அறியாப்பிழையா? விதியின் சதியா?/புஷ்பா விஸ்வநாதன்

    வழக்கம்போலவே காலைக் காப்பியைக்கலந்து ஹாலில் நாற்காலியில் அமர்ந்து குடித்துக்  கொண்டிருந்த கௌதம், வாசலில் பேப்பர் பையன் பேப்பர் போடும் குரல் கேட்டு, காலிக்கப்பை அருகில் இருந்த உயர்ந்த ஸ்டூல் மீது வைத்து விட்டு, வாசலுக்குப்போய் பேப்பரை எடுத்துக்கொண்டு வந்து, அதை ஆவலுடன் புரட்டலானார். அவர் முதலில் பார்ப்பது  'ஆபிச்சுவரி ' செய்திகளைத் தான்.  எழுபது வயதைத் தாண்டி, எமனின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் போது நேற்று யமனிடம் மாட்டிக்கொண்டு இப்பூவுலகில் இருந்து விடை பெற்றது யார் என்று பார்ப்பதில் ஒரு ஆர்வம். நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது உண்டா என்று அறிந்து கொள்வதில் ஒரு உந்துதல். 

பேப்பரைப் புரட்டியவர் கண்களில் ஒரு‌ போட்டோ பட்டவுடன் அப்படியே

அதிர்ச்சியில் உறைந்து போனார்‌. லப்டப் சப்தமே‌‌ நின்று விட்டதோ என்று எண்ணுமளவிற்கு
இருந்தது அவர் அதிர்ச்சி நிலை. இது இது…. ரங்கன் தானே?? கண்களை இடுக்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பார்த்தார். ஆம். இது ரங்கனேதான் சந்தேகமேயில்லை. அவன் மகன்தான்
இந்த இரங்கல் செய்தியைக் கொடுத்திருக்க வேண்டும். ரங்கன் இறந்து விட்டானா? என்னை முந்தி விட்டானா? ‌

ரங்கா ரங்கா, என்னை மன்னிப்பாயா?
நான் அறியாமல் செய்த, உன் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட‌ அந்தப்பிழைக்காக என்னை மன்னிப்பாயா? இறந்தவர்கள் கடவுளுக்குச்சமம் என்பதால், நான் இப்போ வாய்விட்டு அலறி உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். என்னை மன்னித்து விடு, நண்பா, மன்னித்து விடு. உயிரோடிருக்கும் வரை உன்னிடமிருந்து மறைத்த, என் உள்ளத்திலேயே பொத்திப் பொத்தி வைத்த உண்மையை இப்போது சொல்கிறேன். கேள். முழுவதும் கேட்ட பிறகு என்னை மன்னிப்பாயா இல்லை தண்டிப்பாயா தெரியாது. தயவு செய்து என்னை வெறுத்து விடாதே. ஆனால் ஒன்று.‌‌ நான் அறியாமல் செய்த பிழையை உணர்ந்த நாளிலிருந்து என்னை நானே தண்டித்துக் கொண்டிருக்கிறேன் என்பதையும் தெரிந்து கொள்.

  பெரிதும் உணர்ச்சி வசப்பட்டவராக, கண்டபடி புலம்பிக் கொண்டே தலைகவிழ்ந்து‌ நாற்காலியில் அமர்ந்து கொண்டு கண்களிலிருந்து பெருக்கெடுக்கும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தார் கௌதம்.

கௌதமும் ரங்கனும் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாளிலேயே நண்பர்களாகி விட்டனர். விடுதியிலும் ஒரே அறையில் தங்கியதால் இருவருக்குள்ளும் நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து இறுகியது. மூன்றாம் வருடத்தில்தான் ரங்கன் தன் ஆருயிர்த்தோழன் கௌதமிடம் தன் காதலைத் தெரிவித்தான்.

இரவு உணவுக்குப் பின் நண்பர்களிருவரும் விடுதிக்கு அருகிலிருக்கும் ஒரு பார்க்கில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, ரங்கன் ஏதோ யோசனையாய் மௌனமாய் இருந்தவன் சட்டென்று கௌதமைக் கேட்டான்,”லலிதாவைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய், கௌதம்?”

“அவள் ரொம்ப நல்ல பெண். சுறுசுறுப்பானவள். சூடிகையானவள். நமக்கு நல்ல தோழி. எதற்குக் கேட்கிறாய்?”

” அவளை நான் நேசிக்கிறேன். அவளைத் திருமணம் செய்து கொண்டால் என் வாழ்க்கை இனிக்கும் என்று நினைக்கிறேன். “

“சரிடா, உன்‌ விருப்பம் அது.‌ அவளுக்கும்‌ இது சம்மதமா? ‌அவளும் உன்னை விரும்புகிறாளா?”

“என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லையடா. அவளைக் கேட்கவும் அவளிடம் என் காதலைச் சொல்லவும் கூடத் தயக்கமாக இருக்கிறது. எப்படிச் சொல்வது, என்ன செய்வது? யோசித்து யோசித்து குழம்பிக் குழம்பி மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.”

” டேய், இப்படியே யோசித்தே நாட்களைக் கடத்தி விடாதே. சொல்லாத காதலும், சொல்ல மறந்த காதலும், சொல்லத் தெரியாத காதலும் தான் இங்கு அதிகம். நிராகரிக்கப்பட்ட காதலை விட‌ச் சொல்லப்படாத காதல்தான் அதிக வேதனை தரும்.‌ ஏன் வாழ்நாள் முழுதும் துன்பம் தரும். கூடிய சீக்கிரமே இறுதியாண்டு பரீக்ஷைகள் வந்து விடும்.‌ அதற்குப்பிறகு நாமெல்லோரும் பிரிந்து விட வேண்டியதுதான்.‌ அதற்குள் நீ உன்
காதலைச் சொல்லி அவள் சம்மதம் வாங்கி விடு. இனியும்‌ தாமதிக்காதே”.

‌ ஐம்பது வருடங்களுக்கு முந்தைய காதல்‌ அப்படித்தான். தயக்கம், பயம், சந்தேகம்தான். காதலியுடன் பேசவும் தயக்கம், காதலைச் சொல்லவும் தயக்கம். தினமும் காலையில் ரங்கன் கௌதமிடம் கூறுவான், ” இன்று கட்டாயம் லலிதாவிடம் என் காதலைச் சொல்லி விடுவேன்” என்று. ஆனால் அந்த “இன்று” வராமலேயே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

இறுதியில் அந்த “இன்று” ‌ வந்தது கடித ரூபத்தில். ‌ஆம். இறுதியாண்டுப் பரீட்சைக்கு சில நாட்கள் முன் ரங்கன் கௌதமிடம் ஒரு கடிதத்தை நீட்டினான். ” எவ்வளவு முயன்றும் என்னால் அவளிடம் நேரில் சொல்ல முடியவில்லை. எனவே‌, என் ‌காதலைத் தெரிவித்தும் அவள் சம்மதம் கேட்டும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். அதைத் தயவுசெய்து அவளிடம் சேர்ப்பித்து விடு. அவள்‌ என்ன‌ பதில் தருகிறாள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
நான் இன்று பக்கத்து கிராமத்திலிருக்கும்‌ என் அத்தை வீட்டிற்குச் செல்கிறேன். திரும்பி வர இரண்டு மூன்று நாட்களாகும்.”.

” அப்பாடா! இப்பவாவது இந்த அளவுக்காவது உனக்குத் தைரியம் வந்ததே. அது வரைக்கும் சந்தோஷம்.
நாளைக்காலை பத்து மணிக்கு எங்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் ஒன்று இருக்கிறது. அப்பொழுதே லலிதாவைச்சந்தித்து அவளிடம் உன் காதல் கடிதத்தைக் கொடுத்து விடுகிறேன். நீ திரும்பி வருவதற்குள் ஒரு சந்தோஷமான செய்தி உனக்காகக் காத்திருக்கும். கவலையேபடாமல் ஒழுஙகாகப்படி. அத்தையைக் கேட்டதாகச் சொல்””.

 விதி‌ஒரு மூலையில் நின்று கொண்டு இருவரையும் பார்த்துச்சிரிப்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை‌.  

மறுநாள் காலை, வகுப்பு கேன்ஸல் என்றவுடன், மாலை நான்கு மணிக்கு லைப்ரரியில் லலிதாவைச்சந்திக்க ஏற்பாடு செய்தான் கௌதம். விடுதி அறையில் படித்துக்கொண்டிருந்தவன், மதிய உணவுக்குப்பின் லைப்ரரிக்குப்புறப்பட்டான். அங்கேயே சிறிது நேரம் படித்து விட்டு, அப்புறம் மாலை லலிதாவையும் சந்தித்து, கடிதத்தை அவளிடம் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம்.

ரூம் கதவைப் பூட்டிக் கொண்டிருந்த போது, பியூன், பிரின்சிபால் அழைப்பதாகக் கூறவே, அவர் ரூமுக்கு விரைந்தான் கௌதம். அங்கு பிரின்சிபால் ” அம்மா சீரியஸ். ஸ்டார்ட் இம்மீடியட்லி” என்ற வாசகம் கொண்ட தந்தியைக்காட்டினார். “ஐயோ‌‌ அம்மா…….” என்று கத்திக்கொண்டே கீழே சாய்ந்த கௌதமைத் தாங்கிப்பிடித்த பிரின்சிபால், பியூனிடம் கௌதமை பத்திரமாக ஊருக்கு பஸ் ஏற்றி விடச்சொல்லிப்பணித்தார். லைப்ரரிக்குப் போய்ப் படிப்பதற்காகத் தான் கொண்டு வந்திருந்த புத்தகங்களை அப்படியே ரூமில் தன் கப்போர்டில் அள்ளிப் போட்டுவிட்டு, இரண்டொரு துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு பியூனின் உதவியுடன் பஸ் ஏறிய கௌதம், எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்பதே அவனுக்குத் தெரியவில்லை.

ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் அம்மாவுடனேயே இருந்தான். சிகிச்சை பலனின்றி அம்மா இறந்தவுடன் ஈமச்சடங்குகளுக்காக வீட்டிலேயே தங்க வேண்டியிருந்தது.
அதனால் அவனால் தேர்வு எழுத முடியாமற் போய்விட்டது. எதிர்பாராத அதீத துக்கத்தாலும், இழப்பாலும், சோகத்தாலும் உன்மத்தன் போலாகிவிட்ட அவனால் தேர்வு எழுத முடிந்திருக்குமா என்பதே சந்தேகம் தான். அடுத்த முறைதான் தேர்வு எழுத முடியும் என்பதால் வீட்டிலேயே தங்கிவிட்டான்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ரங்கனின் திருமணப்பத்திரிகை வந்தது. கௌதமுக்கு அதிர்ச்சிதான் . பத்திரிகையின் கூடவே ரங்கனின் கடிதமும் இருந்தது. “கடைசி நாள் வரை லலிதாவிடமிருந்து எந்த பதிலும், ஏன்‌ எந்த சமிக்ஞையும் கூட வராததால், நான் என் மாமா பெண்ணையே மணந்து கொள்கிறேன் என் அம்மாவைத் திருப்திப்படுத்த” என்று எழுதியிருந்தான் ரங்கன்.

சுரீரென்று சாட்டையால் அடிபட்டது போல் துடித்துப்போனான் கௌதம். அந்தக் கடிதம்….. ரங்கன் கொடுத்த காதல் கடிதம்… என்னவாயிற்று? ‌சிரமப்பட்டு யோசித்துப் பார்த்ததில் அந்தக் கடிதத்தை லலிதாவிடம் சேர்ப்பிக்கவேயில்லை என்பது உறைத்தது. அது மட்டுமா? அதைப்பற்றிய சிந்தனையே இதுநாள் வரை எழவில்லையே. என்னையே மறக்கடித்த சோகத்தில் ழூழ்கிவிட்டேனே என்றெல்லாம் புலம்பலானான். என்ன புலம்பி என்ன? என்ன அழுது என்ன? ‌நடந்ததை யாரால் மாற்ற முடியும்? வேதனையை மனதுக்குள் புதைத்துக் கொண்டான். திருமணத்திற்கு அவனால் போகமுடியவில்லை. ரங்கனின் முகத்தைப்பார்க்கும் தைரியம் கிஞ்சித்தும் அவனிடம் இல்லை. மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுதிக்குத் திரும்பிய அவனைப்பார்த்துச் சிரித்தது ரங்கன் அன்று கொடுத்த கடிதம்.

 மறுநாள் லலிதாவை எதேச்சையாக லைப்ரரியில் பார்த்தபோது கௌதம் ஆச்சர்யத்தின் எல்லைக்கே சென்று விட்டான்.  " கௌதம் நான் இங்கேயே ஹாஸ்டலில் தங்கி மேலே படிக்கப்போகிறேன்.  வீட்டில் இருந்தால் என்‌ அம்மா என்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள்.    என்னால் ரங்கனைத்தவிர வேறு யாரோடும் வாழமுடியாது‌ என்பது எனக்கு நன்கு புரிந்து விட்டது.  ரங்கனை நான் உயிருக்குயிராய்க் காதலிக்கிறேன்.  அவனுக்கும் என்னைப் பிடிக்கும் என்று தான் நினைத்திருந்தேன்.  ஆனால் அது தப்புக்கணக்கு என்பது அவன் திருமணச் செய்தியைக் கேட்ட போது எனக்குப் புரிந்து விட்டது.  இனி இதுதான் என் வாழ்க்கை."

அடிமேல் அடி. தாங்க முடியாமல் தவித்துப் போனான் கௌதம். உண்மை அவனுக்கு மட்டும் தானே தெரியும்! சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவன் அனுபவித்த துன்பம் நினைத்துப் பார்க்கக்கூட முடியாதது.

ஆழ்கடல் போல் ஆர்ப்பரிக்கும் மனதை அடக்க முடியாமல் துடித்தான். அறியாமல், சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்த பிழையென்றாலும் இருவரின் காதலை அழித்து, இருவரின் வாழ்க்கையையும் நொறுக்கி விட்டதே என்று எண்ணி எண்ணி மறுகிப்போனான். அந்த சிந்தனையிலேயே மூழ்கி, வேறெதிலும் நாட்டமின்றி ஒரு‌ பற்றற்ற சந்நியாசி போல் வாழத்தலைப்பட்டான் .

‌‌. வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், தன் ஊரிலேயே, ஒரு சின்ன வீட்டில், தனிமைச்சிறையில் வாடினார் கௌதம். இதுவே தனக்கு அளித்துக் கொள்ளும் சுயதண்டனை என்று தீர்மானித்துக்கொண்டார். ஆனாலும் எழுபது வயதுக்கு மேல் தனியாகச்சமாளிப்பது கஷ்டமாக இருக்கிறது: பயமாகவும் இருக்கிறது.

பத்து நாட்களுக்கு முன், அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றிருந்தார் கௌதம். அங்கு கால்தடுக்கிக் கீழே விழுந்தார். அருகில் இருந்த இளைஞன் அவரைத்தூக்கி, கைத்தாங்கலாக அவரை வீட்டில் கொண்டு விட்டபோது அவர் நிலைமையைப் புரிந்து கொண்டு சொன்னான், “சார். வயதான காலத்தில் இப்படித் தனியாக‌
இருப்பது நல்லதல்ல. நான் இந்த ஊரில் ஒரு முதியோர் இல்லம் நடத்திக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு ஆக்ஷேபணை இல்லையென்றால் அங்கு வந்து தங்கலாமே?”

யோசித்து யோசித்து இதுவே சரியென்ற முடிவுக்கு வந்த கௌதம் அந்த இளைஞன் பரிதியை நேற்று அழைத்து , “இன்னும் மூன்று நாட்களில் ஒரு நல்ல நாள்
வருவதால் அன்றே இல்லத்தில் சேர்ந்து விடுகிறேன் ” என்று கூறினார். அத்தியாவசிய உடைமைகளை சேகரித்துக் கொண்டிருந்தார் தன்னுடன் எடுத்துச்செல்வதற்காக.

ஆனால், இன்று காலை பேப்பரில் ரங்கனின் மறைவுச்செய்தியைக் கண்டவுடன் பழைய‌ நினைவுகளில் ழூழ்கிப்போன கௌதம் தன்னையறியாமலேயே அழுது அரற்றினார். பொங்கிப் பொங்கி வரும் துக்கத்தை அவரால் அடக்க முடியவில்லை. சாப்பிடவும் பிடிக்கவில்லை. இரவு உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது , நல்ல நாளுக்காகக் காத்திருக்க வேண்டாம். தனிமையில் இன்னும் அவஸ்தைப்படவேண்டாம். நாளையே இல்லத்திற்குப் போய் விடலாம். நாளை விடிந்ததும் கிளம்பி விடலாம்”
என்று தீர்மானித்தார்‌.

ஆனால் அவருக்குத்தான் அன்றிரவு விடியவேயில்லை.

One Comment on “அறியாப்பிழையா? விதியின் சதியா?/புஷ்பா விஸ்வநாதன்”

Comments are closed.