ஓவியர் மாருதி மறைவு குறித்து கே.என்.சிவராமன்

ஓவியர்… பிதாமகர்… என்பதை எல்லாம் கடந்து மாருதி அய்யாவின் பாதங்களை அவரைக் காணும்போதெல்லாம் தொட்டு வணங்குவேன்.

ஒரே காரணம்தான். அது காதல்.

இரு மகள்களையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தவர் சென்னையில் தன் மனைவியுடன் தனியாகத்தான் வசித்தார்.

உடல்நலம் குன்றி படுத்தப் படுக்கையாக இருந்த தன் மனைவியை கண்ணும் கருத்துமாக அப்படி கவனித்து கொண்டார். இத்தனைக்கும் இக்காலங்களில் அவர் 80 வயதைக் கடந்திருந்தார். ஆனாலும் தங்கள் இருவருக்கும் சமைப்பது முதல் மனைவிக்கு பணிவிடை செய்வது வரை சகலத்தையும் தன் கரங்களால் செய்தார். வேறு யாரையும் செய்ய அனுமதிக்கவில்லை. செவிலியரையும் நியமிக்கவில்லை.

முழுமையாக மனைவியை கவனித்த பிறகே ஓவியம் தீட்டினார்.

‘எனக்கு முன்னாடி இவ போயிடணும்…’ என வாய்விட்டு சொன்னதில்லை; மனதில் நினைத்திருக்கலாம்.

அதற்கேற்ப நிறைவுடன் காலமான மனைவியை நிறைவாகவே வழியனுப்பி வைத்தார்… இதோ இப்பொழுது அரூபமான மனைவியை காண அரூபமாகிவிட்டார்.

இறக்கங்களையும் ஏற்றங்களையும் வாழ்நாள் முழுக்க சந்தித்தவர், எக்கணமும் எவர் குறித்தும் புகார் அளித்ததில்லை

இறுதி மூச்சு வரை ஓவியம் வரைந்து கொண்டே இருந்த –

கடைசி வரை கையால் வரைந்த –

மாருதியின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்; நமஸ்கரிக்கிறேன்.