
எதனோடும் ஒட்டிச் செல்லாத மனது
ஒரு துயரம் ததும்பிய கோப்பையில்
பனிக்கட்டியாக
மிதந்து கொண்டிருக்கிறது
நிலவும் கூட ஒரு பனித்துண்டம் தான்
கரையாத பனித்துண்டம்
சற்று பின்பு காணாமல் போகும்
மீண்டும் பிறவிகள் எடுத்து வர
சில நேரங்களில்
கை விடப்பட்ட இதயங்கள்
பேயுருக் கொண்டு அலையும்
நள்ளிரவு வீதிகளில்
அது ஒற்றை ஆளாக
உடன் வருவதும் உண்டு
காரைக்கால் அம்மை
பேயுருக் கொண்டாளென்றால்
அவளுக்குக்கென்று
போக்கிடம் ஒன்று இருந்தது
நமக்கோ ஈசன்கள் இன்னும்
சிநேகமாகவில்லை
தவம் கலைக்கும் அசுரத்தனமும்
கை கூடி வராது
நள்ளிரவு பிடறி மயிர் தெறிக்க
கரும் புரவிபாக
பாய்ந்து கொண்டிருக்கிறது
அதன் முதுகில் அமர்ந்து கொண்டால்
எல்லையின்மையின் வெளியில்
பிரவேசிக்கலாம்
சாடடையெடுத்து குதிரையில்
வலம் வரும்
கருப்போடு சமதையாக
ஒரு சுற்று வரலாம்
கருப்பு நிறத்தில்
ஒரு வனாந்தரம்
அதே கருப்பு நிறத்திலேயே
ஒரு கடல்
உலகம் உயிர்கள்
நேசம் பிரிவுகள்
நிராசைகள்
எங்கும் பரந்து விரிந்து போகும்
கருமை
எந்தப் புள்ளியில் பூக்க
ஆரம்பிக்கிறதோ
அங்கிருந்து
ஒரு வெள்ளை வண்ணத்துப் பூச்சி
பறந்து வந்து
மறுபடியும் துயரத்தின்
கோப்பையில்
ஒரு பனித்துண்டமாக விழுகிறது
