மண் சட்டி/நாகேந்திர பாரதி


‘சாப்பிட்டியாப்பா ‘
‘உடம்பைப் பாத்துக்கோ ‘
‘தம்பிக்கு இன்னும் கொஞ்சம் ரூபாய் அனுப்பு’
‘தங்கச்சியைக் கவனிச்சுக்கோ ‘

இனிமேல் அந்த வார்த்தைகளைக் கேட்க முடியாது . அம்மாவின் உதடுகள் மூடிக் கிடந்தன . அந்த முகத்தில் மயான அமைதி . அது ஒரு மின் மயானம் .

போர்த்தப்பட்டிருந்த புதுப் புடவைகளும் , பூ மாலைகளும் எடுக்கப்பட்டு ஒரே சேலையோடு சுற்றப்பட்ட உடலோடு ,அந்த வண்டி மின் மயான மேடை நோக்கி நகர ஆராம்பித்தது . கூடவே சென்றான் அவன் . சுற்றிலும் அழுகைக் குரல் . அது வரை அடக்கி வைத்திருந்த அவன் கண்ணீரும் மடை திறந்தது . பிள்ளைப்பிராய நினைவுகள் ஒவ்வொன்றாய் மனதில் ஓட ஓடக் கண்ணீர் பெருகியது .

முதல் நாள் இரவு வீடியோ காலில் அம்மாவிடம் பேசியபோது , அவர் கண்களில் கசிந்த ஈரம் . வாயின் அசைவு . இரண்டு நாட்களாகப் பேச்சோ அசைவோ இன்றிக் கிடந்த உடலில் ஏற்பட்ட அசைவுகள் .

இறந்து போன அப்பா பெயர் , தாத்தா பெயர் , அம்மாச்சி பெயர் , குலதெய்வம் பெயர் , உள்ளூர் கிராம அம்மன் பெயர் . அவன் சொல்லச் சொல்ல அம்மா மனதில் கிளம்பிய நினைவலைகள் .

பிறந்தது , வளர்ந்தது , விளையாடியது , மணந்தது , பிள்ளைகள் பெற்றது , வளர்த்தது , எத்தனை ஊர்கள் , எத்தனை கோயில்கள் , கஷ்டங்கள் , நஷ்டங்கள் , சோகம் , மகிழ்ச்சி , . எழுப்ப்பிவிட்ட நினைவலைகள் தான் கண்ணோரக் கசிவா .

நடு நடுவே அவள் புலம்பிக் கொண்டிருந்த வார்த்தைகளும் சேர்ந்தது .

‘எத்தனை மாதங்கள் , ஆஸ்பத்திரியில் ஊசி , மருந்து , மாத்திரை , சத்து நீர் , ரத்தம் ஏற்றி , வலி , வலி , உடம்பே புண்ணாகி , எத்தனை கஷ்டம் , எனக்கும் , சொந்தங்களுக்கும் . போய்ச் சேரவேண்டும் ‘

புலம்பிக் கொண்டிருந்த உள் மனதிற்கு இதமாக வந்து விழுந்தன , அவன் சொன்ன கணவன் பெயர் அப்பா , அம்மா பெயர் , அம்மன் பெயரோடு சேர்ந்து வந்த உள்ளூர்க் கோபுரத் தோற்றம் . சேர்ந்து விளையாடிய சீதா , அதோ அவள் அழைக்கிறாள் . வலி குறைகிறது . நிம்மதி அமைதி .

வந்தது சேதி இரவு .
‘உங்க குரலைக் கேட்கத்தான் இழுத்துக்கிட்டு இருந்த உசிரு அடங்கிப் போச்சு ‘

இதோ அந்த உடல் மின்சார மேடையை நெருங்க , அம்மாவின் கன்னங்களைத் தடவிக் கொடுக்கிறான் . சில்லிப்பு கைகளில் . குனிந்து நெற்றியில் முத்தமிடுகிறான் . ‘பை . ம்மா ‘ .

.அவனை விலக்கி விட்டு அம்மாவின் உடலைத் தூக்கி மேடையோடு ஒட்டிய உருளைத் தகட்டில் வைத்துத் தள்ள , உள்ளே வேகமாக நுழைந்த அந்த உடல் ஒரு இடத்தில் கீழே தணிய குப்பென்று கிளம்பிய சிவப்பு ஜ்வாலையை மறைத்து இறங்கியது ஷட்டர் தகடு ஒன்று .

அரை மணி நேரத்தில் கிடைத்த துணி சுற்றிய மண்சட்டியின் ஓரத்தில் ஒரு சீட்டில் பெயர் ’ மங்கள ராதா ‘ . அந்த மண் சட்டி சுட்டது .

————