காந்தி லிபி/தமிழவன்

                         

எதிர்பார்க்காதது தான் நடந்தது எனக்கு. 
நான் ஆய்வின் பொருட்டு அந்தக் கோடை காலத்தில் குளிராக இருக்கும் சுகவாசஸ்தலத்துக்கு 1978-ஆம் ஆண்டு போவேன் என்றோ அங்கு அப்போது 90 வயதான பழம்பெரும் சுதந்திரப் போராட்ட வீரரான ராஜகோபால பிள்ளையைச் சந்திப்பேன் என்றோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 
 ஆறு அடி ஓரங்குலம் உயரம் உள்ள பிள்ளை, ஒல்லியான தேகம், கனத்த சட்டமுள்ள கண்ணாடி, கதராடை சகிதம் காட்சி தந்தார். கைகள் மட்டும் ஆடியபடியே இருந்ததைத் தவிர ஆரோக்கியமானவர். கன்னங்கள் ஒட்டி, நரைத்த பெரிய மீசையுடன் காணப்பட்ட அவர், என்னைப் போலவே பழைய வரலாற்று ரெக்கார்டுகளைத் தேடி சேசுசபை பாதிரியார்கள் சேமித்துவைத்த அரிய பல ஆவணங்களைப் பார்வையிட வந்திருந்தார். காலில் கனத்த ‘வாரால்’ ஆன செருப்பு அணிந்து தோளில் தொங்கும் சாயம் போன பையுடன் வந்தார். அவரை அழைத்து வந்த பாதிரியார், நான் கர்நாடகத்தித்திலிருந்து வந்துள்ள கன்னட மொழிபேசும் ஓர் ஆய்வாளன் என்றும் சேசுசபை குருக்கள் 18-ஆம் நூற்றாண்டில் ரோமுக்கு அனுப்பிய கடிதங்களைப் பார்வையிட வந்துள்ளேன் என்றும் பிள்ளையிடம் அறிமுகம் செய்தார். பிள்ளை காந்தியின் நினைவாய் கதர் ஜிப்பாவில் தொங்கவிடப்பட்ட அந்தக் கால கடிகாரத்தை ஒரு முறை பார்த்தார்.
மரத்தாலான தரையுள்ள கான்டீனில் ‘பிரட்டில்’ ஜாம் தடவி எனக்கும் பிள்ளைக்கும் கான்டீன் சிப்பந்தி காலை உணவை வைத்தபோது, கதர் ஜிப்பாவின் வலது பக்கத்திலிருந்து எடுத்த மூக்குப்பொடியை இடது கையால் லாவகமாய் எடுத்து மூக்கில் போட்டவாறே பிள்ளை சொன்னார். 
‘நீங்கள் பழையகால காந்தியவாதிகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருப்பீர்கள் இல்லையா?’
நான் நிஜத்தை ஒத்துக்கொண்டேன். 
‘வாஸ்தவமாக சொ¡னா™, அதுதான் உண்மை.’
‘ஆனா உங்களுக்குக் காந்தியைப் பற்றி ஒன்றும் தெரியாது’. பிள்ளையின் குரலில் கோபம் லேசாக வெளிபட்டதோ என்று ஐயம் தோன்றும்படி பேச ஆரம்பித்தார்.
‘காந்தியின் தந்தையின் பெயரும், தாயின் பெயரும் அவர் குஜராத் பனியா சாதியைச் சார்ந்தவர் என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள். மகாத்மாகாந்தியின் தாய் புத்லிபாய் நான்காவது மனைவி அவர் தந்தைக்கு. காந்தி ஒரு வருடம் பம்பாயில் சட்டம் படித்தார். அதன்பிறகு தான் லண்டனுக்குச் சட்டம் படிக்கப் போனார். எல்லாரும் காந்தி லண்டனில்தான் சட்டம் படித்தார் என்று கருதுகிறார்கள். அவர் முதலில் சட்டம் படித்தது இந்தியாவில்தான்.....’
என்னையே கூர்மையாய் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்த பிள்ளையின் சிரிப்பு வழக்கம்போல் இருக்கவில்லை. தனக்குள் சிரிப்பதுபோல் பட்டது.  எனக்கு, காந்தி பற்றி பெரிதாகக் கவர்ச்சி ஏதும் கிடையாது. கர்னாடகத்தில் நண்பர்கள் மத்தியில் அம்பேட்கருக்கும் காந்திக்கும் நடந்த சண்டைகள் பெரிதாகச் சர்ச்சிக்கப்பட்டதும் நான் ஒரு கர்நாடக இலக்கிய சூழலில் வளர்ந்த கன்னடமொழி பேசக்கூடியவன் என்பதும்கூட இதற்குக் காரணமாகலாம். அதுபோல் நான் காந்தி இறந்த பத்து வருடங்களுக்குப் பிறகு பிறந்து வளர்ந்தவன். கன்னடச்சூழலில் அம்பேத்கரின் கருத்துக்கள் அப்போது MKவாகப் பேசப்பட்டன. 
‘காந்தி லண்டனில் சட்டம் படித்து 1891-ல் முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்து ஒரு வருடம் பம்பாயில் வக்கீலாக இருந்தது தெரிந்திருப்பீர்கள். அதுக்கு முன்னாடியே கஸ்துர்பா மெக்கான்ஜ் என்பவரை, காந்தி 13-ஆம் வயதில் திருமணம் செய்திருந்தார்’.
வயதான பிள்ளை சொன்ன சிறுசிறு தகவல்கள் எனக்குப் 

புFயதாŒ௭ தென்பட்டன. நான் வரலாற்றுத் தகவல்களைத் தேடி ஓடும் உள்ளுணர்வு படைத்தவன். அதனால் காந்தியிடம் ஈடுபாடு இல்லாவிட்டாலும் கஸ்தூர்பாவின் முழுப்பெயர் கஸ்தூர்பா மெக்கன்ஜ் என்பதும் காந்தி முதன்முதலாகச் சட்டம் படித்தது பம்பாய் என்பதும் புதுத்தகவல்களாக இருந்தன.
‘காந்தி முதலில் பிரிட்டீஷாரால் கௌரவிக்கப்பட்டார். முதல் உலகப்போரில் தென்ஆப்பிரிக்காவில் யுத்தத்தில் முன்னூறு பேர் அடங்கிய ஒரு குழு சேவையாளர்களை ஒருங்கிணைத்து யுத்தத்தில் புண்பட்டவர்களுக்கு அவர் உதவினார். அதற்காகப் பிரிட்டீஷாரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் காந்தி.
காந்தியைப் பற்றிப் பேசுவதில் சலிப்புத் தட்டாதவர் பிள்ளை என்று நான் நம்பும்படி பேசிக்கொண்டிருந்தபோது எங்கள் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த இரு இளம் வெள்ளைக்கார பாதிரிகள் சிலுவை அடையாளமிட்டுவிட்டுக் கொடுக்கப்பட்டிருந்த வெள்ளைத் துண்டால் வாயுதட்டை ஒற்றியபடியே சாப்பிட்ட ‘புள்பாயில்’ முட்டையின் பொடியை வாயுதட்டில் துடைத்த திருப்தியுடன் எழுந்து புறப்பட்டனர். அவர்கள் புறப்படும் முன்பு கர்னாடகத்திலிருந்து வந்திருந்த என்னையும் சுதந்திர போராட்ட வீரரான பிள்ளையையும் நோக்கி சிறு புன்முறுவல் பூக்க மறக்கவில்லை. சாப்பிடும் போது கைகள் ஆடவில்லை. தொடர்ந்தார் பிள்ளை.
‘காந்தி, 1947-இல் இந்தியா சுதந்திரமடைந்தபோது எந்த சுதந்திரவிழாவிலும் கலந்துகொள்ளவில்லை. அதுபோல் 1948-இல் நாதுராம் கோத்ஸேயால் சுட்டுக்கொல்லப்படுவதன் முன்பே மூன்றுமுறை அவர் மீது கொலைமுயற்சி நடந்தது. காந்தி சிறு வயதில் படித்தது ஒரு கிறிஸ்தவப் பள்ளி. அதன் பெயர் ஆல்பிரட் உயர்நிலைப்பள்ளி. ஒருமுறை காந்தி காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜிநாமா செய்தார்.’
இப்படி இப்படி பிள்ளை ஆடிய கைகளால் அடிக்கடி மூக்குப்பொடி போட்டவாறே நான் அறிந்திராத தகவல்களைக் காந்தி பற்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தார். இடையில் ஒருமுறை மூக்குப்பொடி வைக்கும் சதுரமான ஓரங்குல நீளஅகலமும் கால் அங்குலம் உயரமும் கொண்ட புலிப்பல்லில் செய்த பொடி டப்பாவைக் காட்டியபோது நான் புன்னகை செய்தேன். ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்த என் தாயின் தந்தையான என் தாத்தாவின் மூக்குப்பொடி டப்பாவை எப்போதும் நான் வைத்துக்கொண்டு அவருக்கு அவர் விரும்பிய போதெல்லாம் கொண்டு போய் கொடுக்கும் என் சிறு வயது அனுபவம் ஞாபகம் வந்தது. மூக்குப்பொடி டப்பாவின் சிறு ஆணியில் மேல்மூடியும் கீழ்முடியும் பொருந்தியிருக்கும் தொழில்நுட்பம் என்னை அக்காலத்தில் வெகுவாகக் கவர்ந்தது. தாத்தாவின் பொடிடப்பாவை மேல்மூடியும், கீழ்த்தட்டும் வெகுநுட்பமாய் மூடிக்கொள்ளும் முறையில் சிரமப்பட்டு யாரோ கைவினைஞர் செய்திருந்தது ஞாபகம் வந்தது.
இதனைப் பற்றி பிள்ளையிடம் நான் சொன்னபோது அவர் தன்னுடைய கையிலிருந்த மூக்குப்பொடி டப்பாவை என்னிடம் ‘இதோ பாருங்கள்’ என்று தந்தார்.
எனக்கும் அவருக்கும் அந்தக் கோடைகால சுகவாசஸ்தலத்தில் ஆவணக் காப்பகத்தில் அன்றைய வேலை முடிந்த பின்பு தங்குவதற்கென்று அறை கொடுத்தார்கள். மிகக் குறைந்த கட்டணத்தில் தங்க வசதியான அறைகள். கழிப்பறையில் தண்ணீர் அடிப்பதற்குச் சங்கிலியால் சிறு டாங்கிலிருந்து நீரை இழுத்து வெளியேற்ற வேண்டும். இந்திய சுதந்திரத்துக்கு முன்பே வெள்ளைக் காரர்கள். இங்கு இருந்தபோது அமைந்திருந்த முறை. அதுபோல் முகம் பார்க்கும் கண்ணாடிகளில் பாதரசம் மங்கிப் போய் இருந்தது. அந்த அறைகள் பெரும்பாலும் இந்தியா முழுவFலுIரு௮து வரும் பாதிரிகளால் பயன்படுத்தப் பட்டவை. எனவே, தன் அழகைப் பற்றிய பிரக்ஞையைப் பாதிரிகள் நிராகரித்ததால் அவர்களின் முக அழகைப் பாதுகாக்க அவர்கள் ஒப்பனை செய்வதில்லை. அதனாலோ என்னவோ கண்ணாடிகளில் பாதரசம் இல்லை. ஒருநாள் பிள்ளை அவர்களின் அறைக் கண்ணாடியிலும் பாதரசம் கழன்று போயிருந்ததைக் கவனித்தேன். நான் கண்ணாடியைக் கவனிப்பதைக் கண்ட பிள்ளை அடிக்கடி செய்வது போல் தனது வயதான நீண்ட கைவிரல்களால் வெள்ளையாக மாறிய முடியுடன் காட்சி தந்த தலையைத் தடவிவிட்டுச் சொன்னார்.
இது, பாதிரிகள் தத்தம் முகஅழகில் ஈடுபடக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே செய்யும்வேலை. பாதரசத்தைச் சுரண்டி முகம் அழகாய் தெரியாதபடி கண்ணாடிகளை இந்தப் பாதிரிகளின் மடத்தில் மாற்றுகிறார்கள்.
பிள்ளை வயதானவராக இருந்தாலும் சுவராசியமான மனிதராய் தென்பட்டார். கண்ணாடியில் பாதரசம் சுரண்டப்பட்டிருப்பது பற்றிச் சொல்வதாக இருந்தாலும் சரி, நம் எல்லோருக்கும் தெரியும் என்று நாம் கருதியிருக்கும் காந்தியைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் சரி, நமக்குத் தெரியாத புதுத்தகவல்களைத் தருகிறாரே என்று எண்ணிக் கொண்டேன்.
இடையிடையே என்னைப் பற்றி பிள்ளை அவர்கள் கேட்டுத் தெரிந்துகொண்டார். நான் ஒரு கன்னட எழுத்தாளனின் மகன் என்பது தெரிந்ததும் கன்னட இலக்கியம் பற்றிக் கேட்டார். என் தந்தை பாலகிருஷ்ண கௌடாவை எங்களின் மங்களூர் பக்கத்து எஸ்டேட்டில் சந்திக்க வரும் எழுத்தாளர்கள் பற்றி நான் தெரிந்த விஷயங்களைப் பிள்ளைக்குத் தெரிவித்தேன்.
‘பாலகிருஷ்ண கௌடா…. பழைய சுதந்திர போராட்ட தியாகி அல்லவா?’.
‘ஆம்’ – இது நான்.
‘நீங்கள் அவர் பிள்ளையா? நானும் அவரும் பெல்லாரி சிறையில் ஒன்றாக இருந்தோம். ஒருமுறை அசெம்பிளி எலெக்சனில் வெற்றி பெற்றாரே’ என்று கேட்டார் பிள்ளை.
‘ஆமா. எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்களே’ என்றபோது சிரித்தார் பிள்ளை. நண்பனின் மகனுடனிருக்கிறோம் என்று குதூகலம் கொண்டார் பிள்ளை. ‘உன் தந்தையின் எழுத்தில் ஒரு மாந்திரிகத் தன்மையும் உண்டு. சமீபத்தில் கூட உன் தந்தையின் ஒரு நாவல் ‘மைசூர் அரண்மனையின் நிழல்’ என்பதைப் படித்து எனக்குப் பிடித்த சில பகுதிகளை எழுதி வைத்திருக்கிறேன் பார்’ என்று மாலையில் ஆவணக்காப்பகத்தில் இருந்து இருவரும் காண்டீன் சென்று சுத்தமாகத் துடைத்து அமைதியாக இருக்கும் அறையின் மேசையில் வைக்கப்பட்ட வடையையும் காப்பியையும் எடுத்துக் குடித்தபோது கூறினார் பிள்ளை. பின்பு அவர் அறைக்கு என்னை அழைத்துச் சென்று அவருடைய பைன்ட் செய்யப்பட்ட (சுமார் 800 பக்கங்கள் கொண்ட) குறிப்பு எடுக்கும் நோட்டை எடுத்துப் பிரித்துப் படித்தார். நான் அறிந்திராத என் தந்தையின் ஒரு நாவலின் பகுதி என்று பிள்ளை படித்த பாரா இப்படி எழுதப்பட்டிருந்தது. அது நூலின் முன்னுரை.
‘மைசூர் அரசன் கொலை செய்யப்பட்ட இடத்தில் இரண்டு பெரிய மைல்கல்கள் நடப்பட்டிருந்தன – ஒன்று கறுப்பு நிறம், இன்னொன்று சிவப்பு நிறம். அவை மைசூர் அரசின் இரண்டுவிதமான நீதி பரிபாலனத்தைச் சுட்டின. நீதியும் வீரமும். நீதியைச் சுட்டிய கறுப்புக் கல்லில் செதுக்கப்பட்ட இரண்டு நௌ¤யும் குறுக்குமறுக்குமான பாம்புகளின் திறந்த வாயில் லத்தீன்மொழி வாசகங்கள் எழுதப்பட்ட ஓலைகள் காணப்பட்டன. ஒரு வாள் பிடித்த பெண்ணின் கை, மேகத்திலிருந்து வெளிப்பட்டுப் பாம்பை ஆணையிட்டது. சிவப்புக் கல்லில் ஒரு பிடியில் இரண்டு வாள்கள் இருந்தன. அந்த இரட்டைவாள் கீழிலிருந்து மேல் நோக்கித் தீட்டப்பட்டிருந்தது. மர்மம் முழுதும் இந்தக் குறிகளை அறிவதில் அடங்கியிருக்கிறதென்பதை அறிந்த துப்பறிபவன் மைசூர் அரசரின் கொலையாளியை இறுதியில் கண்டுபிடித்தாலும் அவனைப் பிடிப்பதில்லை..’
பிள்ளை ‘இவ்வளவுதான் எழுதினேன்’ என்றார்.
‘நான், என் தந்தையின் காலத்து எழுத்துப்பாணியைவிட கன்னடகவிஞர் கோபாலகிருஷ்ண அடிகா போன்றோரின் பாணி கவிதைகளைத் தான் அதிகம் ரசிக்கிறவன் என்று கூறியது பிள்ளைக்குப் பிடிக்கவில்லை. எனினும், தன் எண்ணத்தை என்னிடம் வெளிப்படுத்தவில்லை அவர். அவரளவு வயதானவர்களின் முதிர்ச்சி அது என்று எண்ணினேன்.
இவ்வாறு பிள்ளையும் நானும் சுமார் ஒருவாரம் அந்த சுகவாசஸ்தலத்தில் தகவல்கள் சேகரித்தோம்.
கடைசிநாள் பிள்ளை அவர்களை அந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனில் நான் வழியனுப்பிவிட்டு வந்தேன். எனக்கு இன்னும் ஒரு வாரம் ஆவணக் காப்பகத்திலேயே இருந்து முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தன.
மறுநாள் நான் ஆவணக்காப்பகத்தில் பழைய நூல்களையும் காட்டலாக்குகளையும் டைப் செய்யப்பட்ட தாஸ்தாவேஜூகளையும் புரட்டிக் கொண்டிருந்தபோது திரும்பிப் பார்த்தால் கதர்ஜிப்பா போட்ட குண்டான ஒரு வயதான மனிதர். இவரிடம் மதியம் உணவுக்குப் போகும்போது கான்டீனில் வைத்து பேசியதில் இவர் ராஜகோபால பிள்ளையைத் தேடிவந்தவர் என்றும் பிள்ளை அவர்கள் போய்விட்ட செய்தி தெரியாததால் அன்று அங்கேயே தங்க வேண்டியதாகிவிட்டதால் ஆவணக் காப்பகத்தில் ஆவணங்களைப் பார்வையிட வந்தவராகவும் தன்னை அறிமுகப்படுத்தினார். இவருடைய பெயர் ஸ்டான்லி குமரப்பா என்றும் சுகவாசஸ்தலத்திற்கு இரண்டு குன்றுகள் தாண்டி அப்பாலிருக்கும் பஞ்சாயத்துத் தலைவர் தான் என்றும் கூறினார். ராஜகோபால பிள்ளை காந்தி பற்றி நன்கு அறிந்தவர் என்றும் பல அரசியல் தலைவர்களின் குருபோல் செயல்பட்டவர் என்றும் கூறிய ஸ்டான்லி குமரப்பா என்னைப் பற்றி விசாரித்தார். என் தந்தை ஒரு கன்னட எழுத்தாளர் என்றும் ராஜகோபால பிள்ளையுடன் பெல்லாரி சிறையில் சகசிறைவாசி என்றும் கூறினேன்.
அதன்பிறகு, ராஜகோபால பிள்ளையின் நண்பரின் மகன் என்பதால் ஸ்டான்லி குமரப்பா சகஜமாகப் பழகினார். நவீனகால கன்னட இலக்கியத்தில் நான் ஈடுபாடு கொண்டவன் என்பதைச் சொன்னபோது குமரப்பா அதிகம் அதில் அக்கறை காட்டவில்லை.
எனினும், குமரப்பா வைத்திருந்த கையெழுத்துப் பிரதி ஒன்றைப் பார்த்தபோது குமரப்பாவும் எழுத்தாளராக இருப்பாரோ என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கோபாலகிருஷ்ண அடிகா மற்றும் ராமச்சந்திர சர்மா போன்ற கன்னடத்தின் ‘நவ்ய’ இலக்கிய இயக்கத்தைச் சார்ந்த கவிஞர்கள் பற்றிச் சொல்லலாமா என்று யோசித்தேன்.
குமரப்பா ஏதோ நினைத்தபடி, அப்போது என்னைக் கண்களில் தீர்க்கமாய் பார்த்தபடி, இப்படிக் கேட்டார்.
‘ராஜகோபால பிள்ளை எழுதிய காந்திமகான் சரித்திரம் என்ற நூல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’
‘இல்லை; மேலும் நான் தமிழ்ப் படிக்கத் தெரியாத கன்னடம் பேசுபவன். நான் எப்படி காந்தி மகான் சரித்திரம் என்ற தமிழ்நூலைப் படிக்கமுடியும்?’
‘நீங்கள் நினைத்தால் படிக்க முடியும். ஆனால், நினைக்க வேண்டும். நினைக்கும் சக்தி இருப்பவர்களுக்குப் படிக்க முடியும்’ நிறுத்தினார். ‘எப்படி? தமிழ் எழுத்து எனக்குத் தெரியாதே’ என்றேன்.
‘எழுத்துத் தெரியாதவர்களுக்காக இந்தியாவின் பல மொழிகளின் எழுத்துக்களைச் சேர்த்து உருவாக்கிய ‘பாரதம் முழுமைக்கான லிபியில்’ எழுதப்பட்டது. இந்தக் காந்தி மகான் சரித்திரம். கன்னட எழுத்து ஆதியில் பிராமியில் இருந்துதானே வந்தது?’
‘ஆம்’
‘அப்படி எனில் திராவிடமொழிகளின் மூல எழுத்து பிராமி. சரிதானே?’
‘சரிதான்.’
அந்த மூலலிபியின் வடிவங்களும் இந்தி, பெங்காலி போன்ற எழுத்துக்களின் மூல லிபிகளின் வடிவங்களையும் சேர்த்து ராஜகோபால் பிள்ளை, ‘காந்தி லிபி’ என்ற பாரதநாட்டு ஒற்றை லிபியை உருவாக்கினார். அதை இந்திய மொழிகள் எல்லாம் பின்பற்ற வேண்டும் என்று நேரு பிரதமராக இருக்கும் போது ஓரிரு கடிதங்களை எழுதினார். யாரும் கண்டுகொள்ளவில்லை. அதன்பின் அந்த லிபியைத் தான் ஒருவனே என்றும் நிலைத்திருக்கும் லிபியாக மாற்றவேண்டுமென்று யோசித்தார் ராஜகோபால பிள்ளை. அதன் விளைவாக காந்திலிபியில் உருவான சரித்திரம்தான் ‘காந்தி மகான் சரித்திரம.¢’
‘ஒரே ஒருவருக்குத் தெரிந்த லிபியின் எழுதப்பட்டுள்ளதா காந்திமகான் சரித்திரம்?’.
என் கேள்வியை செவியுற்ற ஸ்டான்லி குமரப்பாவும் அதுபோல் நானும் அந்தச் சுகவாசஸ்தலத்தில் ஒரு சிறிய குன்றினருகில் அருகருகே நடந்து கொண்டிருந்தோம்.
‘ஆமா! அதுதான் இந்த நூலின் சிறப்பு,’ என்று தனது காதித்துணியாலான தோள் பையின் பக்கம் பார்வையைச் செலுத்தினார் ஸ்டான்லி குமரப்பா. தாட்டியான உடலாகையால் இரைத்தபடி நடந்தார். அன்று நல்ல வெயிலடித்த நாளாகையால் வானம் தௌ¤வாக இருந்தது நான் பொறுமையை மீறி ‘அந்த நூல் உங்களிடம் இருக்கிறதா?’ என்று கேட்டதும் குமரப்பா என்னை நோக்கிப் புன்முறுவல் பூத்தார்.
அறையில் போனபிறகு காட்டுவார் என்று நம்பினேன். சில நிமிடங்களில் நாங்கள் தங்கும் விடுதி வந்தது. அவரது அறைக்கு என்னை அழைத்துக் குமரப்பா வாசிக்க ஆரம்பித்தார். அப்போது குமரப்பா ‘காந்திலிபியைப்’ படிக்கத் தெரிந்த இரண்டாம் நபர் என்று அறிந்தேன். பின் ஏன் ஒருவருக்கு மட்டுமே காந்திலிபி என்ற அனைந்திந்திய மொழிகளை எழுதும் லிபி தெரியும் என்று கூறினார் என்ற கேள்வி எனக்குத் தோன்றியது. கன்னடம், இந்தி, மராட்டி, வங்காலி, அஸ்ஸாமி, ஒரியா, தமிழ், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, மைதிலி, துளு, காஷ்மீரி போன்ற எல்லா மொழிகளையும் ஒரே லிபியைப் பயன்படுத்தி எழுதும் லிபி புரட்சிகரமானதுதான். ஆனால், அதனை இந்தியாவின் எல்லா மக்களும் அறிந்துகொள்ளவில்லையே என்று எனக்கு வேதனையாக இருந்தது. இதுபோன்ற செய்தியை என் தந்தையான பாலகிருஷ்ண கௌடா ஒரு முறை கோபால கிருஷ்ண அடிகா என்ற எங்கள் மொழியின் புகழ்பெற்ற கவிஞரைச் சந்தித்தபோது கூறினார் என்ற செய்தியை லிங்காயத்து மடம் ஒன்றில் வைத்து ‘மதே ஸ்நான’ என்ற பெயரில் தலித்தினர் பிராமணர் உணவு உண்ட எச்சில் இலைமீது உருளும் சடங்கைக் கேள்விப்பட்டுக் கண்டித்த லங்கேஷ் என்ற பெயரில் கன்னடத்தில் அறியப்படும் எழுத்தாளர் கோபமாகப் பேசிய செய்தி ஒன்று நான் கேள்விப்பட்டதுண்டு. என் தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவரைப் பார்க்க வந்த ஓர் இளம் தலித் எழுத்தாளர,¢ இச்செய்தியைக் குறிப்பிட்டதை, என் தந்தையின் மரணத்தைப் பற்றி எழுதிய ஒரு பெங்களூர் கன்னடத் தினத்தாள் அச்சிட்டிருந்தது என் ஞாபகத்துக்கு வந்தது.
‘காந்திலிபியைத் தெரிந்த இன்னொருவர் தாங்களா?’ என்று கேட்கும் ஆர்வம் இருந்தாலும் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு குமரப்பா அடுத்து வாசிக்கப் போவதைக் கவனித்தேன்.
‘காந்தி 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி பிர்லா ஹெளஸில் மாலை ஐந்து மணிக்குப் பிரார்த்தனைக்கு வருவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தியாகையால் ஒரு சிறிய கூட்டம் அங்குத் திரண்டிருந்தபோது நானும் இருந்தேன். என் நண்பரான பி.பி.சியின் டெல்லி நிருபர் பாப் ஸ்டிம்ஸன் என்பவர் காந்தியிடம் ஏதோ கேட்பதற்காக அங்கு வந்தபோது இந்தியரான என்னையும் அழைத்தார்..’ (இந்த இடத்தில் என் பார்வைக்குப் படாமல் வைத்துப் படித்த காந்திலிபியால் எழுதப்பட்ட நூலைப் படிக்க சிரமப்பட்டு நிறுத்தினார் குமரப்பா.)
அதன்பின்பு தட்டுத்தடுமாறிப் படித்தாலும் குமரப்பா என்முன் கொண்டு வரவேண்டிய வாக்கியங்கள் என் மனதில் பதியாமல் போகவில்லை.
‘காந்தி காலில் செருப்புடன் பிர்லா ஹெளஸின் புல்வெளியைக் கடந்து இருபெண்களின் மீது சாய்ந்தவாறு நடந்துவந்துபோது மணி 5.12 எல்லோரும் ஏன் இன்று பிந்திவிட்டார் என்று கேள்வியை விழிகளால் தெரியப்படுத்தினார்கள். அப்போது ஒருவன் காந்தியின் கால்களில் விழுந்தான். இரண்டு வெள்ளையர்கள் காந்திக்கு 10 அடி தூரத்தில் நின்று கடவுளைப் பார்ப்பது போல அவரைப் பார்த்துக் கொண்டு G¡றன௱.
குமரப்பா அதன்பின்பு ஒரு நூலை வாசித்தாரா அல்லது பேசினாரா என்ற வித்தியாசமின்றி எதையோ ஒன்றை வாசித்தார். நான் புரிந்துகொண்டேன். ஆதிவாசிகள் உக்ரம் வந்து தலையைச் சுழற்றுவது போல் அவர் செய்யாவிட்டாலும் கண்கள் வெறிகொண்டு நிலைத்தன அவருக்கு. எனக்குக் குமரப்பாவின் அறையில் இனியும் அமர்ந்திருக்க முடியும் என்று தோன்றாத சூழ்நிலை உருவாயிற்று. காந்தியவாதி போல் தோற்றத்தில் தென்பட்டாலும் ரகசியமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவரோ என்று நான் சந்தேகம் கொள்ளும் விதமாக நடந்துகொண்ட குமரப்பாவை நான் சாந்தப்படுத்த முடியாமலானது. ஏதோ மதம்பிடித்த யானைபோல் தரையில் படுப்பதும் எழுவதும் ஏதெதோ பேசுவதுமாக இருந்தவர் தொடர்ந்து எனக்குப் புரியாத ஒரு மொழியில் தௌ¤வாகப் பேசுவதுபோல் பட்டது. அந்தப் பேச்சு வெறும் ஒலி அல்ல; இலக்கணச் சுத்தமான இன்னொரு மொழி என்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. நான் பேசுவது அவருடைய காதில் விழவில்லை. காந்திலிபி அவரின் சிந்தனா சக்தியைக் குழப்பியது. அங்கிருந்த சூழல் அப்படிப்பட்டது என நான் அங்கீகரிப்பதை விட வேறு வழியில்லை. இது எனக்கு நன்கு விளங்கியபோது, குமரப்பாவின் அறையிலிருந்து வெளியேறினேன். ஆனால், அவர் ஏதோ ஒரு மொழிக்குக் காற்றோடு உரையாடும் தன்மை இருக்கலாம் என்பதுபோல் பேசிக்கொண்டே இருந்தார். தூரத்தில் நடந்துகொண்டிருந்த எனக்கு வெளிக்காற்றும் அவரது வாய்வழி வெளிப்பட்ட புரியாத மொழி என்னும் காற்றும் கலந்தது போல் பட்டது.
காலம் உருண்டோடி விட்டது. ஆனாலும் என் பழைய நூல்களையும் வயதான காந்தியவாதிகளையும், பழைய சரித்திரங்களையும் தேடிப்போகும் என் சாகசம் நிற்காமல் தொடர்ந்தது. அக்காலத்து யுத்த தந்திரங்களும் அரசர்களும், ராஜபிரதானிகளும், தளபதிகளும், 17,18-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆங்கில, பிரஞ்சு படை வீரர்களிடம் இருந்த ஆயுதங்களும், முகமூடிகளும் நெஞ்சை மூடும் இரும்புவலைகள், விதம்விதமான துப்பாக்கிகளும் என்னை ஈர்ப்பதை நிறுத்தவில்லை. இடையிடையே பழங்கால கல்வெட்டுகள், மந்திர தந்திர நூல்கள், கௌளி சாஸ்திரங்கள், மூலிகை ரகசியங்கள், யோக நூல்கள், எல்லை இல்லாத் தந்திரமுறைகளைத் தீட்டிய செப்பேடுகள், பல்வேறு சதுரங்க விளையாட்டை விளக்கும் நூல்கள், பாம்பும் ஏணியும் கொண்ட விளையாட்டுப் பற்றிய நூல்கள் போன்றன தொடர்ந்து என்னால் தொகுக்கப்பட்டன.
இவ்வாறு தொகுத்தபோது சந்தித்த ஒரு மனிதர் ஒரு தமிழ்ப்பேராசிரியர். நான் கர்நாடகத்தவனாகையால் நான் தமிழ்ப்பேராசிரியர் ஒருவரை சந்திப்பது முதல்முறை. நெற்றியில் குத்துக்கோட்டில் சிவப்பு வர்ணம் போட்டுக் குடுமி வைத்திருந்தார். சமய பக்தர் என்றார். அவர் திருப்பதியில் இருக்கும் வெங்கடேஸ்வரனை வழிபடும் வழியில் நானும் அவரும் ஆந்திராவில் இருக்கும் சித்தூரில் அபூர்வமான பழைய நூல்களைக் கொண்ட நூலகத்தில் சந்தித்தோம்.
அவருக்கு – எல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கிறது – என்ற தத்துவத்தில் உடன்பாடிருந்தது. எனக்கு இந்தத் தத்துவத்தில் உடன்பாடில்லா விட்டாலும் நடந்த காரியங்கள் ஆச்சரியப்பட வைக்கத் தவறவில்லை. குடுமி வைத்த, 21-ஆம் நூற்றாண்டில் நான் சந்தித்த தமிழ்ப் பேராசிரியரின், சித்தப்பாவாம் ஸ்டான்லி குமரப்பா (ஸ்டான்லி என்பது குமரப்பாவின் குருவான ஒரு வெள்ளைக்கார இந்து சன்னியாசியாம்) என்ற பல வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த பெரிய உடம்பு கொண்ட மனிதர். அதாவது 90 வயது கொண்ட ராஜகோபால் பிள்ளை என்ற மூத்த காந்தியவாதியின் நண்பர் என்று உரிமை கொண்டாடிக் கொண்டு வந்தவர். 20 இந்தியமொழிகளை ஒரே லிபியில் எழுதும் முறையை ராஜகோபால்பிள்ளை கண்டுபிடித்து அந்த அதிசய லிபியில் எழுதிய ஒரே ஒருவருக்குத் தெரிந்த நூலை (குமரப்பாவுக்கு அந்த லிபி தெரியும் என்றால் இருவருக்கும் மட்டும் தெரிந்த நூல்) பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் வாசித்த நிகழ்ச்சி இப்போது என் நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்ச்சியிலிருந்து விடுபடாமல் கடந்த பல ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிற எனக்கு ராஜகோபால பிள்ளை என்ற மூத்த காந்தியவாதி இறந்த செய்தி ஒருமுறை ஹம்பியில் இருக்கும் கன்னட பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா நிகழ்ச்சியில் கலந்து பட்டமளிப்பு விழா உரை ஆற்றுவதற்காக வந்த வி.ஐ.சுப்பிரமணியம் என்ற மொழியியல்வாதியால் சொல்லப்பட்டது. வி.ஐ.சு.வின் இளமைக்கால நண்பராம் ராஜகோபால பிள்ளை.
குடுமி வைத்த தமிழ்ப்பேராசிரியரை விடாமல் பின்தொடர்ந்து, இப்போது முழுவதும் தொடர்பில்லாமல் போய்விட்ட அந்தக் கோடை வாசஸ்தலத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் குறிப்பிட விரும்பினேன். சித்தூரில் உள்ள கோயில், குளம் எல்லாம் சுற்றி வந்த குடுமி வைத்த தமிழ்ப் பேராசிரியரோடு எல்லாக் கோயில் குளங்களையும் சுற்றிய பின்பு ஒரு பாடாவதி லாட்ஜில் (சுதர்சன நாச்சியார் லாட்ஜ்) நானும் அவரும் தங்கியபோது என் ஐயங்களைக் கேட்டேன். ஸ்டான்லி குமரப்பாவின் காந்தி லிபி பற்றிய பயிற்சி பற்றி ஏதும் சொல்வதற்கில்லை, ஏனெனில் தான் காந்தி லிபி பற்றி இதுவரை கேட்டதில்லை என்றார் குடுமித் தமிழ்ப் பேராசிரியர். ஆனால் ஸ்டான்லி குமரப்பா பலவிதமான திறமைகள் கொண்டவர் என்பதில் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் ஒத்த கருத்து உண்டு. எனவே, அவர் காந்தி லிபி பற்றித் தெரிந்திருக்க வாய்ப்புண்டு என்றார் பேராசிரியர்.
மறுநாள் சித்தூருக்குப் பக்கத்து ஊர்களில் உள்ள சிறுதெய்வங்களுக்கான கோயில்களைச் சுற்றி வந்துவிட்டால் கர்னாடகத்திலிருந்து வந்துள்ள இலக்கிய நண்பரான எனக்கு கொஞ்சம் ஆச்சர்யங்களை அளிக்கமுடியும் என்றார் பேராசிரியர்.
என் முதுகுவலியையும் 70-ஆம் வயதை கடந்த என் வயோதிகத்தையும் மறந்து, அன்று முழுவதும், கோயில்கள் முன்பு படுத்துக் கிடக்கும் நந்திகளையும் நின்று கொண்டிருக்கும் எண்ணெய் வழிந்தோடும் விநாயகர் கற்சிலைகளையும் சுற்றிச் சுற்றிக் கால்வலிக்க ஓடிக்கொண்டிருந்த எனக்கு அன்று மாலையில் சுதர்சன நாச்சியார் லாட்ஜில் பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறதென்று தெரியாது.
தமிழ்ப்பேராசிரியர் அவருடைய பெயிண்ட் போன ட்ரங்பெட்டியில் (இதனை அவர் பயன்படுத்தியது உண்மை) கீழ்ப்பகுதியில் இருந்து உருவிப் பழைய தோல்பையிலிருந்த கறுப்பு வெளுப்பு போட்டோக்களை எடுத்தபோது துல்லியமாக நானும் ஸ்டான்லி குமரப்பாவும் சேர்ந்து நிற்கும் படம் அதில் இருக்குமென்று நானும் நினைக்கவில்லை. இது அகஸ்மாத்தாக நடந்ததாக நான் நினைத்தாலும் பேராசிரியர் அப்படி நினைக்கவில்லை என்பதை அவர் நடவடிக்கைகளில் தெரிந்த மாற்றம் காட்டியது. பேராசிரியர் படபடப்புடன் இருந்ததுபோல் பட்டது.
மறுநாள் அதிகாலையில் என்னிடம் வந்து உடனே என் அப்பன் திருமலை இறைவனை உடனே தரிசிக்க வேண்டும் என நேற்று தூங்கும்போது, கட்டளை வந்துவிட்டது; நான் கிளம்புகிறேன் என்று புறப்பட்ட பேராசிரியர் என்னிடம் ஒரு கத்தை பழம் தாள்களை விட்டுச் செல்வதில் குறியாக இருந்தார்.
பழம்பெரும் ஆங்கில சிறுகதையாசிரியர் எட்கர் ஆலன்போவின் ஆங்கில நடையை நகல்பண்ணி எழுதப்பட்ட காந்திமகான் சரித்திரம் இப்போது என் கையில் இருந்தது.
நான் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடைவாசஸ்தலத்தில் இருந்தபோது ஸ்டான்லி குமரப்பாவால் தெரிவிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் மரணம் பற்றிய விபரம் தொடர்ந்தது.
அதில் இருந்த செய்திகள் எனக்கும் இந்தியாவுக்கும், ஏன் காந்தியைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் உலகத்தவருக்கும், பெரும் கொந்தளிப்பையும் வியப்பையும் கொடுக்கக்கூடிய செய்திகள். டெல்லியில் காந்தி பிர்லா ஹெளசில், புல் தரையில் நடந்து பிரார்த்தனைக்குப் போய் மேடைமீது ஏறியதும் நான்கு முறை துப்பாக்கிக் குண்டுகள் (சிலர் மூன்றுமுறை என்கிறார்கள், இந்த வேறுபட்ட வாசிப்பு கவனத்துக்குரியதும் முக்கியமானதுமாகும்). பாய்ந்த மங்கலான ஓசை கேட்டதுவரை இன்றைக்கு அறிமுகமான தகவல்கள் சரி என்றும் அடுத்து நடந்தது வேறு என்றும் அங்கு நின்றிருந்த ராஜகோபால் பிள்ளை ஒருவருக்கு மட்டுமே (ஸ்டான்லி குமரப்பாவுக்கும் அந்த லிபி தெரிந்திருந்தால், இருவருக்கு மட்டும்) தெரிந்திருந்த லிபியில் எழுதிய நூலில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே, மூன்றுமுறை கொலைத் தாக்குதல் முயற்சி நடைபெற்றதால் ராஜகோபால் பிள்ளையும் வேறு நான்கு தென்னிந்தியர்களும் காந்தியைப் பாதுகாத்துக் கடத்திவிட்டார்கள் என்றும் உலகம் காந்தியின் உடல் என்று கருதியது காந்தியைப் போன்ற தோற்றத்தில் இருந்த காந்தி பக்தரான கும்பகோணத்தைச் சார்ந்த வெங்கட்ராம முதலியார் என்பவரின் குண்டு துளைத்த உடலைத்தான் என்றும் காரியங்களைத் தக்க முறையில் செய்வதில் சாமர்த்தியம் கொண்ட ராஜகோபால்பிள்ளை காந்திலிபியால் எழுதப்பட்ட நூலில் எழுதியதை குமரப்பா பழைய ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்த கையெழுத்துப் படியை நான் படித்து முடித்தபோது எனக்கு எதுவும் புரியவில்லை. காந்திதான் என்று கூறும்படி தோற்றம்கொண்டிருந்த வெங்கட்ராம முதலியார் வேறுயாருமல்ல. முன்னாள் தமிழ்நாட்டுகாங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் சிறுவயது நண்பர். சேலத்தில் காந்தி ஆசிரமம் நடத்தியவர். அவர் காந்தியைப் போலவே 1869 அக். 2-ம் நாள் பிறந்து 1948 ஜன 30-ஆம் நாள் மறைந்தவர்.
என் சந்தேகங்களைக் கேட்கலாம் என்றால் குடுமிவைத்த தமிழ்ப்பேராசிரியரும் சித்தூரை விட்டுப்போய்விட்டார். திருப்பதிக்கு பயணத்தைத் தொடரலாம் என்று யோசித்தபோது அந்த நீண்ட பயணத்தின் மூலம் பேராசிரியரைச் சந்திக்க முடிந்தாலும் காந்தி பற்றிய தகவல்களின் உண்மையை வெளிக்கொண்டு வந்துவிடமுடியாது என்பது புரிந்தது. ஏனெனில் காந்திலிபியில் எழுதிய மூலநூல் எங்கும் இல்லாததுபோல் அதனைப் படிக்கத் தெரிந்த ஒருவர் அல்லது இருவரில் யாரும் இப்போது உயிருடன் இல்லை.
என்னை – அரசியலில் ஈடுபாடோ, கட்சிகளின் செயல்முறைகளில் நம்பிக்கையோ இல்லாத என்னை – காந்திலிபியும் என் தந்தை எழுதியதாகக் கூறிய ‘மைசூர் அரண்மனையின் நிழல்’ என்ற நூலும் ஆக்கிரமித்தன இப்போது. என் தந்தையின் அந்த நூலைப் பற்றி ராஜகோபால் பிள்ளை கூறிய நாளிலிருந்து தேடினாலும் அந்நூல் கிடைக்கவில்லை. அப்படி ஒரு நூல் எழுதப்படவில்லை என்று என் தந்தையின் கன்னட இலக்கிய நண்பர்கள் கூறுகிறார்கள். பல இடங்களில் தேடியும் கிடைக்காத என் தந்தை பாலகிருஷ்ண கௌடாவின் நூலும் இன்றில்லாத ஒரு லிபியில், இன்று உயிரோடில்லாதவர்களில் ஒருவர் எழுதிய, இன்னொருவர் ஆங்கிலத்தில் 19-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த எட்கார் ஆலன்போ எழுதுவதுபோல் மொழிபெயர்த்த மகாத்மா காந்தி யின் யாரும் நம்பாத சரித்திரத்தை அதன்பிறகு நான் யாரிடமும் கூறமுடியாத வனாய் ஆகிப்போனேன். அது, எனக்குத் தெரியும். மிகுந்த துருதிருஷ்டம்தான்.
இன்று – இந்த நிகழ்ச்சிகளும் நபர்களும் என் நினைவிலிருந்து மிகமிக தூரமாகிப் போன சுமார் முப்பது ஆண்டுகள் கழிந்த இன்று வயோதிகமும் அடிக்கடி அலைக்கழிக்கும் நோயும் பாதிக்குமளவு வேறேதும் பாதிக்கவில்லை என்பதையும் கூறத்தானே வேண்டும்.