கலாப்ரியா கவிதை

நேற்று நீ
கனவில் வந்து போன
ரகசியத்தைத் தான் மட்டுமே
அறிந்த தலையணைகளை
இள வெயிலில்
உலர வைக்கிறாள்
மனைவி
லேசாக மனம் பதறுவது
தெரியாமல்

நீ எங்கே நீ எங்கே

உன்னை வழி மறித்து
மதப் பிரச்சார வெளியீடுகள்
விநியோகிப்பவனைக் கூட
புன்னகையுடன் நீ
எதிர் கொண்ட பொறாமை
இன்னும் தீரவில்லை

நீ எங்கே நீ எங்கே

தரை விட்டெழும்ப
முடியாத
வாலெனப்
பார்க்கிறேன்
படமெடுத்தாடும்
உன்
பால்ய முகத்தை

நீ எங்கே நீ எங்கே..

நினைவிருக்கிறதா
நீ ஏறவிருக்கும்
பேருந்துக்கு அடியில்
சென்ற நாய்க்குட்டி
விரட்ட விரட்ட
சக்கரங்களுக்கிடையில்
பாந்தமாகப்
பதுங்கிக் கொண்டு
நேரம் கடத்தியதை

நீ எங்கே நீ எங்கே

நம்மைப் பேருந்து
நிழற் குடையில்
கண நேரம்
சேர்த்து வைத்திருந்த
இறந்த காலத்து மழை
இன்றும் பெய்கிறது
எப்போதுமே
நனையாத
என் வெக்கை
நினைவுகளில்

நீ எங்கே… நீ எங்கே…

( மீள் பதிவு)/ மீள முடியாத அல்லது மீள விரும்பாத பதிவு)