தீர்ப்பு/அழகியசிங்கர்

                                                          



மகாதேவனுக்கும் சரஸ்வதிக்கும் ஏறத்தாழ 20 வயசு வித்தியாசம். அவனுக்கு 40.  அவளுக்கு 22.  சரஸ்வதி எட்டாவது பெண்.  குருக்கள் வீட்டுப் பெண்.  ஏழை.  மாயவரத்திலிருந்து மறையூர் போகத் தெரியுமா? அங்குதான் அவள் அப்பா சிவன் கோயில் குருக்கள்.   ஊரார் தயவில் கோயில் சாத்தப்படாமல் இருக்கிறது.  உண்மையில் மகாதேவனுக்குக் கல்யாணம் ஆவதற்கு வாய்ப்பில்லை.  வயது 40 வரை போய்விட்டது.  எதாவது பெண் கிடைத்தால் போதும் என்று காய்ந்து கொண்டிருந்தான்.  அவனிடம் சரஸ்வதி மாட்டிக்கொண்டாள்.  முதலில் வயதானவன்.  வேண்டாம் என்று சொல்ல நினைத்தாள்.  அப்படிச் சொல்ல முடியவில்லை.  வறுமை. அப்பா எரித்துவிடுவதுபோல் பார்த்த பார்வை.  குருக்களின் திட்டம் ஒரு செலவு செய்யாமல் திருமணம் செய்துவிடலாமென்பது.  காரணம் மகாதேவன் எல்லாச் செலவையும் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னது.  மேலும் அவன் நல்ல வேலையிலிருந்தான்.  சஃப்ட்வேர் இன்ஜினியர்.
சரஸ்வதி மறையூர் என்ற கிராமத்தை விட்டு சென்னைக்கு வந்து விட்டாள்.  மகாதேவனுடன்.  சென்னையே புதிது.  எல்லாம் வியப்பாக இருந்தது.  அண்ணாநகரில் உள்ள பெரிய அடுக்ககம்.  எல்லா வசதிகளும் உள்ள அடுக்ககம்.  பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.  
முதலில் மகாதேவன் அவளைப் பல இடங்களுக்கு அழைத்துக் கொண்டு போவான்.  ஆனால் தெருவில் நடந்தால் அவளுடன் சேர்ந்து நடந்து வர மாட்டான்.  தள்ளித் தள்ளி நடந்து வருவான்.  அவன் செய்கை அவளுக்கு விசித்திரமாகப் பட்டது.  எதாவது டிரெயினில் பஸ்ஸில் அவளுடன் போகும்போது எல்லோரும் சரஸ்வதியை முறைத்துப் பார்த்தபடி வருவார்கள்.  மகாதேவனுக்கு அது கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. 

அவர்கள் எல்லோரும் பார்ப்பது அவளுடைய இளமையைத்தான். மகாதேவன் தான் இந்த வயதில் திருமணம் செய்துகொண்டதே தப்போ என்று நினைக்கத் தொடங்கி விட்டான். மனைவி என்றாலும் அவள் தனக்கு உரிமையானவள் என்று நினைக்கத் தோன்றவில்லை. அவன் அலுவலகத்தில் இருக்கும்போது சரஸ்வதியை வீட்டில் தனியாக விட்டு விட்டு வந்திருகிறேமே என்ன செய்து கொண்டிருப்பாள் என்ற தாறுமாறாக யோசித்துக்கொண்டிருப்பான்.
அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு வந்தவுடன் “என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்று கேட்காமல் இருக்க மாட்டான். அவன் சாதாரணமாகத்தான் கேட்கிறான் என்ற அவள் பதில் சொல்லாமல் இருக்க மாட்டாள்.
ஒருமுறை அவள் கிராமத்திற்குப் போகும்படியாக நேர்ந்தது. அவள் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று. அவள் போன அன்று வீடு வெறிச்சென்றிருந்தது. மகாதேவனுக்கு ஒன்றும் ஓடவில்லை.
தனிமையில் சரஸ்வதி என்ன செய்து கொண்டிருப்பாள் என்று விபரீதமாக யோசித்துக்கொண்டிருப்பான்.
சரஸ்வதியைக் கண்காணிக்க நினைத்தான். வீடு முழுவதும் 22 நுண்ணிய கேமராக்களைப் பொருத்துவது என்று யோசிக்கத் தொடங்கினாள். இதுதான் சந்தர்ப்பம் சரஸ்வதி ஊருக்குப் போயிருக்கிறாள் என்று அவனுக்குத் தோன்றியது. மென்பொறியாளராகப் பணியாற்றியதால் தானாகவே காமெராக்களைப் பொருத்த முடியும் என்று அவனுக்குத் தோன்றியது.
சமையல் அறை, படுக்கையறை, வராண்டா, ஹால், பூஜை அறை, குளியலறை, கழிப்பறை என, வீடு முழுவதும் 22 நுண்ணிய கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தினான்.
அந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை, மொபைல்போனில் பார்க்கும் வகையில் இணைத்துக் கொண்டான். இதனால் அலுவலகத்திலிருந்தபடியே தன் வீட்டிற்கு யார் யாரெல்லாம் வருகிறார்கள் என்பதை அறிந்து விடலாம்.
ஊரிலிருந்து சரஸ்வதி வந்து விட்டாள். அவளுக்கு அம்மா ஞாபகமாய் இருந்தது. சுரத்தாக இல்லை. மகாதேவன் சமாதானம் செய்தான்.
“இங்க தானே இருக்கிறது. கிராமத்துக்கு எப்போது வேண்டுமானாலும் போய்விடலாம்,” என்று சமாதானப் படுத்தினான்.
ஆனாலும் மகாதேவன் அவளுடன் பேசும்போது இவ்வளவு அழகான பெண்ணை நாம் ஏமாற்றுகிறோமோ என்று தோன்றியது. அவளுடைய இளமை குறுகுறுப்பான பார்வை அவனுக்குப் பிடித்திருந்தது. அவன் ஒரு முறை கேட்டான். தயங்கித் தயங்கித்தான். “தாம்பத்திய வாழ்க்கை உனக்குத் திருப்தியாக இருக்கிறதா?” என்று.
அவள் அதைப்பற்றி பதில் சொல்லவில்லை. அவனுக்குப் பெரிய ஏமாற்றம். தொடர்ந்து இதைப் பற்றிப் பேச விருப்பமில்லை. திருப்பதியாக இல்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? அவளுடன் படுத்துக்கொள்ளும்போது அவன் எதையோ நினைத்துத் தூங்கிவிடுகிறான். பாவம் அவன் என்று அவள் நினைத்துக்கொள்வாள்.

இதன் காரணமாகத்தான் அவனுக்கு அவள் மீது சந்தேகம் வந்து விடுகிறது. காமெராக்களை பொருத்தியது இதற்குத்தான். தான் இல்லாதபோது சரஸ்வதி என்ன செய்துகொண்டிருப்பாள் என்று அறிந்துகொள்ள ஆவலாக இருப்பான்.
சில தினங்களாக அவன் கண்காணிக்கும்போது அவள் பெரும்பாலும் டிவியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். நன்றாகத் தூங்குகிறாள். அக்கம் பக்கத்தில் அவள் பேசுவது கொஞ்சம்தான். தனிமையில் இருக்கும்போது அவள் குளிக்கச் செல்லும்போது அவள் உடைகளை ஒவ்வொன்றாகக் கழட்டிப் போட்டுவிட்டு சிறிது நேரம் முழு நிர்வாணத்துடன் இருப்பதைப் பார்த்து அவன் பதட்டமாகி விடுகிறான்.
சரஸ்வதிக்குப் பிறந்தநாள். உயர் வகை மொபைல் போன் வாங்கிக் கொடுக்கலாமென்று நினைக்கிறான் மகாதேவன். அதில் நவீனத் தொழில்நுட்ப செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்து, சரஸ்வதியிடம் கொடுத்தான்.
“அதிக விலை கொடுத்து இதை வாங்க வேண்டுமா?” என்று சரஸ்வதி கேட்காமலில்லை. அவளுக்கு அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது கூடத் தெரியாது. அவன் சொல்லிக் கொடுத்தான். ஆனால் அந்தப் போனில் வரும் குறுந்தகவல் அவனுக்குத் தெரிந்துவிடும். அவளை யாரெல்லாம் தொடர்பு கொள்கிறார்கள் என்று. இந்த விஷயம் அவளுக்குத் தெரியாது.
அவனுடைய சந்தேகப்புத்தி அவளுக்குத் தெரியவே இல்லை. ஒரு வெள்ளிக்கிழமை. எப்போதும் போல் அவன் அலுவலகத்திற்குக் கிளம்பிப் போனான். அன்று வேலை அதிகம். வீட்டிற்குச் சோர்வாக வந்தான் மகாதேவன். எப்போதும் தூங்கப் போகும்போது மனைவிக்குத் தெரியாமல் கண்காணிப்பு காமெராவை சோதித்துப் பார்ப்பான். அன்று அவள் ஒரு இளைஞனுடன் பேசிக்கொண்டிருந்தாள். மகாதேவன் பரபரப்பாகி விட்டான். அவனுடன் கள்ளத் தொடர்பா என்ற சந்தேகம் வந்து விட்டது. அவள் மீது ஆத்திரம் வந்தது. ஆனால் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். அவளை இந்த இரவு நேரத்தில் எழுப்பி தொந்தரவு செய்ய வேண்டாமென்று தோன்றியது.
காலையில் முதல் வேலையாக, “யாரது?ýü என்று கேட்டான். அவளுக்குப் புரியவில்லை.
“நேற்று யாரோ உன்னோடு பேசிக்கொண்டிருந்தார்களே?”
“எனக்குப் புரியவில்லை,” என்றாள் அவள்.
அவன் உடனே கண்காணிப்பு காமெராவில் பதிவாகியதைக் காட்டினான். அவள் திகைத்துவிட்டாள்.
“நான் சொல்லவேண்டுமென்று நினைச்சேன். என் தாய்மாமன் மகன் சங்கர் வந்திருந்தான். அவனுக்குச் சென்னையில் எஸ்ஆர்எம் கல்லூரியில் இடம் கிடைச்சிருக்கு,” என்றாள். அவளுக்கு அவனுடைய சந்தேகப் புத்தியை நினைத்துக் கதி கலங்கியது.

அவனுக்கு எப்படித் தெரிந்தது என்று யோசித்துப் பார்த்தாள். பின் வீட்டைச் சோதனை செய்தாள். அவன் எல்லா இடங்களிலும் கண்காணிப்பு காமெராக்கள் வைத்திருப்பதைக் கண்டு பிடித்து விட்டாள். அவன் மீது அவளுக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஒன்றும் செய்யமுடியாமல் தவித்தாள்.
அவன் குளித்துவிட்டு வருவதற்கு பாத் ரூம் சென்றான். அவனுடைய போக்கைக் கண்டிக்க வேண்டுமென்று தோன்றியது. அவன் குளித்துவிட்டு வரட்டும் என்று காத்திருந்தாள். எதற்கும் தற்காப்பிற்கு இருக்கட்டுமென்று கையில் கிரிக்கெட் மட்டையை வைத்திருந்தாள். அவள் மனம் படப்படப்பாக இருந்தது. அவனுடைய செயல் அவளுக்கு அருவெறுப்பை கொடுத்தது. üஎன்னைச் சந்தேகப்படுவதா?ý என்று நினைத்து அவள் மனம் துக்கத்தில் தவித்தது.
இதற்குத்தான் வயதானவளைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று நினைத்தாள். தாம்பத்திய வாழ்வில் அவனுக்கு உச்சக்கட்டம் என்பதில்லை. அதற்குள் அவன் சோர்ந்து விடுவான். அவன் இயலாமையை நினைத்துப் பெருமூச்சு விடுவான். அவன் இயலாமை அவளுக்கு ஏக்கமாய் முடிந்து விடும்.
அவன் சந்தேகப்படுவதைத்தான் அவளால் நம்ப முடியவில்லை. இயலாமை. வயது வித்தியாசம். அதுதான் சந்தேகப்படுகிறான்.
நாக்கைப் பிடுங்குகிற மாதிரி நாலு வார்த்தைக் கேட்கணும். வேற எங்காவது காமெரா வைத்திருக்கிறானா? பளிக்கறையைப் போய்ப் பார்த்தாள். அங்கே வைத்திருக்கிறான். அவளுக்குத் திக்கென்றது. அவள் புடவையை மாற்றிக்கொள்ளும் இடம் அங்குதான். இப்படிப்பட்டவனுடன் எப்படி குடும்பம் நடத்துவது.
அவன் குளித்துவிட்டு வெளியே வந்தான். அவளைப் பார்த்தபடியே கேட்டான். “ஏன் இன்னும் சமையல் பண்ணவில்லையா?”
“இல்லை,” என்றாள்.
“என்ன இல்லையா?”
“ஆமாம். என்னை நீ ஏன் அப்படிச் சந்தேகப்பட்டே?” அவள் ஆத்திரத்தோடு பேசியதை அறிந்தான். பேசாமலிருந்தான்.
“உன்னோட எப்படி குடும்பம் நடத்தறது…இப்படிச் சந்தேகப்பட்டாய் என்றால்…” அவள் ஓங்கி கிரிக்கெட் மட்டையால் அவன் தலையில் அடித்தாள். அவன் மயங்கி விழுந்தான்.

One Comment on “தீர்ப்பு/அழகியசிங்கர்”

Comments are closed.