எல்லாம் விளையாட்டு !

உமா பாலு

ஈரேழு உலகங்கள் படைத்து வைத்தாய்
எண்ணிலா உயிர்களை உலவ
விட்டாய்
காலம் என்றொரு அளவும்
வைத்தாய்
எல்லாம் உனது விளையாட்டு.

கடலுடன் நதியை கலக்க
வைத்தாய்
கானல் நீரையும் பாலையில்
வைத்தாய்
நதிவழி மானுடம் தழைக்க
வைத்தாய்
எல்லாம் உனது விளையாட்டு

மதியது எல்லா உயிர்க்கும்
வைத்தாய்
அவையவை சுயதர்மம் காக்க
வைத்தாய்
மனிதனை மட்டும் மறந்து
விட்டாய்
எல்லாம் உனது விளையாட்டு

ஆறறிவென்ற செருக்குடனவனை உலவ விட்டாய்
எல்லாம் தனதென எண்ண
வைத்தாய்
ஆயுதம் காகிதம் செய்ய
வைத்தாய்
எல்லாம் உனது விளையாட்டு

போரால் பேரிடர் விளைய
வைத்தாய்
ஞானம் விஞ்ஞானம் கற்க
வைத்தாய்
மெய்ஞானம் தேடாதே மறக்க
விட்டாய்
எல்லாம் உனது விளையாட்டு.

எல்லாமுன் விளையாட்டு என்பதனை
அறியச்செய்
தனதிப்பிரபஞ்சம் என்பதை
மறக்க வை
பிறவுயிர்ப் பேணி தழைக்கச்
செய்
போதும் உனது விளையாட்டு.