மனுஷ்ய புத்திரன் கவிதை

எனக்குச் சரியாக
ஒரு பொருளை வாங்கத் தெரியாது
எனக்குச் சரியாக
ஒன்றை பயன்படுத்தத் தெரியாது
எனக்குச் சரியாக
ஒன்றை திட்டமிடத் தெரியாது
எனக்குச் சரியாக
ஒருவரிடம் பேசத் தெரியாது
எனக்குச் சரியாக
ஒரு செயலைச் செய்யத் தெரியாது
எனக்குச் சரியாக
யாரையும் பார்த்துக்கொள்ளத் தெரியாது

இப்படித்தான்
சிறுவயதிலிருந்தே
நான் சொல்லப்பட்டிருக்கிறேன்
ஆனால் நான் செய்வதற்கு
ஏதாவது எப்போதும்
இருந்துகொண்டே இருக்கிறது

எதுவுமே இயலாத ஒரு மனிதனிடம்தான்
இவ்வளவு வேலைகள் தரப்படுகின்றன
ஒருவேளை நான்
எதையும் செய்யும் திறமையாளனாக இருந்திருந்தால்
எதுவுமே செய்யத் தேவையற்று
நிம்மதியாக இருந்திருப்பேன் போலும்

2.8.2023
காலை 11.04