெரிக்காவின் ஏகாதிபத்திய கனவை அணு ஆயுதம் எப்படி நிறைவேற்றியது என்பதை மீண்டும் வாழ்ந்து பார்க்க முயற்சி எடுத்தப் படம் எனலாம். மேலும் அமெரிக்காவுக்கான கதையாடலாக மட்டுமே இந்தப் படம் நிற்கவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஜப்பானியர்கள் பர்ல் துறைமுகத்தைத் துவம்சம் செய்து நான்காண்டுகள் கழித்து அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டை வீசியது. அணு குண்டு தயாரிக்கவேண்டும் என்பதுதான் மன்ஹாட்டன் திட்டமாக அமெரிக்காவில் 1939ல் தொடங்கியது. ஜெர்மனி அணுகுண்டு தயாரிப்பதாகச் செய்திகள் கசிந்தவுடன் அமெரிக்கா இந்தப் பணியைத் தொடங்கியது. ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு அணுகுண்டு தயாரிக்கப் பரிந்துரை செய்து கடிதம் கொடுத்தார்.

அணுகுண்டு தயாரிப்புக்கான அறிவியல் வரலாற்றைப் படம் லேசாகச் சொல்லிச் செல்கிறது. ஜெர்மனியில் ஹான்-ஸ்ட்ராஸ்மேன் அணுவைப் பிளக்கலாம் என்று கண்டுபிடித்தது மன்ஹாட்டன் திட்டத்திற்குப் பெரும் பயனை விளைவித்திருக்கிறது. மன்ஹாட்டன் திட்டம் அணு குண்டு தயாரிக்கும் அமெரிக்க-பிரிட்டீஷ் (வின்ஸ்டனின் சர்ச்சிலின் கனவுத் திட்டம் எனலாம்) பெருங்கனவை நனவாக்கிய ஒன்று.

ஆபன்ஹீமர் இயற்பியலாளராக, அடிக்கடி மனப்பிறழ்வுக்கு ஆளானவராக, திருமணத்திற்கு மீறிய உறவை வைத்திருந்தவராக அணுகுண்டு தயாரிப்பில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தவராக அது ஜப்பான் மீது வீசிய பின் அதனால் குற்றவுணர்வு கொண்டவராக இருந்தார் என்பதைப் படம் ஆழமாகக் காட்டினாலும் மற்றொரு இழையைக் கவனமாகப் பின்னுகிறது.
ஆபன்ஹீமர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின், இரத்தவெறியின், ஹிட்லரைவிட அதிகாரத்தின் மீது கொண்டிருந்த மோகத்தின் குறியீடாக இருப்பதைச் சுட்டிக்காட்டுவதுதான் படத்தின் அடிப்படை நோக்கம்.

ஓர் அமெரிக்க இராணுவ அதிகாரி, பெரிய அறிவியல் வெற்றிகளைப் பெற்றிராத ஜெர்மனி அழித்தொழித்த யூத இனத்தைச் சேர்ந்த ஆபன்ஹீமரை அணு ஆயுதத் தயாரிப்புத் திட்டத்திற்குத் தலைவராக நியமிப்பதிலிருந்து அமெரிக்காவின் கீழ்த்தரமான வெறியாட்டம் தொடங்குகிறது. இராணுவத்தின் சொற்படி நடக்கும் அறிவியலாளர்களைக் கொண்டு அமெரிக்கர்களைத் தவிர மற்ற அனைவரையும் கொன்றொழிக்கலாம் என்ற பெரும் கொடூர ஆசை கிளர்ந்தெழுந்ததை ஆபன்ஹீமர் நிறைவேற்றியதும் அதன் காரணமாக அவரைத் தவிர யாருமே குற்றவுணர்வு கொள்ளாமல் இருந்ததும் படம் காட்டும் மற்றொரு இழை.

இராணுவம் நியமித்த அறிவியலாளரான ஆபன்ஹீமர் கொண்டிருந்த கம்யுனிசத் தொடர்புகள் அவரை அந்தக் குற்றவுணர்வுக்கு ஆட்படுத்தியிருக்கலாம் என்பது போலவும் படத்தின் ஒரு முகம் சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் அவருடைய தம்பி ஒரு கம்யுனிச ஆதரவாளர், அவருடைய மனைவி முன்னாள் கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர். அவர் திருமணத்திற்கு மீறிய உறவு கொண்டிருந்த பெண்ணும் கம்யுனிஸ்ட் உறுப்பினர். இவர்கள் ஆபன்ஹீமரை அமெரிக்க அதிகாரப் பித்துநிலையிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு இழுக்க உதவும் பாத்திரங்களாக இருக்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் ட்ரூமேன், ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டை வீசிய பின் ஆபன்ஹீமரைச் சந்திக்கிறார். அப்போது ஆபன்ஹீமர் தனது கைகளில் ரத்தம் படிந்திருப்பதாகச் சொல்லும் போது அதனைத் துடைக்கும்படி சொல்வதற்காக அமெரிக்க அதிபர் தனது கைக்குட்டையை எடுத்து நீட்டுவார். அந்தக் குற்றத்திற்கு-அது குற்றமாக இருந்தால் தானே பொறுப்பு என்றும் ஆபன்ஹீமர் அல்ல என்றும் கூறுகிறார். ஆனால் அணுகுண்டு தயாரிப்பதற்குத் தான் ஒத்துழைத்ததுதான் இந்தப் பேரழிவுக்குக் காரணம் என்ற எண்ணத்தை ஆபன்ஹீமர் மாற்றிக் கொள்ளவில்லை.

மற்றொரு இழை அணுகுண்டு சோதனைக்கு வைக்கப்பட்ட பெயர் பற்றியது. டிரினிட்டி என்று அழைக்கப்பட்ட இந்தச் சோதனை வெற்றி பெற்றதால்தான் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டைப் போட முடிந்தது. டிரினிட்டி என்பது கிறித்தவ மதத்தில் கடவுளின் தந்தை, கடவுளின் மகன், பரிசுத்த ஆவி மூன்றும் இணைந்ததுதான் கடவுள் என்ற தத்துவம் உள்ளது. இந்து மத தத்துவங்களில் மும்மை என்பது மூன்று பிறவிகளைக் குறிப்பது. அணுகுண்டு தயாரிப்பும் வெடிப்பும் கடவுளுக்கு நிகரான அதிகாரத்தை அமெரிக்காவுக்குக் கொடுத்துவிட்டதைக் குறிப்பதற்காக இந்தப் பெயர் வைக்கப்பட்டதை மீண்டும் நினைவுபடுத்துகிறது படம்.

ஆபன்ஹீமர் திருமணத்திற்கு மீறிய உறவைக் கொண்டிருக்கும் போது பகவத் கீதையின் வரிகளை வாசிப்பது குறித்து சர்ச்சை ஏற்படுத்தியிருப்பதாகக் காண முடிந்தது. அந்த வரிகள் ’நான் மரணமாகிறேன், உலகை அழிப்பவனாக மாறுகிறேன்’ என்பதாக வருகிறது. ஆண்-பெண் உறவு மனித மறுஉற்பத்திக்கானதாக இருக்கையில் பேரழிவின் முகவராக ஆபன்ஹீமர் இருப்பதைச் சுட்டிக்காட்டவும் எத்தனை ஆண்-பெண்கள் சேர்ந்தாலும் ஓர் அணு ஆயுதத்தின் முன் தூளாகிப் போவார்கள் என்பதைச் சொல்லவும் அந்தக் காட்சி முன்வைக்கப்பட்டிருக்கிறது.

ஆபன்ஹீமர் அணுகுண்டு வீசிய பின் அணுகுண்டு தயாரிப்புத் திட்டத்திலிருந்து நீக்கப்படுகிறார். அவருடைய கம்யுனிசத் தொடர்புகளும் ஹைட்ரஜன் குண்டைத் தயாரிப்பதில் அவர் காட்டிய எதிர்ப்பும் அவருக்கு ரகசிய ஆவணங்களைப் பார்க்க முடியாத வகையில் பாதுகாப்பு ஒப்புதலைத் தராமல் செய்துவிடுகிறது. அதற்கு அவர் மீது அமெரிக்க அரசியல்வாதியின் பொறாமையும் தவறான புரிதலும் என்பதையும் படம் காட்டுகிறது. அந்த அரசியல்வாதியும் தனது இலக்கான அமெரிக்க அதிகார அமைப்பில் பங்கு பெறமுடியாமல் போகிறது. அதற்கு கென்னடியின் எதிர்ப்பு காரணமாகிறது. கென்னடி இறப்பதற்கு முன் ஆபன்ஹீமருக்கு மறுவாழ்வுக்கான பரிசை அறிவித்தார்.

அமெரிக்கா இரண்டாம் உலகப் போர் முடிந்து போன தருவாயில் ஜப்பானை அடக்க அணு குண்டு வீசி தனது மேலாதிக்கத்தை உலக நாடுகள் மீது பிரயோகித்தது. அதே போல் பல நாடுகளும் அணுகுண்டுகளை உருவாக்கவும் சோதிக்கவும் பிற நாடுகளின் மீது வீசவும் ஆவலில் வெறியில் இருப்பதையும் அதனால் அது போன்ற நாடுகளும் அந்த ஆயுதங்களை உருவாக்கியவர்களும் இந்தப் படத்தைப் பார்த்து அந்த வெறியைக் கைவிடச் செய்ய விழிப்புணர்வு கொடுத்தப் படம் எனலாம். ஏனெனில் அணுகுண்டு பரிசோதனை சங்கிலித் தொடர் விளைவுகளை ஏற்படுத்தி உலகத்தை அழித்துவிடும் என்ற அச்சம் அப்போது இருந்ததைப் படம் காட்டுகிறது. இறுதியில் அந்த அச்சம் உண்மையாகிவிட்டது என்பதாகப் படம் சொல்கிறது.

அணு குண்டு வெடிப்போ, அதன் விளைவுகளோ படத்தில் காட்டப்படவில்லை. ஆனால் அதன் தாக்கம் பெரும் ஆழமாக இறங்கும் வகையில் காட்டப்படுகிறது. கிறிஸ்டோபர் நோலனின் வழக்கமான அநேர்க்கோட்டு முறைமையில் எடுக்கப்பட்டப் படம். இசை பெரும் பலம். ஒளிப்பதிவும் மிகவும் தரமான முறையில் அமைந்திருக்கிறது.

oppenheimermovie