அற்புதமான மனிதர்கள்…./வாசுதேவன்

படிப்பை முடித்தவுடன் முதல் வேலை வட ஆந்திரா கரீம் நகரில் என் பணியை தொடங்கினேன். கடுமையான வறட்சி, ஏழ்மையான பின் தங்கிய மாவட்டம். (சிகரெட்டுக்கு வத்தி பெட்டி தேவையில்லை. உதட்டில் வைத்தால் பற்றிக்கொள்ளும் அந்தளவுக்கு சூரியன் ருத்ர தாண்டவம் ஆடும் பிரதேசம்). நான் வந்து சேர்ந்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். தமிழர்கள் வேட்டையாடப்பட்டார்கள். என்னை காப்பாற்றியது ஒரு இஸ்லாமியர் குடும்பமும் சில நக்ஸல்பாரிகளும். இன்று நான் உயிரோடு இருப்பதற்கு அவர்கள்தான் காரணம்.
வட ஆந்திரா , ஓரிஸா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் , மேற்கு வங்காளம் இந்த மாநிலங்களை இணைத்தது தண்டகாருண்யா வனப்பிரதேசம். இயல்பாகவே நக்ஸல்பாரிகளுக்கு தோதான இடம். 80_90 கள் நக்ஸல்பாரிகள் கை ஓங்கிய காலம். கொண்டப்பள்ளி சீதாராமைய்யா தலைமையில் நக்ஸல்பாரிகள் எழுச்சி பெற்ற காலக்கட்டம். அப்பா ராவ், கணபதி, கொண்டல் ரெட்டி, ராமகிருஷ்ணா போன்ற நக்ஸல் தலைவர்கள் விஸ்வரூபம் எடுத்தார்கள். ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்பிற்கு தள்ளப்பட்ட மக்களுக்காக ஆயுதம் ஏந்தியவர்கள்.

ராமகுண்டம், கரீம் நகர், கோதாவரி நதியோரம், எல்லூரு, மனுகுரு, மேடக் போன்ற மாவட்டங்கள் கனிம வளம் அதிகமாக இருக்கும் நிலப்பரப்புகள். நிலக்கரி சுரங்கள். சிமெண்ட் தொழிற்சாலைகள். லட்சக்கணக்கான தொழிலாளர்கள். அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. மறுபுறம் பண்ணையார்கள் எளிய மக்களை சுரண்டினார்கள். மக்கள் நக்ஸல்பாரிகள் பக்கம் நின்றார்கள். அரசு/அரசு இயந்திரங்கள் நக்ஸல்பாரிகளை ஒடுக்க ஆயுதங்களை குவித்தார்கள்.

தினம் ஓரிரு என்கவுண்டர்கள் சர்வ சாதாரணமாக நடக்கும். தோட்டாக்கள் பறக்கும். நிலக்கரி சுரங்கத்தில் நடக்கும் இந்த என்கவுண்டர்களை பலமுறை கலவரத்துடன் நேரில் பார்த்திருக்கிறேன். பக்கத்து மாவட்டம் வாரங்கல்(Warangal). பெயர் பெற்ற ஆர்.ஈ.சி. (REC) பொறியியல் கல்லூரி அமைந்திருக்கும் இடம். நக்ஸல்பாரிகளின் சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட பல மாணவர்கள் இயக்கத்தில் இணைந்தார்கள்.
அந்த மாணவர்களில் ஒருவர்தான் தற்செயலாக எனக்கு அறிமுகமானவர். தமிழ்நாட்டில் பிறந்தவர். படிப்பை பாதியில் நிறுத்தி இயக்கத்தில் இணைந்தவர். அவர்தான் எனக்கு கத்தாரை அறிமுகப்படுத்தியவர். பெல்லம்பள்ளியில் ஆயிரக்கணக்கான எளிய மக்கள் காத்திருக்கிறார்கள். மேல் உடம்பில் சிவப்பு கம்பளம். கையில் தடி. கம்பீரமாக மேடை ஏறினார். ”பாரத தேசம் என்பது தண்டகாருண்யம்” என முழங்கினார். மக்கள் ஆரவாரத்துடன் நடனமாடினார்கள். அதற்குப்பிறகு இரண்டு மணிநேரம் பல பாடல்களை பாடினார். மக்கள் நகரவே இல்லை. அவருடைய‌ குரல் வசீகரமானது. ஒருபுறம் நக்ஸல்பாரிகள் ஆயுதமேந்தி மக்களுக்காக போராடினார்கள். மறுபுறம் கத்தார் பண்பாட்டு தளத்தில் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார். பலமுறை அவரை கைது செய்ய முயன்றார்கள். எளிய மக்களிடம் அவருடைய செல்வாக்கு அபரிதமானது.கூடுதலாக மனித உரிமை போராளிகள் வழக்கறிஞர்கள் பால கோபால், கண்ணபிரான் போன்றவர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

அவருடைய பல நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். ஒரு விஷயம் பிரமிப்பாக இருக்கிறது.அவருக்காக கூடிய கூட்டத்தை விவரிக்க முடியாது. எளிய பாடகர். ஒட்டுமொத்த ஜனத்தொகையையும் தன் பாடலால் வசியப்படுத்தியவர். 90 களில் தன்னை அம்பேத்கரியர் என அறிவித்துக்கொண்டார். சில வருடங்களுக்கு முன் க்ராம்ஸியை மேற்கோள் காட்டி வெகுஜன உளவியலை புரிந்துகொண்டால்தான் மாற்றம் சாத்தியம் என்றார். வெகுஜன மக்களின் நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் எனக்கூறி ஆன்மீக பாதையில் சென்றார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பூர்வ குடி மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மகா கலைஞன்!
கத்தாரை அறிமுகப்படுத்திய அந்த மாணவன் பின்னாளில் ராமகுண்டம் நிலக்கரி சுரங்கத்தில் கொல்லப்பட்டான். அடுத்த நாள் நாளேடில் புகைப்படத்துடன் அவனுடைய‌ தோள் பையில் நான் பரிசளித்த சார்த்தரின் ‘Being and Nothingness’ என்ற நூலையும் பார்க்கமுடிந்தது. நேற்று கத்தார் காலமானார். அற்புதமான மனிதர்கள்….