இரண்டில் ஒன்று/நாகேந்திர பாரதி


வேணு , சோமு இருவரில் யார் அவளுக்கு ஏற்றவன் . முடிவெடுக்கும் பொறுப்பை ரோஜாவிடமே விட்டு விட்டனர் அவள் பெற்றோர் . இந்தப் படத்தில் இருக்கும் அதே ரோஜா தான் . எது ரோஜா என்று திகைக்க வைக்கும் அதே ரோஜா முக அழகிதான் .

ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறாள் . அந்த கம்பெனி எக்சிகியூடிவ் வேணு .

சோமு அரசாங்கக் கம்பெனியில் கிளார்க் . தூரத்துச் சொந்தம் . வீடு சென்னையின் மற்றொரு பகுதியில் . அடிக்கடி பார்த்துப் பழகியவன் . அவள் மேல் உயிராய் இருப்பவன் .

இது பெரியவர்கள் பார்த்துச் செய்ய வேண்டிய விஷயம் ‘ என்று இவளிடம் ப்ரொபோஸ் செய்த இருவரிடமும் சொல்லி இருந்தாள் . இருவரின் குடும்பத்தினரும் இவள் வீட்டுக்கே வந்து பெண் கேட்டுச் சென்றுள்ளனர் . ஆனால் , அவளைச் சுதந்திரமாக வளர்த்திருந்த அவள் தந்தையோ ‘ உன்னால் இதில் முடிவெடுக்க முடியும் , அது தான் நல்லதும் கூட ‘ என்று சொல்லி விட்டார் .

மனத்தராசில் இருவரின் செயல்களையும் ஏற்றிப் பார்த்தாள் .

அன்றொருநாள் வேணு அழைத்தான் ‘ என் பிறந்த நாளை , அனாதைக் குழந்தைகளோடு சேர்ந்து கொண்டாடுகிறேன் . முடிந்தால் அவசியம் வரவும் ‘ அவனுடன் சேர்ந்து அந்த ஆசிரமத்திற்குச் சென்றது . கள்ளம் கபடம் இல்லாத அந்தக் குழந்தைகளின் சிரிப்பு இப்போதும் கண் முன்னால்.
மற்றொரு முறை இவள் ரத்த தானம் செய்யச் சென்ற போது அங்கே வேணுவைச் சந்தித்தது .

சோமு ஒருநாள் போனில் பேசினான் . ‘உங்க குரலைக் கேட்டு ரெம்ப நாளாச்சு . கேட்கணும்னு தோணுச்சு . அதான் பேசினேன் . சாரி ‘ என்று ஆரம்பித்துப் பேசிக் கொண்டிருந்தான் .
ஒரு அடை மழை யன்று மாலை மாம்பலம் ரெயில்வே ஸ்டேஷன் வந்து காத்துக் கிடந்தான் . ‘ காலையிலே அடிச்ச வெயிலுக்கு நீங்க குடை கொண்டு போயிருக்க மாட்டீங்கன்னு தெரியும் . அதான் ‘.

பல மாதங்கள் இருவருடனும் பழகிய பல நிகழ்ச்சிகளை எடை போட்டுப் பார்த்தாள் . ‘சமூகப் பிரக்ஞய் உள்ள வேணுவா , என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் சோமுவா ‘ செல்போன் ஒலித்தது . பேசியவன் சோமு .

‘உங்களுக்கு ஏற்றவர் வேணுதாங்க . அவரால்தான் உங்களை வசதியா வச்சிருக்க முடியும் . நீங்க மஹாராணி மாதிரி வாழணும் . நான் அதைப் பார்த்து ரசிக்கணும் . அது போதுங்க எனக்கு ‘ என்று தழுதழுத்த சோமுவைச் சமாதானப் படுத்தி விட்டு வேணுவின் எண்ணைத் தொட்டாள் .

அவள் மனம் முழுக்க நிறைந்திருந்தது , அவள் வாழ்வளிக்க வேண்டிய தம்பி தங்கைகளும் , பெற்றோரும் , அத்தோடு வேணுவும்தான் . சோமுவின் நினைவோ அவ்வப்போது வந்து போகும்தான் .

One Comment on “இரண்டில் ஒன்று/நாகேந்திர பாரதி”

Comments are closed.