விருட்சம் நினைவுகள் 3


13.05.2018 – ஞாயிற்றுக்கிழமை

அழகியசிங்கர்

          ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் சிறுபத்திரி கையுடன் தொடர்புள்ள ஒருவருக்குத்தான் தோன்றும்.  பல மூத்த எழுத்தாளர்களை நீங்கள் பேட்டி எடுங்கள்.  அவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?  நான் எழுத ஆரம்பிப்பதற்கு முன் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன் என்று கூறாமல் இருக்க மாட்டார்கள்.

          முதலில் கையெழுத்துப் பத்திரிகை. பின் அச்சில் சிறுபத்திரிகை.  எழுத ஆரம்பிக்கிற எல்லோருக்கும் பெரிய பத்திரிகைகளில் இடம் கிடைப்பதில்லை.  பெரிய பத்திரிகையின் தரம் அந்த அளவிற்கு உயர்வானது என்பதற்காக அல்ல.  உதாரணமாக அசோகமித்திரன் எழுத்து பெரும் பத்திரிகைகளும் பிரசுரம் செய்யக்கூடிய எழுத்துதான்.  ஆனால் அதே நகுலன் எழுத்தை எந்தப் பெரிய பத்திரிகை பிரசுரம் செய்யும்?  அசோகமித்திரன் படைப்புகள் பெரும் பத்திரிகைகளில் இடம் பெற்றன.  அந்த அதிர்ஷ்டம் அவருக்கு இருந்தது.  

          1960 ஆண்டு வெளிவந்த ‘எழுத்து’ இதழில்தான் பிரமிள் படைப்பு வெளிவந்தது.  1939ல் பிறந்த பிரமிள் வயது 20தான் எழுத்து என்ற பத்திரிகையில் முதன் முறையாக எழுத ஆரம்பித்தது.  

          ‘சொல்லும் நடையும்’ என்ற பெயரில் எழுத்து பத்திரிகையில் வெளிவந்த பிரமிள் கட்டுரையை இப்போது படிக்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.  இவ்வளவு திறமையான ஒரு கலைஞனுக்கு வாழ்க்கை என்ன கற்றுக்கொடுத்தது.  வறுமையின் பாடத்தைத்தான்.

          ஐஏஎஸ் தேர்வு எழுதுகிற ஒருவர் கூட இம்மாதிரியான ஒரு கட்டுரையை எழுத முடியாது.  ஆனால் பிரமிள் தன் வாழ்நாள் முழுவதும் ‘எழுத்து’ என்ற சிறு பத்திரிகையில் எழுத ஆரம்பித்து வறுமையில் கஷ்டப்பட்டார்.  திறமை இருந்தும் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை.

          அதனால்தான் அசோகமித்திரனை யாராவது பார்க்கப் போனால், பார்க்க வந்தவரைப் பற்றி விசாரிப்பார்.  கல்லூரியில் படிக்கும் மாணவனாக இருந்தால், எழுதவே வராதே என்று துரத்தி விடுவார்.  அவரும் எழுத ஆரம்பித்து வறுமையில் திண்டாடிக் கஷ்டப்பட்டவர்.  

          ஏன் இந்தச் சிறுபத்திரிகையில் எழுதுவது என்பது சிக்கலாகி விடுகிறது?  என் கனவு பெரிய பத்திரிகை என்றாலும் அது நடக்காது என்று எனக்கு ஏனோ தெரிந்துவிட்டது.  அதற்கு முன்னால் ஒரு வேலையில் சேர்ந்தபிறகுதான் இது மாதிரியான பத்திரிகை விவகாரத்திற்குள் நுழைவது என்று தீர்மானித்தேன்.

          என்னுடன் எழுத வேண்டுமென்ற தாகத்துடன் இருந்தவர் என் பெரியப்பா பையன் சுவாமிநாதன் அவர்கள்.  அவரும் பெரிய முயற்சி செய்து பெரிய பத்திரிகையில் தன் படைப்புகளைச் சேர்ப்பது  என்று முயற்சி செய்தார்.  ஓரளவு வெற்றியும் பெற்றார். 

          எங்கள் இருவருக்கும் வேலைக் கிடைத்தது.  அதன்பின்தான் நாங்கள் எழுதுவது பற்றி யோசித்தோம்.  முடிந்தால் பார்ப்பது இல்லாவிட்டால் விட்டுவிடுவது என்று கூட யோசித்தோம்.  அவர் ஆரம்பத்தில் ‘தூதுவன்’  என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்தார்.  எனக்கு அந்தப் பெயரே பிடிக்கவில்லை.  ஏன் அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தார் என்பது தெரியவில்லை.  அந்தப் பத்திரிகையில்தான் நான் எழுதிய கதை, கவிதை எல்லாம் தொடர்ந்து வந்தன.  அதில் எழுதிய கதைகூட எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை.

          இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவர் ‘மலர்த்தும்பி’ என்ற பெயரில் ஒரு சிறுபத்திரிகை ஆரம்பித்தார்.  ஒரு சிறு பத்திரிகை ஆரம்பிக்க முன்னோடியாக சில பத்திரிகைகள் இருக்க வேண்டும்.  ஆனால் ‘ மலர்த்தும்பி’  என்ற பத்திரிகைக்கு முன்னோடி பெரிய பத்திரிகைகள்.  அந்த மாதிரியை என் சகோதரர் எடுத்துக்கொண்டார்.

அது எடுபடாது என்பது அவருக்குத் தெரியவில்லை.

          உண்மையில் ‘மலர்த்தும்பி’ பத்திரிகையை ஆரம்பித்து அவர் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானார்.  என் திருமணத்தின்போது என் சகோதரரைச் சந்தித்த என் இலக்கிய நண்பர் ஒருவர், என் சகோதரரைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்.

          ‘‘நீங்கள் ஏன் ‘மலர்த்தும்பி’ என்ற பத்திரிகை ஆரம்பித்தீர்கள்?’’என்று சகோதரரை என் இலக்கிய நண்பர் கேள்வி கேட்க, ஏன் அதற்கு என்ன என்று என் சகோதரர்  பதில் அளிக்க், இலக்கிய நண்பர் விடாமல், ‘‘நீங்கள் பேசாமல் ஒரு 80 பக்கம் காலி நோட்டை வாங்கிக் கொடுத்து விடலாம், மலர்த் தும்பி பத்திரிகையைக் கொடுப்பதற்குப் பதிலாக,’’ என்றார்.  என் சகோதரருக்கு உண்மையில் புரியவில்லை.

          “உண்மையில் உங்கள் பத்திரிகையைப் படிப்பதற்குப் பதில் காலி 80 பக்க நோட்புக்கைக் கொடுத்தால், எல்லோரும் அவரவர் விருப்பப்பட்டதை எழுதி வாசிப்பார்கள்,” என்றார் நண்பர்.  என் சகோதரர் தொடர்ந்து பேசவிரும்பவில்லை.  இந்த நிகழ்ச்சியும் ஒரு காரணமாக இருக்கும் ‘மலர்த்தும்பி’ என்ற பத்திரிகை நிற்க.

          அந்த மலர்த்தும்பியில் வெளிவந்த என் கவிதையை இங்குத் தர விரும்புகிறேன் :

                             பதவி

                   எத்தனையோ பேர்

                   எங்கோ போய்

                   வாழ்ந்து சரித்த

                   சரித்திரங்கள்

                   மயான பூமியில்

                   புதைக்கப் பட்டுள்ளன

                   பதவி ஆசை

                   இல்லாமல்…..

                   ஒரே வரிசையில்

                   புன்னகைக்கிறார்கள்.

          ‘சனங்கள்’ என்ற என் கதையும் ‘மலர்ததும்பி’யில் பிரசுரமானது. ‘மலர்த்தும்பி’ தொடர்ந்து வராமல் நின்று போனாலும், என் மனதில் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் என்னை அறியாமல் இருந்துகொண்டுதான் இருந்தது. 

          என் திருமணத்திற்குப் பிறகு மலர்த்தும்பி ஆசை நின்று போய்விட்டது.  என் சகோதரர் தீவிரமாகப் பெரிய பத்திரிகைகளில் இடம் முயற்சி செய்து கொண்டிருந்தார்.  பெரிய பத்திரிகைகளில் இடம் பெற்றால்தான் புகழ் பெற முடியும் என்றெல்லாம் அவர் கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்.  நானோ கணையாழி, தீபம் போன்ற பத்திரிகைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.  தீபத்தை விட நான் கணையாழிக்கு நான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தேன்.  ஏனெனில் மு மேத்தா போன்ற படைப்பாளிகள் படைப்புகள் கணையாழியில் இடம் பெற வில்லை.  மேலும் கணையாழி அசோகமித்திரன்  ஆசிரியப் பொறுப்பில் வெளிவந்து கொண்டிருந்தது.

                                                                                                                                                         (இன்னும் வரும்) 


4 Comments on “விருட்சம் நினைவுகள் 3”

Comments are closed.