எல்.ரகோத்தமன்
1) அன்றாடம்
நிலமதிர ஓடும்
மின்சார ரயிலின் நெரிசலில்
ஒரு துண்டு சிகரெட் போல்
தினம் தினம் கரைகிறது
வாழ்வின் அன்றாடம்!
2) ஊதியம்
பஜார் தெருவில்
நுழைந்து வெளி வந்தால்
காணாமல் போகிறது
முட்டுக் கொடுக்கும் ஊதியம்!
3) காதல்
பொய்மைக் குவியலில்
இடவலம் மாறிய
தோற்றப் பிழையாய்
சிக்கித் தவிக்கிறது
மானுடக் காதல்!
4) கனவுகள்
நேற்று பெய்த மழையின்
தெருவோர வெள்ளமதில்
மிதந்து செல்கிறது
ஒரு காகித கப்பல்!
கப்பல் நிறைய கனவுகள்
5) பட்டம்
வானைப் புணரும் வேட்கையுடன்
உயரே உயரே
பறக்கத் துடித்த பட்டம்
திசை மாறிய காற்றில்
மின் கம்பியிலும்
மரக்கிளையிலும்
சிக்கித் தவிக்கையில்
நூலையும் காணோம்
ஆளையும் காணோம்!
