எஸ். சண்முகம் கவிதை

அளவில் சிறிதே வேறுபடும் சட்டைகளை அணியும் போதெல்லாம
நடையின் கதி மாறுபடுவதை உணர்கிறேன்

அதே பொடி கட்டங்கள்தான்
ஆனால்
வண்ணத்திலும் முழுமையான மாற்றமில்லை

வாங்கும்போது அளவு இடராமல் போனதற்கு
அருகிலிருந்தவர் தனது வண்ணத் தேர்வுகளைப் பார்த்திருத்ததில்
என்னில் தோற்றப் பிறழ்சி நிகழ்ந்திருக்கலாம்

அளவு பார்க்கும் அறையில்
சட்டைய அணிந்து ஆடியில்
முன்னும் பின்னும் திரும்பும்போது

அடுத்த அறையில் அருகிலிருந்தவர்
தனது அளவை சரிபார்த்துக் கொண்டிருக்கலாம்
பெரிய கட்டங்கள் நிறைந்த சட்டைதான்
அவரது கைகளில் இருந்ததாக ஞாபகம்

அடுத்த நாள்
தண்ணீரில் நனைக்காமல்
பொடிக்கட்ட சட்டையில்
முதல் தளத்திலிருந்து
நடைபயிற்சிக்கு கிளம்பிய பின்மாலை

எதிர்கடையிலிருந்து திரும்பிய நவீனயுவதி
தனது வீட்டின் இரும்பு கதவைத் திறந்து
உட்சென்றவர் லேசாக திரும்பி முதல் தடவை
பழைய மாதிரியில்
நகைத்தார்.