அன்று…..


உமா பாலு


குழந்தைகள் விருப்ப வண்ணங்கள் கேட்டறிந்த பின் தீபாவளிக்கு இரு மாத முன்னரே ஜவுளி எடுக்க அம்மா அப்பா கடைக்கு சென்றதும் கனவுகளோடு காத்திருப்போம் வரும் வரை

பாட்டிக்கும் ஒன்பது கஜத்தில் மேட்டூர் மல் உண்டு டெய்லர் வீட்டுக்கு வந்து அளவுகள் எடுத்து துணிகளை வாங்கிச் சென்றதுமே தீபாவளி கவுன்ட் டவுன் ஆரம்பித்து விடும் கன ஜோராய்.

தினம் தினம் ஒரே பெரிய போர்வைக்குள் படுத்த படி பெண் பிள்ளைகளுக்கு மத்தாப்பூ கனவுகள் பசங்களுக்கு சரவெடி ராக்கெட்டுகள் பத்து நாள் முன்பு பட்ஜெட் போட்டு பட்டாசு லிஸ்ட் தயாராகும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி மரப் பெட்டியில் வைத்து அவ்வப்போது திறந்து பார்த்து மகிழ்ந்து இருப்போம்.

நாலு நாள் முன்னர் பாட்டியும் அம்மாவும் பல வகை பஷணங்கள்
பட்டியல் படி செய்ய அவ்வப்போது தரும் தூள் பஷணங்கள் ஸ்வீட்
இவைகளுக்காக சுற்றி சுற்றி வருவோம் இடையில் பல முறை நினைவுறுத்திய
பின்னர் இரண்டு நாள் முன்னதாக தைத்த புது துணிகளோடு சந்தோஷத்தையும் தந்து விட்டுப் போவார் டெய்லர்.

பாட்டிக்குத் தெரியாமல் அவசரமாக அரை ட்ரையல் பார்த்து விடுவோம்
தீபாவளிக்கு முதல் நாள் பட்டாசுகள் பங்கு பிரிக்கப்படும் தகராறுகள் ஏமாற்றுகள் ஓரவஞ்சனை எல்லாம் அரங்கேறி புஸ்வாணம் ஆகிவிடும் நொடியில்

அத்தை,சித்தி, அக்கா என ஏதாவதொரு தலை தீபாவளி தம்பதி
குதூகலத்துடன் வந்திறங்கும் ராத்திரியே பட்டாசுகள் வெடித்து லேட்டா தூங்கி ஒரு மணிக்கு இரண்டு மணிக்கு என எழுந்து மணி பார்த்து ஏமாந்து வாசலில் நாதசுவர மேள சத்தம் கேட்டு நாலரை ஐந்துக்கு விழித்தெழுந்து பார்த்தால் அம்மா முன்னரே எழுந்து , துணிகள் ,பட்டாசுகள் ,பஷணங்கள் வெற்றிலை மிளகு போட்டு காய்ச்சிய எண்ணெய், சந்தனம் குங்குமம் தடவிய புது துணிகள் ,இவற்றை சாமி அறையில் அடுக்கி வைத்து கோலமிட்ட மனைப்பலகைகளுடன்
காத்திருப்பாள்

குளித்து அப்பா கையில் வாங்கி புதியது உடுத்தி பட்டாசுகள் வெடிக்கும் போது பூலோகம் சுவர்க்கம் ஆகும்.

காலை பத்து மணியளவில் பக்கத்து விட்டுக் குப்பையை விட நாம் வாசலில் பட்டாசு குப்பை அதிகம் இருந்தால் மனம் பெருமிதத்தில் விம்மும் நாம் வெடித்து தீர்க்கும் வரை வேடிக்கை பார்த்து விட்டு பிறகு தன் பட்டாசுகள் வெடித்து
நம்மை வெறுங்கை பிசைய வைத்து வயிற்றெரிச்சல் கொட்டிக் கொள்ளும் உடன் பிறப்புகளும் உண்டு.

நடுவே பாட்டி வந்து சாஸ்திரத்துக்கு ஒரு வெடி போடுவார் மதியம் மாலை வெடிக்காத பட்டாசுகள் அரங்கேறும் இரவு கார்த்திகைக்காக அம்மா எங்கோ ஒளித்து வைத்திருக்கும் பட்டாசுகளை நினைத்தபடி உறங்கச் செல்வோம்.

2 Comments on “அன்று…..”

  1. சிறப்பாக வந்துள்ளது. சொந்த அனுபவமாக வாசகர் படிக்கும் மொழியில் அருமையாக உள்ளது.

    வாழ்த்துகள்

    வேணு

Comments are closed.