சாருநிவேதிதா பக்கம்

கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து என் இதயப் பிரச்சினைக்காக அலோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மாதம் நாலாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் வரை ஆகும். இதை ஒரு தோழியும் அவருடைய சகோதரரும்தான் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில்தான் அந்தத் தோழி என்ன பணியில் இருக்கிறார் என்று தெரிந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பணி. இது போன்ற சேவை அடிப்படையிலான வேலைகளுக்கு ஊதியம் கம்மிதான். என்ன, இருபதாயிரம் இருக்குமா என்றேன். ஆமாம் என்றார். கூடவே மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுக்கிறேன், அதில் ஒரு இருபதாயிரம் வரும் என்றார்.

ஆக, இந்த நாற்பதாயிரம் ஊதியத்தில்தான் நீங்கள் எனக்கு நாலாயிரம் ஐயாயிரம் ரூபாய்க்கு மாத்திரை வாங்கி அனுப்புகிறீர்களா என்று கேட்டேன். என் குரலில் தெரிந்த கோபத்தைப் பார்த்து, “திட்ட ஆரம்பித்து விடாதீர்கள், இதைச் செய்வது என் வாழ்வில் எனக்குக் கிடைத்த பாக்கியம். என் வாழ்நாள் முழுவதும் இதைச் செய்வதற்கான பாக்கியத்தை நீங்கள் எனக்குத் தர வேண்டும்” என்றார். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் என் முகத்தில் உள்ள நரம்புகள் துடிக்க ஆரம்பித்து விட்டன. பேசினால் குரல் உடைந்து விடும் போலிருந்தது. உடனே போனைத் துண்டித்து விட்டேன். போனைத் துண்டித்தது பற்றித் தவறாக நினைக்க வேண்டாம், என்னால் பேசக் கூட முடியாமல் போய் விட்டது என்று மெஸேஜ் அனுப்பினேன்.

அந்தப் பெண்ணின் பெயரை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் அனுமதி இல்லாமல் செய்யக் கூடாது.

இவர்களுக்கெல்லாம் நான் என்ன செய்தேன்? என் எழுத்துக்கு இத்தனை பெரிய மரியாதையையா செய்கிறார்கள்? இதை விடவா புக்கரும் நோபலும் பெரியது?

முகநூலில் தொகுத்தவர் : ஆர.கந்தசாமி

One Comment on “சாருநிவேதிதா பக்கம்”

  1. ஐயா,உங்கள் வார்த்தைகள்.என் கண்களிலும் நீரை வரவழைத்து விட்டது.
    இப்பேர்ப்பட்ட நல்ல உள்ளங்கள் நம்முடன் வாழ்வதால் தான் நாம் தினமும் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும், நல்ல வர்கள் வாழ்க வளமுடன்.

Comments are closed.