
சுமதி திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்.அப்பா முனுசாமி இறந்து போன சுமதியின் அம்மா சுசீலா இடத்திலிருந்து தன் பெண்ணின் திருமணத்தை சிறப்பாக குறையின்றி நடத்தி விட நினைக்கிறார்.இவருக்கு ராமு என்கிற மகனும் உண்டு.சுமதிக்கு திருமணம் தள்ளிப்போக காரணம் அவளுக்கிருக்கும் செவ்வாய் தோஷம் இதற்கு வைத்தீஸ்வரன் கோவில் சென்று நாடி ஜோசியம் பார்த்து அதில் சொல்லப்படும் பரிகாரத்தைச் செய்தால் திருமணம் நடக்கும் என்று தரகர் சுந்தரமூர்த்தி கூறுகிறார்.

இச்செய்தியை உள்ளூர் ஜோசியரும் முனுசாமியின் நலன் விரும்பியுமான செல்வக்குமாரிடம் கூறுகிறார் முனுசாமி. வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் விட்டு வருமாறு அவரும் கூற மனைவியின் இறப்புக்குப் பிறகு இறைநம்பிக்கையற்றிருக்கும் முனுசாமி தன்மகளுக்கு நல்லது நடக்கவேண்டி வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் செல்கிறார்..அங்கு கூறப்படும் நாடி ஜோஸ்யத்தில் இவரின் மூதாதையர்கள் ஒருகர்ப்பிணிப் பெண்ணுக்குச் செய்த பாவமும் அதனால் அப்பெண்ணிட்ட சாபமும் சுமதியின் திருமணத்திற்கு தடையாக இருப்பதால் சுமதிக்குத் திருமணமே ஆயுள் முழுதும் ஆகாது என்று கூறுகிறார்.
மிகுந்த வருத்தத்துடன் இதை அப்படியே செல்வக்குமாரிடம் வந்து கூறும் முனுசாமி தான் யார் குடியையும் கெடுத்ததில்லை என்றும் கூறுகிறார்.யார்யாருக்கோ நல்லது நடக்க நினைக்கறப்போ உன் பெண்ணுக்கு நல்லது நடக்க நினைக்க மாட்டேனா?சுமதிக்கு திருமணம் தடைபடக் காரணமா இருக்கற ஜாதகத்தை மாற்றி எழுதித் தருகிறேன்.அதை வைத்து மாப்பிள்ளை பார் என்று கூறி ஜாதகத்தை மாற்றியும் எழுதித் தருகிறார் செல்வக்குமார்.
சுமதியைப் பெண் பார்க்க வருகின்றனர்.மாப்பிள்ளை அரவிந்த சாமியைப் போல இருக்கின்றார்.இருபக்கமும் திருப்தியாகிறது..பாக்கு வெற்றிலை மாற்றிக்கொண்டு மாப்பிள்ளை வீட்டார் புறப்பட்டுச் செல்கின்றனர்.போகிற வழியில் டீ குடிக்க மாப்பிள்ளை வீட்டார் இறங்குகின்றனர்.அங்கு தரகர் சுந்தரமூர்த்தி வருகிறார்.அவருக்கு மாப்பிள்ளையின் அப்பா சிறு வயது முதலே பழக்கம் அந்தப் பழக்கத்தில் அவர் எங்கே இந்தப் பக்கம் என்று வினவ மாப்பிள்ளையின் அப்பாவும் தன் பிள்ளைக்கு பெண் முடித்த விஷயத்தைக் கூறுகிறார். யார் என்ன என்ற விசாரிப்பில் சுமதிதான் மணப்பெண் என அறியும் தரகர் மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷமா என்று கேட்கிறார்.இல்லை என்ற பதிலில் பெண்ணுக்கு செவ்வாய்தோஷமாயிற்றே என இவர் கூற இல்லையே என மாப்பிள்ளையின் அப்பா கூறியபடி சுமதியின் ஜாதகத்தை எடுத்துக் காட்ட அதைப் பார்க்கும் தரகர் இது சுமதியுடையது இல்லை என போட்டுடைக்க தங்களை தெய்வம் காப்பாற்றியது இனி எந்தத் தகவலும் சுமதி வீட்டுக்கு சொல்லப்போவதில்லை இந்த ஊர்ப்பக்கமும் இனி வரமாட்டோம் என்று கூறிவிட்டு மாப்பிள்ளை வீட்டார் சென்று விடுகின்றனர்.சுமதி கல்லுப் பிள்ளையார் இத்திருமணத்தை நடத்தி விடுவார் என்ற நம்பிக்கையுடனும் அவளின் அப்பா மாப்பிள்ளை வீட்டார் திருமணம் குறித்த செய்தியைச் சொல்லுவார்கள் என்றும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.இதை எல்லாம் பார்த்தபடி கல்லுப் பிள்ளையார் இருப்பதாக கதை முடிகிறது.
இக்கதை மனிதர்களைப் படித்தவர் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதைப் போல வெகு எளிமையாக எழுதப்பட்டுள்ளது.
திருமணத்தை நடக்காமல் செய்து தெய்வம்
காப்பாற்றியதாக கூறும் மாப்பிள்ளை
வீட்டார் ஒருபுறம்..
தன் அம்மாவின் இழப்பிலிருந்து
திருமணத்தடை வரை சகலத்தையும்
கல்லுப்பிள்ளையாரிடம் கொட்டி அவர்
வழிகாட்டுவார் என்று எண்ணும்
சுமதியின் விஷயத்தில் கல்லாகவே
கல்லுப்பிள்ளையார் இருப்பது ஒரு புறம் முரணாகத்தெரிய…..
கடவுள் கை பிடித்து அழைத்துச் செல்ல
வேண்டாம் பாதையையாவது
காட்டலாமில்லையா என்றெண்ணும்
முனுசாமியின் எண்ணம் நியாயமாகப்
படுகிறது.
மனிதர்கள் நம்பிக்கை கொள்வதற்கும் நம்பிக்கை இழப்பதற்கும் சுற்றியுள்ள மனிதர்களே காரணம். இதை உணராமல் இறைவனை தமக்கான எல்லா விஷயங்களிலும் துணைக்கு அழைத்துக் கொள்வது வாழ்க்கையின் நியதியாகிப் போகையில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் JUST BE…(சும்மாயிரு) என்னும் வாசகத்தை நினைவுக்கு கொண்டு வரும் கல்லுப் பிள்ளையார்..இக்கதையில் படிமமாக இருப்பது கண்கூடு.
நாடி ஜோசிரும் தரகரும் ஏன் நேர்மறை சிந்தனையற்று இருக்கின்றனர் என்ற வினா எழாமலில்லை.
இங்கு எல்லாமே கற்பிதங்கள் இதை உணராமல் மனிதர்கள் வாழ்வை சிக்கலாக்கும் பணியை மனிதர்களே செய்கிறார்கள் என்பதை வெகு யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது.
முத்தாய்ப்பாக கதை எழுத ஆர்வமிருந்தும் தயங்கித் தடுமாறி நிற்பவர்களுக்கு.எழுதுவதொன்றும் அவ்வளவு கடினமில்லை என்று முதுகில் தட்டி உற்சாகப்படுத்தும் விதமாய் உள்ள கதாசிரியரின் எளிய நடை.மிகப் பெரிய உத்வேகத்தை அளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை…
