கிருஷ்ணனின் தேசியக்கொடி !/பி.ஆர்.கிரிஜா

கிருஷ்ணனுக்கு காலையிலிருந்து ஒரே குஷி. அவன் அப்பா அவன் கேட்ட மாத்திரத்தில் தேசியக் கொடியை வாங்கிக் கொடுத்து விட்டார். எப்போதும் விடாமல் கேட்டாலும் எதையும் லேசில் வாங்கித் தர மாட்டார். அவனுக்கு ஒரே ஆச்சரியம். நம்ப முடியவில்லை. முந்தின நாள் பள்ளியில் எல்லோரும் தேசியக் கொடியை கொண்டு வர வேண்டும், சுதந்திர தின விழாவில் ஒரு பாடல் நிகழ்ச்சியில் எல்லாகுழந்தைகளும் கையில் தேசியக் கொடியை பிடித்துக் கொண்டு பாரதியாரின் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்ற பாடலை பாட வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர் சொல்லி இருந்தார் .அதை அவன் அப்பாவிடம் கூறினான். அவருக்கு தன் மகன் கிருஷ்ணன் கையில் தேசியக் கொடியை பறக்க விட்டுக்கொண்டு பாடுவதை நினைத்து மனதில் மிகவும் மகிழ்ச்சி. உடனே தேசியக் கொடியை வாங்கிக் கொடுத்து விட்டார். மகிழ்ச்சியில் கிருஷ்ணன் குதியாட்டம் போட ஆரம்பித்தான்.

ஐந்து வயது கிருஷ்ணன் கையில் கொடியுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்ததை அவன் அம்மா மாலையில் விளக்கேற்றி பிறையில் வைக்கும் போதுதான் பார்த்தாள். அவளுக்கும் ஆச்சரியம். அவன் கேட்ட உடனே வாங்கிக் கொடுத்து விட்டாரே என்று அவளாலும் நம்ப முடியவில்லை.

“அம்மா,பாரதியாரின் ஆடுவோமே பள்ளி பாடுவோமே பாட்ட பாடப் போறோம். சுதந்திரம் கிடைத்து அஞ்சுவருஷம் ஆச்சுதானேம்மா ?… அதான் எங்க ஸ்கூல்ல ஐந்து வயது நிரம்பிய என் வகுப்புத் தோழர்கள் எல்லோரையும் சேர்த்து மொத்தம் 10 பேர் இந்த பாட்ட பாடப் போறோம்” என்றான் கிருஷ்ணன் மிக்க மகிழ்ச்சியுடன். அவன் அம்மா லக்ஷ்மிக்கும் பேரானந்தம். குழந்தைக்குத்தான் எத்தனை நாட்டுப் பற்று
என்று அவனைப் பார்த்து வியந்தாள். “அம்மா உனக்குத் தெரியுமா ? அப்பா நேத்து கேட்ட உடனே கொடி வாங்கிக் கொடுத்துட்டாரு” திரும்பி சொல்ல ஆரம்பித்தான். தன்னுடைய மூவர்ண பார்டர் உள்ள வேட்டியையும் இடுப்பில் கட்டிய துண்டையும் கையில் இருக்கும் கொடியையும் பெருமையுடன் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டான். அவன் மனக்கண்ணில் அவன் வகுப்பு ஆசிரியர் அவனை
ஆசையுடன் உச்சி மோர்ந்து கொஞ்சுவதை நினைத்துப் பார்த்தான். அவனுக்குக் கையும் ஓடவில்லை,

காலம் ஓடவில்லை. அப்பா எப்போது ஆபீசிலிருந்து திரும்பி வருவார் என வாசலிலேயே கொடியுடன் காத்துக் கொண்டிருந்தான். 1942 ஆம் வருடம் இந்தக் கொடியைப் பிடித்து “வெள்ளையனே வெளியேறு” என்ற இயக்கத்தில் பங்கு பெற்று ஆங்கிலேய அரசாங்க ஊழியர்களால் தலையில் பலமாக அடிவாங்கி கொடியை கீழே தவற விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலையும், குற்ற உணர்வையும் இன்னும் மறக்க முடியாமல்
அதை நினைத்துத் தவிக்கும் அவன் அப்பாவின் நிலைமை இந்த ஐந்து வயது கிருஷ்ணனுக்கு தெரிய வாய்ப்பில்லைதான்.

2 Comments on “கிருஷ்ணனின் தேசியக்கொடி !/பி.ஆர்.கிரிஜா”

  1. நல்ல நாட்டுப் பற்று இன்று குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
    நல்ல கருத்து தாங்கிய
    குறுங்கதை எழுதிய கிரிஜா அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.

Comments are closed.