மஞ்சள் நிறப் பூ../அழகியசிங்கர்

பவித்திராவிடம் பட்டாபிக்குப் பிடித்த விஷயம். மஞ்சள் நிறப் பூவை தலையில் வைத்துக்கொண்டு அவள் அழகுப் பார்த்துக் கொண்டிருப்பாள். அந்தக் காட்சிதான்.
கண்ணாடி முன் வெகு நேரம் நின்று கொணாடிருப்பாள். எந்த ஆணையும் மயக்கக் கூடிய அழகு.
தான் அழகாக இருக்கிறோமென்று துளிக்கூட கர்வம் கிடையாது அவளுக்கு.

பட்டாபி அவளுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டு வருகிறான். நாள் கணக்காக.
பட்டாபி பவித்திரா இருக்கும் இடத்திற்கு நாலு வீடு தள்ளி குடி இருக்கிறான்.

பவித்திரா எப்போது ஆபிஸ் கிளம்புவாளோ அப்ப கிளம்புவான்.
அவன் அவளைத் தொடர்வது அவளுக்குத் தெரிந்து விட்டது.

அன்றிலிருந்து அவனைப் பார்க்கும்போது ஒரு அலட்சியம் அவளிடம் தோன்றியது.

அவன் புரிந்து கொண்டான். அவன் அவளுடைய பார்வையைத் தாங்க முடியாமல் தவித்தான். கூனி குறுகி விட்டான்.
அவளைப் பார்ப்பதைத் தவிரத்தான். தினமும் அவள் இருக்குமிடத்தில் அவன் வலிய போய் நிற்பதில்லை.

ஆனால் அவளைப் பற்றிய நினைப்பை அவனால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அவன் அவளுடன் வாழ்வதுபோல் கற்பனை செய்து கொண்டான். அதுவே போதும் . அவளைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தான். பார்க்கவுமில்லை.

ஒருநாள் பவித்திரா வீட்டின் வழியாகப் தற்செயலாகப் போகும்படி நேர்ந்தது..
என்ன தோன்றியதோ திடீரென்று அவள் வீட்டிற்குள் சென்று எதிர்பட்டவரை பார்த்து,
” நீங்கள் யார்?” என்று கேட்டான்.
“பவித்திராவின் அப்பா” என்றார் அவர்.
“ஒரு விண்ணப்பம்” என்றான்.
“என்ன?” என்று கேட்டார்.
“நீங்கள் இந்த இடத்தைவிட்டு எங்காவது போய் விடுங்கள் இல்லாட்டி பவித்திராவை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள்..” என்றான் படப்படப்புடன்.