நடிகர் திரு.ஸ்ரீ காந்த் அவர்கள்/கணேஷ் பாண்டியன்

முதல் படத்திலேயே ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இயல்பான நடிப்பால் சாமான்ய மக்களின் நாயகனாக உயர்ந்தார். வில்லன், சின்னத்திரை நடிகர் என பன்முக திறமையால் உச்சம் தொட்டார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன் சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகத்தில் பணிபுரிந்தார். அப்போதிருந்தே மேடை நாடகங்களிலும் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த். 1964ல் இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய “வெண் ணிற ஆடை” படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஏற்று நடித்த டாக்டர் சந்துரு கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது.

இப்படம் இவருக்கு மட்டுமின்றி மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் முதல் படம் அமைந்தது.

மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் பிரபலமானார். இதையடுத்து தனது சொந்தப் பெயரான வெங்கட்ராமனை பயன்படுத்தாமல் ஸ்ரீகாந்த் பெயரிலேயே சினிமாவிலும் நடித்தார். ‘வெண்ணிற ஆடை’ படத்திற்கு பிறகு இவருக்கு பெரும்பாலும் குணச்சித்திர, நகைச்சுவை கிடைத்தன.

தன்னால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்று நிரூபித்தவர் ஸ்ரீகாந்த். ‘எதிர் நீச்சல்’ ‘பூவா தலையா’, ‘பாமா விஜயம்’ ‘நவகிரகம், ‘காசேதான் கடவுளடா போன்ற படங்கள் இவருடைய நகைச் சுவை நடிப்பிற்கு சான்று.

1972ல் இயக்குநர் திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘அவள்’ படத்தின் மூலம் இவர் வில்லனாகவும் அறிமுகமானார்.

சிவாஜியோடு நடித்த தங்கப்பதக்கம் படம் இவரது திரைப் பயணத்தில் ஒரு மைல்கல். இப்படத்தில் இவரது ‘ஜெகன்’ கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் நாவல்களான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ “கருணை உள்ளம்” போன்ற படங்களில் நடிகர் ஸ்ரீகாந்த முக்கிய வேடத்தில் நடித்தார்.

சிவாஜி, ஜெமினி, ஜெய் சங்கர், முத்துராமன், சிவகுமார், கமல், ரஜினி நடிகர்களுடனும் நடித்தார். எம்.ஜி.ஆருடன் நடிக்கவில்லை .இயக்குநர் ஸ்ரீதர் தொடங்கி பாலசந்தர்,பீம்சிங், திருலோகசந்தர், முக்தா ஸ்ரீனிவாசன், மாதவன், கிருஷ்ணன் பஞ்சு, திருமுகம் உட்பட முக்கிய இயக்குநர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

200 படங்கள் வரை நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், நடிகர் என்ற எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதிக்கு சொந்தக்காரர். கடைசியாக 2009ல் ‘குடியரசு’ படத்தில் நடித்தார்.

ஸ்ரீகாந்துக்கு தெய்வ பக்தி அதிகம். நம்பியாருடன் சேர்ந்து 40 முறைக்கு மேலாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்.🙏