பாஸ்டனில் ஒரு காலை/ஜெயராமன் ரகுநாதன்

எனக்கும் ஒரு டாக்ஸி டிரைவருக்கும் சம்பாஷணை

நடந்த இடம் பாஸ்டன். வருடம் 2003. நேரம் காலை ஆறு மணி!

உங்களுக்கு இங்கே கொஞ்சம் விவரணை தேவைப் படும்

அந்த ஐடி கம்பெனியில் வைஸ் பிரெசிடெண்ட்டாக சேர்ந்தவுடன் முதலில் நான் செய்தது எங்களின் பெரிய குரூப்புக்குள்ளாகவே சக்கரவட்டமடித்துக் கொண்டிருந்த பிஸினஸை வெளியுலகத்துக்கு கொண்டு வரச்செய்த்துதான்.

அதற்கென நான் தேர்ந்தெடுத்தது ஆரக்கிள் ஈ ஆர் பி (Oracle ERP) என்னும் நிறுவனம்-தழுவிய சிஸ்டம். குர்காவ்னில் நான் போய் சந்தித்த இந்தியாவின் ஆரக்கிள் தலைவர், ஏதோ ஒரு தாஸ் குப்தா, என்னை நாய் கொண்டு வந்த வஸ்துவைப்போல பார்த்து, ”இங்கெல்லாம் இன்னிக்கு ஒண்ணும் கிடையாது! போய் அடுத்த வீடு பாரு” என்று விரட்டிவிட்டார்.

படு சிரத்தையாய் அடுத்த பில்டிங்கில் இருக்கும் – சிக்னேச்சர் டவர்ஸ் என்னும் அந்த அபார பில்டிங்கில் நான் சந்தித்த அபார மனிதர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும், முக்கியமாக ப்ரீதி பஸின் பற்றி, தனித்தனி வ்யாசமே எழுதலாம் – மைக்ரோசாஃப்டில் நுழைந்து கம்பெனி சார்பில் பார்ட்னராகக் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்தேன்.

அடுத்த ஏழெட்டு வருடங்கள் என் காரியரில் மைக்ரோசாஃப்டின் மகா விற்பனை சூத்திரங்களை நான் கற்றுக்கொள்ள முடிந்த, சத்யா நடெல்லாவைசந்தித்து அளவளாவிய, டேமி ராலெர் என்னும் ஆஞ்செலினா ஜோலி சாயல் சேல்ஸ் டைரக்டருடரான மிக முக்கிய டெக்னிகல், அய்யோ, டெக்னிக்குகள் இல்லை, சாஃப்ட்வேர் டெக்னிகல், அறிவார்ந்த வருடங்கள்.

உலகெங்குமுள்ள மைக்ரோசாஃப்டின் பார்ட்னர்கள் அமெரிக்காவின் ஏதாவது ஒரு நகரத்தில் கூடி மூன்று நாட்கள் செமினார், ப்ரெக் அவுட் செஷன், புது டெக்னாலஜி அறிமுகம் என்று ரகளையாக பேசிக்களித்துவிட்டு, புது விற்பனை டார்கெட்டுடன் அமெரிக்காவில் கிடைக்கும் இச்சி பிச்சி சமாசாரங்களை சில்லறை டாலர்களுக்கு வாங்கிக்கொண்டு ஜெட் லாகில் கண்கள் சிவக்க ஊர் வந்து சேருவோம். அதன் ஒரு பகுதியாகத்தான் பாஸ்டன் கூட்டத்தில் சேல்ஸ் டைரக்டர் டேமி ராலருடனான சந்திப்பு.

கிட்டத்தட்ட எண்ணூறு பேரு கூடியிருந்த செமினார் ஹாலில் நான் எதிர்பாராத ஒரு கணத்தில் “இந்தியாவில் முதல் முதலாக மைக்ரோசாஃப்டின் டைனமிக்ஸ் பார்ட்னரானது மட்டுமில்லாமல் போன வருடத்திய விற்பனையில் இந்தியாவில் முதல் இடத்தை பிடித்த ………… சார்பாக அதன் வைஸ் பிரெசிடெண்ட் ரகுநாதனை மேடைக்கு..” அழைத்து, கை குலுக்கி ஷீல்டு கொடுத்து எங்கள் கம்பெனிக்கு ஸ்பெஷல் ஸ்டேடஸ் கொடுத்த அபார நிகழ்ச்சி.

அந்த புகழ் குளிர்ச்சியில் அன்று இரவு தூக்கம் வராமல், கூடவே அதிகாலை ஏழு மணிக்கெல்லாம் வாஷிங்டன்னுக்கு ப்ளேன் பிடிக்க வேண்டிய அவசியத்தில் இரவே டாக்ஸிக்கு ஃபோன் பண்ணி புக் பண்ணினேன்.

பேசிய பெரியவர் நடுங்கும் குரலில் சரியாக ஐந்தரைக்கு உங்கள் ஹோட்டலில் இருப்பேன். ரெடியாக லக்கேஜுடன் வந்து விடுங்கள் என்று சொல்லியிருந்தார்.

காலையில் பார்த்தால் ஒரு பெரிய ஔடி A 4 மாடல் நின்று கொண்டிருக்க, டிரைவர் சீட்டில் ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க ஆசாமி. எனக்காக காரின் டிக்கியைத்திறக்க இறங்கின போது பார்த்தால் உயர்தர கோட் சூட். மிக நேர்த்தியாக வாரப்பட்ட தலை, அயர்ன் பண்ணி கசங்காத முழுக்கை சட்டை ஐவி லீக் பல்கலைக்கழக டை.

எனக்கு ஆச்சரியம். ஆனால் ஒன்றும் பேசவில்லை. கார் கிளம்பினதும் அவரே பேசினார்.

“நீங்கள் இந்தியாவா?”

“ஆம்!”

“உங்களின் சாஃப்ட்வேர் முன்னேற்றம் பிரமிக்க வைக்கிறது!”

“உண்மைதான்!”

“உங்களின் இஞ்சினீயரிங் படிப்பு உயர்தரமாக இருக்க வேண்டும். அதுதான் அதிகம் பேர் அமெரிக்கா வருகிறார்கள். நன்றாகவும் முன்னேறிவிடுகிறார்கள்!”

நான் அமைதி காத்தேன்.

பிறகு டாபிக் மாறி பாஸ்டனில் முன் தினம் இடிந்து விழுந்திருந்த பங்கர் ஹில் மெமோரியல் பாலம் பற்றியும், நேரத்திற்கு வந்து சேராத யுனைட்டெட் விமானங்கள் பற்றியும் பேசினோம்.

ஏர்போர்ட் வந்தவுடன் காசைக்கொடுத்துவிட்டு இறங்கினேன்.லக்கேஜை எடுத்துக்கொண்டு தாங்க்ஸ் என்று சொல்லி அவசரமாக நகர்ந்தேன்.

இந்த அமெரிக்க ஏர்போர்ட்டுகளில் செப்டெம்பர் 9 தாக்குதலுக்குப்பிறகு எவ்வளவு நேரம் ஆகும் என்று சொல்லுவதற்கில்லை. டிரைவர் என்னிடம் ஏதோ சொல்ல வர, அலுப்புடன் நின்றேன்.

“மன்னிக்கவும்! நேற்று உங்களிடம் பேசினது என் அப்பா. அவர்தான் டாக்ஸி ஓட்டுவார். ஆனால் அவரால் இன்று வர முடியவில்லை. அவருக்கு லேசாக ஜுரம் வந்துவிட்டது. அதனால்தான் நான் வந்தேன்!”

“ஓ அதனால் என்ன, நீங்களும் சரியான நேரத்துக்கு வந்துவிட்டிர்களே!”

“நீங்களும் நேற்று மைக்ரோசாஃப்ட் செமினாருக்கு வந்திருந்தீர்களா?”

நீங்களும்..! அந்த உம்!

“ஆமா! உங்களுக்கு எப்படி….?”

“அங்கே உங்களை நான் பார்த்தேன். அதான் கேட்டேன்!”

”நீங்கள்….?”

“ஸ்கேலபிள் சிஸ்டம்ஸ்!”

“ஆம் பார்த்தேன். அந்தக்கம்பெனியின் ஸ்டால் வைத்திருந்தார்களே! டிரான்ஸ்போர்ட் லாஜிஸ்டிக்ஸ் சாஃப்ட்வேர்!”

“கரெக்ட்! அதுதான் என் கம்பெனி!”

“நீங்க..?”

“அதன் ஃபௌண்டர் எம் டி! மைக்கல் பாஸ்மா!” நைஸ் மீட்டிங் யூ!”

அந்த ஔடி A 4 வழுக்கிக்கொண்டு போய் வளைந்து திரும்பும் வரை, அதன் ஒளிரும் பின் பக்க சிவப்பு விளக்கு மறையும் வரை, அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.