வலையில் சிக்கியவைகள் – 1/அதிரன்

லிமரைக்கூ

லிமரைக்கூ என்பது மூன்று வரிகள் கொண்ட முதல்வரியிலும், மூன்றாவது வரியிலும் இயப்பு தொடையுடன் அமையும் குறும்பா ஆகும். ஆங்கில மொழியில் ஹைக்கூ மற்றும் லிமரிக்  வடிவங்களையும் இணைத்து ஒரு கலப்பு இனக் குறும்பா கண்டுபிடிக்கப் பட்டது. முதன்முதலில் இதை உருவாக்கியவர் டெட் பாக்கர் (Ted Pauker) என்னும் கவிஞர். இவர் தம் கலப்பு இனக் குறும்பாவுக்கு லிமரைக்கூ(லிமரிக்+ஹைக்கூ) என்று பெயரிட்டார்.

இவ்வகைக் குறும்பாக்களைத் தமிழில் படைத்து, 138 பாக்களைத் தொகுத்து, ‘சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள்’ என்ற பெயரில் ஈரோடு தமிழன்பன், வெளியிட்டிருக்கிறார்.
அவற்றில் சில உங்கள் ரசனைக்கு :

🌞குருக்களே தெய்வங்கள் ஆனார்கள்
கோயில் இல்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடியிருக்கப் போனார்கள்

🌞பாடுவது அருட்பாப் பதிகம்
அன்றாடம் உணவில் ஆடுகோழி
மீன் நண்டு வகைகளே அதிகம்

🌞ஊது வத்திச் சின்னம்
கட்சி வென்று கோட்டை பிடித்தும்
நாற்றம் போகலை இன்னும்

🌞புகை பிடித்தால் இறப்பாய்
மது குடித்தால் இறப்பாய்
இரண்டும் விற்றால் வாழ்வில் சிறப்பாய்

🌞மழலைக்கா இறுதி யாத்திரை?
பழகிய பொம்மைக்கும் தூக்கம் இல்லை
கேட்கிறது தூக்க மாத்திரை

🌞துபாயில் அதிகமா வெய்யில் !
கேள்வி கேட்டோர் கவனம் எல்லாம்
அவன் இறக்கிவைத்த பையில் !

🌞அத்தனை மீன்கள் வலைகளில்
அடுத்தநாள் கடலிலே
அத்தனை அழுகை அலைகளில்

🌞குழந்தைக்கு ஒரு பொம்மை பிடிக்கும்
உள்ள பொம்மை அத்தனையும் குழந்தை
கைக்குப் போகத் துடிக்கும்

  • அன்புடன்
    உங்கள் அதிரன்
    ஓசூர்