I am honoured . . ./சுகா

கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனது ‘உபசாரம்’ புத்தகம் அச்சாகி வந்திருந்த சமயம் புத்தகக் கண்காட்சியில் சம்பிரதாயமாக புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிரும் சம்பவம் நடந்தேறியது. உபசாரம் புத்தகத்தை ‘வம்சி’ பதிப்பகம் ஷைலஜா வெளியிட கவிஞர் சுகுமாரன் பெற்றுக் கொண்டார். என்னை இடித்துக் கொண்டு பதிப்பாளர் ஹரன் பிரசன்னா புகைப்படத்தில் நின்று கொண்டார். புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட பின் சுகுமாரன் என்னை அணைத்தபடி என் காதில் ‘I am honoured’ என்றார். அது முடிந்த பத்து நிமிடங்களில் ‘விருட்சம்’ ஸ்டாலுக்கு சென்றேன். அங்கு போய் விருட்சம் விருதுகள் பெற்ற சிறுகதைத் தொகுப்பை வாங்கி பில் போடப் போனேன். பில் போடுபவர் ‘ஸார். அந்த புக் வாங்குங்க. இந்த புக் வாங்குங்க’ என்று வெவ்வேறு புத்தகங்களைப் பரிந்துரைத்தார். நான் அவரிடம் ‘அதெல்லாம் இன்னொரு சமயம் வந்து வாங்கறேன் ஸார். இப்ப இதுக்கு மட்டும் பில் போடுங்க’ என்றேன். நான் சொன்னதைக் காதில் வாங்காமல் பில் போடுவதை நிறுத்தி வைத்து விட்டு, தொடர்ந்து அவர் பல புத்தகங்களை வாங்க சிபாரிசு செய்து கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் நான் பொறுமை இழந்து ‘ஸார். இந்தத் தொகுப்புல நான் எழுதின சிறுகதை இருக்கு. ஒரு காபி வேணும்னுதான் இதை இப்ப வாங்கறேன். மத்ததெல்லாம் இன்னொரு நாள் வந்து வாங்கறேன்’ என்றேன். துள்ளிக் குதித்து எழுந்தவர், ‘ஒங்க நேம்?’ என்றார். அவரது துள்ளலில் சற்று பயந்து போய் ‘சுகா’ என்றேன். சற்றுத் தள்ளி அமிதாப் அளவுக்கு உயரமாக நின்று கொண்டிருந்தவரைப் பார்த்து, ‘அழகிசிங்கர்! இவர்தான் சுகாவாம்’ என்றார். அழகியசிங்கர் அருகில் வந்து என் கைகளைப் பற்றிக் குலுக்கி ‘நல்ல கதை சுகா ‘லாஸ்ட் மினிட்லதான் உங்க கதையைப் படிச்சோம். அதுக்கு முன்னாடி இன்னொரு கதையை செலெக்ட் பண்ணி வச்சிருந்தோம். உங்க கதை பிரமாதம்’ என்று சொல்லி விட்டு புத்தகத்தை என் கையில் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். விடைபெறும் போது ‘நீங்க பெங்களூர்தானே? ரயில்வேஸ்ல ஒர்க் பண்றீங்களா? பேங்க் ஸ்டாஃபா? வேற ஏதும் எழுதியிருக்கீங்களா?’ என்று அடுத்தடுத்து ஏதேதோ என்னைப் பற்றி விசாரித்தார். விருட்சம் விருதுக்கு தேர்வான எனது சிறுகதையான ‘ராயல் டாக்கீஸ்’ ஒன்றைத் தவிர அழகியசிங்கருக்கு என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. அதற்கு சில நிமிடங்களுக்கு முன் கவிஞர்களின் முன்னோடி சுகுமாரன் என் புத்தகத்தை வெளியிட்டு ‘I am honoured’ என்கிறார். இப்போது மூத்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு நான் யாரென்றே தெரியவில்லை. என் கதைதான் என் மீதான மதிப்பை அவருக்குத் தந்திருக்கிறது இரண்டு சம்பவங்களுமே மனதுக்குள் ‘I am honoured’ என்று என்னை சொல்ல வைத்தன.

நிற்க. சென்ற வாரம் சென்னையில் நடைபெற்ற மூத்த கவிஞர் இசையின் புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் சுகுமாரனுக்கு நினைவு பரிசளிக்க என்னை அழைத்திருந்தார்கள். நினைவு பரிசுடன் சேர்த்து நான் பத்திரமாக வைத்திருந்த சுகுமாரனின் வார்த்தைகளை அவருக்குத் திருப்பி அளித்தேன். I am honoured.

எழுத்தாளர் சுகா அவர்களின் முகநூல் பகத்திலிருந்து