புகார் அற்றவன் மீதான புகார்கள்/எஸ் வி வேணுகோபாலன்

அடம்
பிடிவாதம்
சிரித்துக் கொண்டே
கேட்டுக் கொள்வான்
கேட்க மாட்டான்
சொன்ன சொல் எதுவும்…
ஏதோ இலையை அரைத்து விழுங்குவான்
என்னமோ மாத்திரை
போட்டுக் கொள்வான்
அலையாதேன்னு
முதல் நாள் சொல்லியும் கேளாது
புறப்பட்டுப் போனவனைப்
பயணத்தினூடே
பறித்துக் கொண்டது நெஞ்சு வலி

……..

இப்போதும்
கேட்காத
காதுகளோடும்
மேலே மேலே வந்து விழும்
மாலைகளின் புழுக்கம்
பற்றிய புகார் இல்லாமலும்
யாருக்கேனும் உதவிக் கொண்டே இருந்ததன்
செருக்கு இல்லாமலும்
நிரந்தரத் துயிலில் !

ஏதும் கேட்காத –
சொன்னது ஏற்காத
மனிதனோடு
இன்னும் வாழத் துடிக்கும் நட்புறவுகளின்
முரட்டு நேசம்
குமுறிக் கொண்டிருந்தது
பறையோசைக்குப் போட்டியாக!

6 Comments on “புகார் அற்றவன் மீதான புகார்கள்/எஸ் வி வேணுகோபாலன்”

    1. மிகவும் உருக்கமான பதிவு மற்றும் கவிதை. சமுதாயத்திற்கு தன் வாழ்நாள் எவ்வளவு பயனுள்ளது என்பதை இவர் போன்றவர்கள் உணர்வதேயில்லையோ?

  1. பழகிய நெஞ்சினுக்கு தெரிந்த வலி,
    கவிதையைப் படிப்பவர்களுக்கும் ஏற்பட்டது தோழரே.ஆழ்ந்த இரங்கல் அமைதியானவருக்கு.

Comments are closed.