கால் நனைக்கப்போனதுதான்../ரத்னாவெங்கட்

ஒட்டியிருந்த மணலோடு
வீடு வரை வந்தது
கடலென்பது தெரியவில்லை

நள்ளிரவில் ஓங்கரித்ததை
சுற்றியிருந்தவரின்
முகச் சுளிப்பிற்கு பயந்து
புழக்கடையில் உதிர்த்து
வந்தேன்

காலையில் தேட
பொட்டு அரவமும்
பூச்செடிகள் ஏதுமின்றி
வெறிச்சோடிக் கிடந்த
பாதையில்
திரும்பிச் சென்றிருந்தது

நகக் கணுக்களில்
தீராது ஒட்டிக் கொண்டு
தொடுவதிலெல்லாம்
கரிப்பாய் கரித்தது
அதன் பேரன்பு…