
இதற்கு முன் கேட்ட கதையை
இப்போது வேறொருவர் சொல்வதைக் கேட்க துவங்கியுள்ளேன்
‘அப்படியே இருக்கட்டும்’ என்று
ஒவ்வொரு வரியின் கடைசியில் சொல்வதை
நிறுத்தவே இல்லை
போன முறை கேட்ட போதிருந்த
ஓரிரு பெண்களும் ஆண்களும்
கதையை விட்டு வெளியேறுவது
எனக்கு புலப்பட்டுக் கொண்டே இருக்க
புதிதாக யாரேனும் வெளியிலிருந்து
நுழைந்துள்ளார்களா என்று கவனித்தேன்
என்னருகில் ஒரிருவர் அமர்ந்திருப்பதை உணர்ந்தேன்
கதையின் நடுபகுதியில் சிறிதுநேரம்
சொல்லிக் கொண்டிருந்த குரல் மறைந்துவிட்டது
மீண்டும் வேறொரு குரல் கதையைத் தொடர்ந்தது
ஆனால் கதையை முடிவிலிருந்து
பின்னோக்கி கேட்பதாக எனக்கு பட்டது
புதிதாக புகுந்த ஒரு பெண்ணைத் தவிர
மற்றபடி அதே கதைதான்
என்றோ நோக்கின்றி படித்து நிறுத்திய
புத்தகம் அலமாறியிலிருந்து
கீழே விழுந்தது ஒரு தற்செயலென
என்னால் ஏற்க முடியவில்லை
விழுந்திருக்கும் புத்தகத்தை
அதே இடத்தில் வைக்க எழுகையில்
கூடவே ஒரு பெண்ணும் எழுந்தார்
இப்போது மேசைமீது
அப்புத்தகத்தை திறந்த நிலையில் வைத்தேன்
மின்வெட்டு இருளில்
பெண்குரலில் கதை ஒலிக்க ஆரம்பித்தது.
