கூகை குழறிப் பாராட்ட….

கோவை எழிலன்

இலக்கிய இன்பம் 9

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் வரும் அவலச் சுவை மிக்க பாடல் இது.

சீவகனின் தந்தையான சச்சந்தன் கட்டியங்காரனால் ஏமாற்றப் பட்டு தான் கொல்லப் படுவதற்கு முன் தன் மனைவியை தான் செய்து வைத்திருந்த மயிற்பொறியில் ஏற்றித் தப்பிக்க வைக்கிறான். அப்பொறி சுடுகாட்டில் இறங்குகிறது. அங்கு சீவகன் பிறக்கிறான்.

விசயை அரண்மனையில் பிறக்க வேண்டிய தன் மகன் இங்கு நரிகளின் ஓலமே இன்னிசையாவும் பிணம் எரியும் வெளிச்சமே திருவிளக்காகவும் பேய்களின் ஆட்டமே நடனமாகவும் ஆந்தைகளின் அலறலே வாழ்த்தொலியாகவும் கொண்டு சுடுகாட்டில் பிறக்கும் கோலத்தைக் கண்டு வருத்தமுடன் புலம்புகிறாள்

“வெவ்வாய் ஓரி முழவாக
விளிந்தார் ஈமம் விளக்காக
ஒவ்வாச் சுடுகாட்டு உயர்அரங்கின்
நிழல்போல் நுடங்கிப் பேயாட
எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக்
கூகை குழறிப் பாராட்ட
இவ்வா றாகிப் பிறப்பதோ
இதுவோ மன்னர்க்கு இயல்வேந்தே”