
மௌனியின் தந்தை பெயர் சாமா.இளமையில் மெளனி, காவேரியில் நிறைய நீந்தி இருக்கிறார். காலேஜ் காலத்திலிருந்து பல வருஷங்களாகவே, மைல் மணி என்று தெரிய வருமளவுக்கு, மைல் ஓட்டப் பந்தயங்களில் முதலாவதாக வந்திருக்கிறார். ஒரு தடவை, அந்த காலத்திய நல்ல பேனாவான ‘வாட்டர் மன்ஸ்’இரண்டாம் பரிசாகக் கிடைக்கும் என்று கண்டு, இரண்டாவதாக வந்து அதைப் பெறுவதற்காக மைல் ஓட்டத்தில் கலந்து கொண்ட மெளனி,இறுதி உக்ர வேகத்தில் முதலாவதாக வந்துவிட்டார்.’கப்’தான் கிடைத்தது.இதில் தனக்குப் பெருத்த ‘ஏமாற்றம்’
ஏற்பட்டதைப் பற்றி சுவாரஸ்யப் படுவார் மெளனி.
கூர்மையான பிரக்ஞை உணர்வும் உந்நத மனவெழுச்சிகளும் வாய்க்கப்பெற்றிருந்த மௌனி, இவற்றின் மனிதார்த்த பரிணாமங்களுக்கு அவசியமான தாயன்பை இளமையில் இழந்தமை ஒரு துரதிஷ்டம்தான். இதன் விளைவாக, இந்தியப் புரட்சியின் மனிதாய அடிப்படைகளைப் பிரதிபலித்த எவரையும் அவரால் கௌரவிக்க முடியவில்லை.
ஞாயிறு மலர் ஒன்றில் பிச்சமூர்த்தி ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.”தாடி வளர்ப்பது ஏன்?’ என்பது தலைப்பு.அப்போது மௌனியைக் கண்ட பிச்சை மூர்த்தி, கட்டுரையைக் குறிப்பிட்டு, ‘படிச்சயா?’ என்று கேட்டிருக்கிறார். மௌனி, ‘பார்த்தேன் படிக்கலே,’ என்றார். இதில் ஒரு சுழி இருப்பதை உணர்ந்து,’ஏன்?என்று கேட்டார் மூத்தவர். மௌனியின் பதில்:’தாடி வளர்ப்பது ஏன்னு கேட்டு எழுதியிருக்கேள். தாடி வளர்வது ஏன்னு இருந்திருந்தா
படிச்சிருப்பேன்.தாடி வளர்ப்பது என்பது ஒரு சின்னத்தைப் பேணுவது. ஆனால் தனது தோற்றத்தில் அக்கறை இல்லாமையால் வேறு ஒருவனுக்கு தாடி தானாக வளர்கிறது.இந்த வித்யாசத்தைத் தான் மெளனி அர்த்தப்படுத்தினார் என்பதுடன்,பிச்சமூர்த்தியும் புரிந்து கொண்டு
சிரித்திருக்கிறார். மௌனியை இலக்கியத்தினுள் இழுத்தவர் பி.எஸ்.ராமைய்யா என்றே சொல்லலாம். ஆனால் இதற்கு முன்பிருந்தே தமக்குப் பளீரெனத் தோன்றுகிறவற்றை ஒரு பெரிய நோட்புக்கில் எழுதி வைத்திருக்கிறார் மௌனி. இது, அவருக்கு இறுதிவரை இருந்த பழக்கம். மௌனியின் பேச்சில் உள்ள சூஷ்மத்தன்மையைக் கண்ட ராமையா, ‘நீங்கள் ஏன் கதைகள் எழுதக்கூடாது?’ என்று கேட்டிருக்கிறார். மௌனிக்கு உடனே ஏதும் தோன்றவில்லை. ஆனால் சற்று காலம் கழித்து, தமது நோட்புக்கை வைத்துக்கொண்டு, ஒரு வேகத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஒரு சில மாதங்களினுள் எழுதிவிட்டார் மௌனி. அவர் பிடில் நன்றாக வாசிப்பார்.ஒரு கனமான முதிர்ந்த பெரும் துக்கத்தின் பாவமாக இந்த வாசிப்பும் இருக்கும்.இதை வாசித்ததும், இருப்புக் கொள்ளாதவர் மாதிரி மெளனி பிடிலை வைத்து விடுவார்.
காலத்துக்கு ஏற்ற மாதிரி ‘வளைந்து’ கொடுப்பதை அவர் வெறுத்தவர்.
மெளனி படித்தது எம்.ஏ.வரை.
மணிக்கொடியில் அவரது அற்புதமான சிறுகதைகள் தொடர்ந்து வந்திருந்த சமயம்அது.மெளனி,ஒரு
கடையில் வெற்றிலை பாக்கு வாங்கச் சென்றார். பத்திரிகைகள் தொங்கிக் கொண்டிருந்தன. ‘விகடன்! இந்த வாரத்தாப்பா இது?’ என்று ஒரு பேச்சுக்குக் கேட்டுருக்கிறார்.’நீங்க மணிக்கொடி படிங்க ஸார். அதிலே மௌனின்னு ஒருவர் என்ன அற்புதமா எழுதறார் தெரியுமா?’ என்றான். மெளனிக்கு உடல் புல்லரிப்பு ஏற்பட்டதாம். ‘தாங்க முடியாமல், வெற்றிலையை அவசர அவசரமாய் வாங்கிக் கொண்டு ஓடி வந்து விட்டேன்,’ என்றார் மெளனி.இறுதிவரை அந்த சாமான்யமான ஒரு வெற்றிலை பாக்குக் கடைக்காரன் அளித்த புகழுரைதான் மிக உயர்ந்த பொக்கிஷமாக அவருக்கு இருந்திருக்கிறது.
