ஐந்து கவிதைகள்/எல்.ரகோத்தமன்

 


 
1)        தவிப்பு

 
சிலந்தித் தொட்டிலில்
சிக்கித் தவிக்கும்
பெயரறியா பூச்சியாய்
எண்ணங்களின்
பின்னல் வலையில்
சிக்கித் தவிக்கிறது
மானுடக் கனவுகள்!

26-07-2023

 
2)        மிச்சம்
 
வானவில் வழியேறி
அதிசயம் காண
வானமெங்கும்
அலைந்து திரிகிறது
அந்த பறவை!
 
அந்நெடுமரத்தில்
அப்பறவை
வேட்கையுடன் கட்டிய
கூடுதனில் இன்னும்
மிச்சமிருக்கிறது
அதன் கனவு முட்டைகள்!

26-07-2023

 
3)        பௌர்ணமி
 
முள்வேலி பாதுகாப்பில்
பூத்துக் குலுங்கும்
நந்தவனத் தோட்டமதில்
தலையாட்டி
கண்சிமிட்டி
குதூகலம் கொள்ளும்
வண்ணப் பூக்களின்
மூன்றாம் பிறை கனவுகள்
இன்னமும் பயணிக்கிறது
ஒரு பௌணர்மி நோக்கி!

26-07-2023
 
4)        குப்பை

 
தூசி விழுந்த
கண்ணென
மனம் துணுக்குற்று
தவிக்கிறது
தன்னுள் குப்பையாய்
மிதக்கும் கனவுகளின்
கோலம் கண்டு!

26-07-2023
 
 
5)        கோடு
 
கோட்டைத் தாண்டாத
சீதையாய்
மனதின் எல்லையில்
மொட்டவிழும்
தருணம் வேண்டி
காத்திருக்கிறது கனவுகள்!
 
கனவுக்குள் அடிக்கடி
தரையிறங்குகிறது
ஒரு புஷ்பக விமானம்!
 
விமானம் ஏறி
புத்துலகம் காண
தடையாய்
யாரோ கிழித்த
ஒரு கோடு!
 
கோட்டிற்குள்
ஓர் உலகம்
கோடு தாண்டினால்
உலகமே வேறு!

26-07-2023
 
                                                          
 
 

One Comment on “ஐந்து கவிதைகள்/எல்.ரகோத்தமன்”

  1. எண்ணங்கள் ,முட்டைகள் வதை,மலர்கள் இதம்,குப்பைகள் வதை,கோடுகள் வதை.கனவுகள் இதம்??!

Comments are closed.