வண்ணம் சூழ் உலகு வாழ்வியல்/லதா ஸ்ரீனிவாசன்

காலை சிற்றண்டி தயாரிப்பும்,மதிய உணவு தயாரிப்பும் ஒரு சேர, பரபரக்க வைக்கும் வார நாள் வழக்கம் போல்
என்னை பம்பரமாய் சுழற்றியது.

கூட்டு,குழம்பு பொறியல் என அனைத்தும் தன் மணம் கூட்டும் மங்கையான கறிவேப்பிலையை எதிர்ப்பார்த்த தருணம்…

விருட்டென மின்னலாய் வெளியேறி..தோட்டத்தில் உள்ள கறிவேப்பிலை மரம் பார்த்தால்
அனைத்து இலைகளும் பருவ மங்கையின் முகத்தில் காய்ந்த பருக்களாய்… இலை கிடைக்கா கோபம் தலைக்கேறும் சாதாரண பெண்ணாய் கிளை ஒடிக்கும் ஆத்திரத்தில் கை உயர, சினிமா வில்லனைக் கண்டு விரைந்தோடும் கதாநாயகியாய் பறந்து மறைந்தது
ஒர் வண்ண வண்ண வண்ணத்துப்பூச்சி.

சுயநலத்தில் கோபித்த மனதுக்கு அக்கணமே உரைத்தது இலைகளிலுள்ளது இளம்பெண்ணின் முகமல்ல, சூலுற்ற மணிவயிறு என்று.

மனம் வெட்கி உள் வாங்கி கடமை செய்தாலும், கண்களென்னவோ எப்பொழுதும் அந்த மரம்மீதே..

நாட்கள் செல்லவே, அனைத்து இலைகளும் புல்லாங்குழலாய் சுருண்டு பெட்டகமாய் ஆனது கூட்டுப்புழு உள்ளடக்கி..

நாளோட்டம்..வாழ்க்கை சுழலில்..
பேரக் குழந்தைகள் வருகையில் மறந்தேப் போனேன் அந்த ப்ரத்யேக பிரசவ மனையை.

மாதம் கடந்து நம் வாழ்க்கை கடமையாய் குழந்தைகளுக்கு காக்கை,குருவி காட்டி சோறூட்டுகையில் குழந்தை காட்டியது தோட்டத்தில் பூத்த காட்டு மலர் குவியலில் தேன் தேடி, காதலித்து களித்து பறக்கும் வண்ண வண்ண ஜோடிகளை….

சொரேல் என உரைத்தது வாழ்க்கையெனும் இயந்திரத்தில் நான் மறந்த மரமும், காணாத வாழ்க்கைகளும்.

ஒடோடி மனம் துடிக்க கறிவேப்பிலை மரம் பார்த்தால், மொட்டையாய் நிற்கிறது ப்ரார்த்தனை செலுத்திய மனிதனாய்.. தோட்டக்காரன் கைவண்ணம்.

கண்ணீல் நீர்க் கோர்க்க நிற்கையில் தோள் வருடி பறந்தது ஒரு பட்டாம் பூச்சி.

தன் குலம் தழைக்க உதவிய பெண்ணாம் மரத்தில் அமர்ந்து தட்டிக் கொடுத்தது ஆதுரமாய் ஒரு வண்ணத்துப் பூச்சி.
அதன் ஆதரவில் மனம் மகிழ்ந்து இளம் பச்சையாய் த்துளிகளாய் திரும்பவும் உயிர்த்தது கறிவேப்பிலை
தன்னலமற்ற செவிலியர்ப்போல்.