கொலு பொம்மைகள்/நாகேந்திர பாரதி


புரட்டாசி அமாவாசை அன்னிக்கி முதல் நாள் பெட்டிக்குள் இருக்கிற எங்களுக்கெல்லாம் விடுதலை. அங்க வைக்கோலால் ஏற்பட்ட முதுகு அரிப்பு எல்லாம் போயி, மறுநாள் அமாவாசை அன்னிக்கி கொலு படிக்கட்டில் ஜம்முன்னு நிக்கிறது சுகமா இருக்கும். சுத்தி கலர் லைட் வேற ஜொலிக்கும். புதுசா மால்லே இருந்து வாங்கி வந்த அம்மன் சாமி பொம்மைகளுக்கு விசேஷக் கவனிப்பு கொடுப்பாங்க. எங்களுக்குக் கொஞ்சம் பொறாமையா தான் இருக்கும் .

அப்புறம் மாமி, கொலு பார்க்க வர்றவங்க கிட்ட எல்லாம் ஒப்பிக்கிற வசனம். ‘இந்த செட்டு புதுசா வாங்கினது.மால்லே ஏசி இருந்தாலும் புது பட்டு புடவை வேற கசகசன்னு இருந்துச்சு. இதைத் தேடிப் புடிச்சி வாங்குறதுக்குள்ள அவரு வேற பத்துத் தடவை இந்த புது ஐபோன்னுக்கு கால் போட்டாரு’ என்று பொம்மையோடு சேர்த்து மற்ற புது வரவுகளை பற்றியும் , இல்லை, புது செலவுகளை பற்றியும் ஒரு பெரிய புராணமே பேசுவார்.

‘ மாமி வீட்டு சுண்டல் நல்லா இருக்குன்னு வந்து இருந்தா இந்த வசனங்களையும் கேட்கத்தானே வேணும் ‘ அத்தோடு வீட்டு மருமகளின் சுருதி பிசகுன பாட்டையும் கேட்டுத்தான் ஆகணும். அதுவும் இப்ப இசைக்கெல்லாம் வாட்ஸப் க்ரூப் இருக்கே .அதுல போய் இந்த அம்மா பாடி அவங்க பாடுன பாட்டுக்கெல்லாம் கேட்காமலே ‘பாவம்னு’ பத்து தம்ஸ்அப் விழுந்துருக்க, அவங்க பிரமாதமா பாடுறோம்னு நினைச்சுக்கிட்டு இங்க பாடுவாங்க அதையும் சகிச்சுக்கணும்.

இது தவிர அவங்க ஆம்படையான், மாமியோட பையன் வேற. நானும் அந்த க்ரூப்பிலே இருக்கேன் நானும் பாடுவேன். என் பாட்டைக் கேட்டுத் தினசரி அங்கே ‘ஆஹா ஓஹோ ‘ ன்னு பாராட்டுவாங்க. அப்புறம் அங்கெ இருக்கிற ஒருத்தர் ஒருத்தர் , அவரு சின்ன புள்ளைல இருந்து கேட்ட பாகவதர், டி எம் எஸ் இருந்து ஆரம்பிச்சு ஜேசுதாஸ் , ஹரி ஹரன் வரைக்கும் என்னோட குரல் சாயலோடு பாடுறாங்க ‘ ன்னு ரெண்டு பக்கத்துக்கு கமெண்ட் போட்டு அரை மணி நேரம் பேசியிருக்காரு ‘ ன்னு சொல்லி அதை வேற காமிப்பாங்க. கேட்க வைப்பாங்க. அவர் ஒவ்வொரு நிமிஷத்திற்கும் நடுவிலே அஞ்சு நிமிஷம் அமைதி காத்து பேசி முடிக்கறதைக் கேட்குறதுக்குள்ளே நமக்கு சுண்டல் பசி எடுக்க ஆரம்பிச்சுடும்.

அதோட விடுவாங்களா . அப்புறம் அவங்க வீட்டு பேரனும் பேத்தியும் பண்ணி வச்சிருக்கிற அந்த மண்ணு தோட்டம், வீடு இதப்பத்தி எல்லாம் ஒரு வண்டி வசனம் வரும் . அதோட இதுக்கும் கூட கலைக்கும் கூட ஏதோ வாட்சப் க்ரூப் இருக்காமே. . அதுல போயி இவங்க போட்ட போட்டோக்களை எல்லாம் காண்பிப்பாங்க. அதுக்கு ஒரு நாலு அஞ்சு பேரு ‘பிரமாதம்,. நல்லா இருக்குன்னு ‘சொல்லிட்டாங்களாம் அதையும் பெருமை அடித்துக்கொண்டு ,அங்கே ஒரே இசை , கலை வாட்சப் க்ரூப்புகளிலே இவங்க பெருமை ‘ பத்தி தான் பேசிக் கிட்டு இருப்பாங்க .

பிள்ளைங்களோட பெருமை சொன்னாதானே தெரியும் . படிப்புல மக்கா இருந்து பாஸுக்கு பார்டர் மார்க் வாங்கி இருந்தாலும் இந்த கலை வண்ணமாவது இருக்கேன்னு காட்டுறதுக்கு இப்படி எல்லாம் பண்ணிக்குவாங்க . க்ரூப் ஆரம்பிச்சவங்க நல்லது தானே பண்ணி இருக்காங்க.. பாடுற திறமை, படம் வரையற திறமை இருக்கோ இல்லையோ , ஒருத்தரை ஒருத்தர் பாராட்டுற திறமையை வளர்த்து விட்டுருக்காரேன்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான். இல்லீன்னா பாத்ரூம் லே மட்டும் பாடிக்கிட்டு இருந்த , அந்த சுவர்லே நகத்தால் படம் வரைஞ்சுக்கிட்டு இருந்த இத்தனை பேருக்கு இவ்வளவு சந்தோசம் வந்திருக்குமா. நல்ல விஷயம் தானே. அவங்களை வாழ்த்தலாம்.

அப்புறம் இன்னொரு விஷயங்க. ஆயுத பூஜைக்கு ரெண்டு நாள் முன்னாடி இந்த மாமியும் மருமகளுமா மத்தவங்க வீட்டுக்குக் கொலு பாக்குறதுக்கு ஒரு அவசர ட்ரிப் அடிப்பாங்க பாருங்க . பாத்துட்டு வந்து புரணி பேசுவாங்க .

‘அலமேலு விட்டு போளியிலே இனிப்பு பத்தாது . சந்திரிகாவுக்குப் பொங்கல் பண்ணவே தெரியலே.

கல்லு வேற கிடந்தது. வேணி தந்த ப்ளவுஸ் பிட் சரியில்லை. சுமதி தந்தது , அது என்ன குங்கும டப்பாவா, ஓரத்திலே நெளிஞ்சு இருந்துச்சு . ‘ இப்படி பார்க்கப் போனவங்க கொடுத்த பணடங்களைப் பத்தி எல்லாம் பேசிகிட்டு இருப்பாங்க. இதே மாதிரி தான் இவங்க வீட்டுப் புரணியும் அங்கே ஓடுறது தெரியாம.

இதெல்லாம் விடுங்க . விஜய தசமி அன்னிக்கு ராத்திரி பூஜை பண்ணிட்டு சாஸ்திரத்துக்கு எங்களை எல்லாம் கவுத்து போடுவாங்க பாருங்க. கவுத்து போட்டுட்டு துக்கப் படுவாங்க .’ பிள்ளைங்க மாதிரி பார்த்துட்டு திருப்பி எல்லாத்தையும் பொட்டிக்குள்ள போடணும்னு நினைக்கிறப்போ மனசே கேட்க மாட்டேங்குது ‘. இப்ப எங்க கண்களில் இருந்தும் கொஞ்சமா கண்ணீர் கசியுங்க.

——————————————————-