
அத்யாயம் 3 பகுதி 2.
- அண்டம் அமைதியாய் இருக்கும் இடம் உயர்ந்த பிரமன் ஒளியோடு இருக்குமிடம். இது அறிந்தவனை, ஆசைகளற்ற ஞானி வணங்குகிறான். மறு பிறவி தொலைக்கிறான்.
ஆசையை மனதில்
வளர்த்துக்கொள்பவன்
அந்த ஆசையினாலே
இங்கும் அங்கும்
மீண்டும் மீண்டும்
பிறவி எடுக்கிறான்.
ஆசைகள் ஓய்ந்து
ஆன்மாவை உணர்ந்தவனுக்கு
இப்பூவுலகிலேயே
அனைத்து ஆசைகளும்
பெற்றுக்கொள்கின்றன விடை.
- வேதங்களை படிப்பதாலே
நிறைவாய் கற்றலாலே
பெற்ற அறிவினாலே,
ஆன்மாவை அடையமுடியாது
யாருடைய சுயம்
அவனைத் தேர்கிறதோ
அவனில் தோய்கிறதோ
அவனுக்கே அச்சுயம் சாத்தியப்படுகிறது.
அவனுக்கே ஆன்மா
தனது பண்பை வெளிச்சமாக்குகிறது.
வலிமையில்லாதவன்,
தன் முனைப்பு இல்லாதவன்,
இலக்கு ஏதுமில்லாத தவசி
ஆன்மாவை க்காண்பதில்லை.
இவைகள் கைவரப் பெற்று
தொடர்ந்து முயலும் ஞானி
பிரம்மத்தையே அடைகிறான்.
- ஆத்மாவைக் கண்டடைந்த முனிவர்கள் ஞானம் நிறைவாக கைவரப்பெற்று ஆசைகளினின்று விடுதலைபெற்று அமைதி பெறுகின்றனர். எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கும் ஆத்மாவை தரிசித்தவர்கள் ஆத்மாவுக்கு விசுவாசமாகி எல்லாவற்றிலும் நிறைவடைகிறார்கள்.
அய்யத்துக்கு இடமின்றி வேதாந்த ஞானம் கைவரப்பெற்று யோக அனுசரிப்பால் ஆசையை வென்று மனத்தைத் தூய்மையாக்கிய துறவிகள் பிரம்மலோகத்தை அடைகிறார்கள். இறப்பின் போது முற்றாய் விடுதலை பெறுகிறார்கள்.
- 15 காலங்கள்-பிரிவுகள் அதன் மூலங்களில் நுழைகின்றன. அதனதன் தேவர்கள் அந்தந்த தேவர்களில் நுழைகிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் ஆன்ம அறிவு இவைகளால் அழிவேயில்லா உயர் பிரம்மத்தின் உச்சத்தில் ஒன்றாகிறார்கள்.
பாயும் ஆறுகள்
கடலில் சங்கமமாகி
இழப்பது உருவத்தை பெயரை..
ஞானிகள் பெயர் உரு
இரண்டானும் விடுதலை
பெற்றுப் பெரிதினும்
பெரிய புனிதரைச்சேர்கிறார்கள்.
- உயரிய பிரம்மத்தை அறிந்தவர்கள் பிரம்மமாகிவிடுகிறார்கள். துயரை வென்று, நன்மை தீமைளினின்று விதலைபெற்று இதயத்தின் எல்லா தளைகளிலிருந்தும் விடுதலையாகி அழியா நிலையை அடைபவர்கள் அவர்களே..
அவ்வழி பிரம்மத்தை அறியாதவர்கள் மீண்டும் பிறக்கிறார்கள்
- ரிக் வேதம் பின் வருமாறு சொல்கிறது.
விதிக்கப்பட்ட செயல் செய்யும்
ஒருவற்கு பிரம்ம ஞானத்தைக்
கற்பிக்கவேண்டும்.
அவர்கள் நன்கு வேதமறிந்து
முழு நம்பிக்கையோடு
பிரம்மம் கைவரப்பெற்று ஏகார்ஷி
என்னும் நெருப்புக்கு வணக்கம் சொல்லி
சிரோவிரதம் என்னும் விரதத்தை
அதர்வண விதிப்படி அனுஷ்டிப்பார்கள்.
விரதத்தை அனுசரிக்காதவர்கள் யாரும் இவைகளைப்படிக்கவேண்டாம். இதுவே உண்மை.
அங்கிரச முனிவர் அந்தக்காலத்திலேயே சவுனகருக்கும் மற்றவர்களுக்கும் இதனைச்சொல்லியிருக்கிறார்.
பெரும் முனிவர்களுக்கு வந்தனம். பெரும் முனிவர்களுக்கு வந்தனம்.
