
தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ கதையை திரும்பவும் எடுத்துப் படிக்க வேண்டிய தூண்டுதல் அவருடன் பேசும்போது ஏற்பட்டது.
நான், ‘அசோகமித்திரன்தான் சிறந்த சிறுகதை ஆசிரியர்’ என்று சொன்னபோது, அவர், ‘தி.ஜானகிராமன்’ என்றார்.
காரணமும் சொன்னார். “அது என்னமோ தி.ஜா வைப் படிக்கும்போது ஏதோ புரியாத பரவசம் உண்டாகிறது. வாழ்க்கையின் அர்த்தம் கிடைக்கிறது. சிலிர்ப்பு அற்புதமான கதை. நான் அந்தக் கதையை பல தடவைப் படிச்சிட்டேன்.
இப்ப அந்தக் கதையைப் படிச்சாலும் உருக முடிகிறது.’ இதைக் கேட்டவுடன் தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ கதையை உடனே படிக்க வேண்டுமென்று நினைத்தேன்.
ரயில் பயணத்தை வைத்துக்கொண்டு தி.ஜா எழுதிய இன்னொரு கதை என்று நினைக்கிறேன். ஏற்கனவே அக்பர் சாஸ்திரி என்ற கதையைப் படித்திருக்கிறேன்.
இது இரு குழந்தைகளைப் பற்றிய கதை.
கதைசொல்லி பெங்களூரிலிருந்து தன் பையனை அழைத்து வருகிறான்.
கும்பகோணம் வரை போக வேண்டும். மாதம் ரூ.100 வாங்கிக்கொண்டு சாதாரண உத்தியோகத்தில் இருக்கிறவன்.
மாமா சம்சாரம் ஊருக்கு வந்தபோது கதைசொல்லியின் பையனை பெங்களூருக்கு அழைத்து வந்து விட்டாள். ஏதோ காரியமாக பெங்களூர் சென்ற கதைசொல்லி தன் ஊர் கும்பகோணத்திற்கு பையனை திரும்பவும் அழைத்துப் போகிறான். மாமா பெங்களூர் ஸ்டேஷனில் அவராகள் இருவரையும் ரயில் ஏற்ற வருகிறான்.பையன் மாமாவைப் பார்த்து ஆரஞ்சு பழம் வாங்கித் தரச் சொல்கிறான். மாமா காதில் விழாத மாதிரி போக்கு காட்டுகிறான்..
மனித உறவு எப்படி இருக்கிறது என்பதை ஜானகிராமன் வெளிகாட்டுகிறார். பையன் மாமா வீட்டிற்குப் போனதை விமர்சிக்கிறான். பையனுக்கு மாமா வீட்டிற்குப் போனதால் எல்லாம் தெரிய வருகிறது. மாமாவிற்கு அப்பாவை விட சம்பளம் அதிகம் என்று.
பெங்களூரிலிருந்து வந்த வண்டி திருச்சியில் நிற்கிறது. பையனுக்கு கதைசொல்லியான அப்பா ஆரஞ்சுப் பழம் வாங்கித் தருகிறார்.
இன்னொரு காட்சி அரங்கேற்றம் ஆகிறது.
யாரோ ஓர் அம்மாள் கூட ஒரு சிறுமியை அழைத்துக்கொண்டு எதிர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ஜானகிராமன் அந்த அம்மாவின் தோற்றத்தை விவரிக்கிறார். எப்படி?
‘அம்மாளுக்கு நாற்பது வயது இருக்கும். இரட்டை நாடி.ருமேனிய மாம்பலம் மாதிரி பளபளவென்று இருந்தாள் என்று. பார்க்க பார்க்க கண்ணுக்கு நிறைவான தோற்றம் என்று.கூடவே அந்த அம்மாளுடன் வந்த பெண்ணைப்பற்றி வர்ணனையும் தொடருகிறது. எட்டு வயதிருக்கும் அந்தப் பெண்ணிற்கு. அந்தப் பெண்ணைப் பற்றிய விபரத்தைப் படிக்குமபோது அந்தப் பெண்ணைப் பற்றிய பரிதாப உணர்ச்சியை உண்டாக்கி விடுகிறார்.
அந்தப் பெண்ணின் பெயரை விசாரிக்கிறார் கதைசொல்லி.
‘காமாட்சின்னு பேரு குஞ்சுன்னு கூப்பிடுவா’ என்கிறது அந்தப் பெண்.
அந்தப் பெயர்களைக் கேட்டதும் கதைசொல்லிக்கு தன் குடும்பத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு பெயர்கள் ஞாபகத்திற்கு வருகிறது
“குழந்தை உனக்கு அப்பா அம்மா இருக்காளா?”
“இருக்கா.”
“அப்பா என்ன பண்றார்?”
“ஒண்ணாவது வாத்தியார்”
இன்னும் தன் குடும்பத்தைப் பற்றி சொல்கிறது. நாலு அக்கா, ரெண்டு அண்ணா, ஒரு தம்பி , அதன்பின் ஒரு தங்கை.
மோசமான குடும்ப சூழலை விவரிக்கிறது அந்தப் பெண்.
அண்ணா ஒருவன்தான் படிக்கிறான்.
“நீ வாசிக்கவில்லையா?”
இல்லை என்கிறது அந்தப்பெண் எங்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்கிறது அந்தப் பெண்.
அதற்காக அந்தப் பெண் வேலைக்குப் போகிறது. எது மாதிரி வேலை?
பத்துப் பாத்திரம் தேய்ப்பது. காபி, டீ போடுவது. இட்லி தோசுக்கு அரைப்பது. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது என்று ஜானகிராமன் வர்ணித்துக் கொண்டு போகிறார்.
மூணு வருஷம் ராமநாதையர்னு என்ற ஜட்ஜ் வீட்டிலே வேலை செய்கிறது.
அந்தப் பெண் குழந்தை கல்கத்தாவில் ஜட்ஜுற்கு உறவுக்கார வீட்டிற்குப் போகப் போகிறது. மாயவரத்தில் கல்கத்தா போகும் ஒருவரிடம் அந்தப் பெண்ணை அந்த அம்மாள் ஒப்படைக்கப் போகிறாள். ஜட்ஜ் சரியான கவனிப்பு கிடையாது அந்தப் பெண் குழந்தைக்கு.
ஜட்ஜ் வீட்டில் பணிபுரியும் அந்தக் குழந்தைக்கு சம்பளம்னு கிடையாது. ரெண்டு வேளை சாப்பாடு போடுவார்கள். தீபாவளிக்கு ஒரு ஜோடி பாவாடை சட்டை எடுத்துக் கொடுப்பார்கள் அவ்வளவுதான். அந்தப் பெண்ணின் குடும்பத்தின் ஏழ்மையைப் பறை சாற்றுகிறது.
தஞ்சாவூர் ஸ்டேஷனில் கதைசொல்லி தன் பையன் அந்தப் பெண்ணுடன் டிரெயினை விட்டு இறங்குகிறார். டிபன் சாப்பிட. அவர் பையனுக்கு அந்தப் பெண்ணை முதலில் தெரியவில்லை. யாருப்பா என்று கேட்கிறான்.
இந்த இடத்தில் ஜானகிராமன் இப்படி எழுதுகிறார்.
“இரண்டு அநாதிகளும் சாப்படும்போது எனக்கு இனம் தெரியாத இரக்கம் பிறந்தது” என்று.
ஓர் அநாதை (அவர் பையன்) இன்னும் இரண்டு மணி நேரத்தில் தாயின் மடியில் துள்ளப் போகிறது. இன்னொன்று (அந்தப் பெண்ணை சொல்கிறார்) தாயிடமிருந்து தூர தூரப் போய்க்கொண்டே இருக்கப் போகிறது.
கும்பகோணம் ஸ்டேஷன் வருகிறது. தூர தேசத்திற்குப் போகப் போகிற அந்தப் பெண் குழந்தையிடம் ஒரு ரூபாய் கொடுக்கிறார் கதைசொல்லி. அந்தப் பெண் குழந்தையிடம் கொடுக்க எனக்கும் பாத்தியதை உண்டு என்கிறார்.
இந்த இடத்தில் அந்தப் பெண்குழந்தையைப் பார்த்து கண் கலங்குறார். முகத்தைத் திருப்பிக் கொள்கிறார். அவருடைய பையன் ஆரஞ்சு பழத்தை அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறான். முதலில் வேண்டாங்கிறது. பின் வாங்கிக் கொள்கிறது.
டிரெயினை விட்டு இறங்கியவுடன் கதை சொல்லி பையனை தூக்கிக் கொண்டு வருகிறார்.
கடைசி பாராவில் தி.ஜா இப்படி எழுதுகிறார் :
‘எனக்கு என்னவோ வாரியணைத்துக் கொள்ள வேண்டும் என்று உடம்பு பறந்தது. தூக்கி எடுத்துத் தழுவிக்
கொண்டே போனேன். உள்ளம் பொங்கி வழிந்தது. அன்பையே,சச்சிதானந்தையே கட்டித் தழுவுகிற ஆனந்தம் அது.
ஏன் இப்படி ?எழதியிருக்கிறார்?
இந்தக் கதை நெகிழ்ச்சியைக் காட்டும் கதையாக இருக்கிறது. திருச்சியை விட்டு, அப்பா அம்மாவை விட்டு கல்கத்தா போகும் பெண் குழநதை தன் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தாமல் இருக்கிறது. தன் செய்கை மூலம் அன்பை வெளிப்படுத்துகிறது. கதைசொல்லி பையன் அந்தப் பெண்ணிடம் தன் அன்பை வெளிப்படுத்துகிறான். தான் ஆசையாய் கேட்டு வாங்கிய ஆரஞ்சுப் பழத்தைக் கொடுக்கிறான். சச்சிதானந்தையே கட்டித் தழுவுகிற ஆனந்தம் அது.

Miga arumaiYana kadhai!👏👌