வடிகால்/சுப்ரமண்ய ராஜு

அவன் சரியாக ஐந்துமணிக்கு அந்த ஆபீஸில் ரிஸப்ஷன் அறைக்குள் நுழைந்தான். மூன்று மாடிகளை ஏறிவந்த அயர்ச்சி குறைய சிறிது நேரமாயிற்று. கர்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டபோது ரிஸப்ஷனிஸ்ட், ‘எஸ் ப்ளீஸ்?’ என்றாள்.
அவன், ‘நாராயணன்,’ என்றான்.
‘உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?’
‘ஜெயராமன்.’
அவள் டெலிபோனை எடுத்து எண்களைச் சுழற்றினபோது அங்கு கிடந்த ஏதோ ஒரு பத்திரிகையை எடுத்துப் புரட்டினான். பின் அதில் மனம் லயிக்காமல் அந்த அறையைச் சுற்றி கண்களை ஓடவிட்டான். கண் மீண்டும் பத்திரிகை மீதே கடைசியாக வந்து நின்றது.
நாராயணனை இன்று கமலாவிடம்தான் அழைத்துக்கொண்டு போகவேண்டும். அவள் ரொம்ப நல்லவள். அநாவசிய தோரணைகள் கிடையாது. ரொம்ப சிம்பிள். இவனும் பயந்த சுபாவம். இவனுக்கும் அவளை பிடிச்சுப் போயிடும்… சட்டென்று நினைப்பதை நிறுத்தினான். எதிரே நாராயணன் நின்று கொண்டிருந்தான். இவ்வளவு நேரம் ஆபீஸில் வேலை செய்த பின்னாலும் பளிச்சென்று இருந்தான்.
‘போகலாமா?’
‘ம்.’
கார்ச் சாவியை கையில் சுழற்றிக்கொண்டே அவன் முன்னால் நடந்து போனான். அவனோடு நடந்து போனபோது இந்த முப்பத்தி ஐந்து வயதிலும் இருபது வயதுக்காரனைப்போல் உணர முடிந்தது.
அவர்கள் காரில் ஏற வெளியே வந்தபோது நாராயணன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு இவனிடம் ஒன்றை நீட்டினான்.
‘ஜெயராம், நான் ஒரு அரைபாட்டில் ஸ்காட்ச் வெச்சிருக்கேன். அங்கே போனால் சாப்பிட முடியுமா?’
‘ஓ…ஷ்யூர்’
கொஞ்ச நேரம் மௌனமாய்ப் போனபோது அவன் எதிரே தெரிந்த கட்டிடங்களையும், முன்னால் போன கார்களையும் வெறித்துப் பார்த்தான். நாராயணன்தான் மறுபடியும் பேசினான். இவனால் எப்படி எப்போதும் உற்சாகமாய் இருக்க முடிகிறது என்று இவன் ஆச்சரியப்பட்டான்.
‘இப்ப எப்படி இருக்கே? உன்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு இல்லை?’
‘ம்…. ஈரோடுல ஒரு சீட்டுக் கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். அதை மூடிட்டாங்க. மறுபடியும் மெட்ராஸ÷க்கே வந்துட்டேன்.’
‘இப்ப இங்க என்ன செய்யறே?’
அவன் பேசாமல் இருந்தான். தூரத்தில் சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்த ஒரு கிழவியைப் பார்த்துவிட்டு விரக்தியாய் சிரித்துக் கொண்டான்.
‘உன் ஒய்ஃப் எப்படி இருக்கா?’
‘ரொம்ப வீக்கா இருக்கா. அவளுக்கு ஏகப்பட்ட கஷ்டம். நானாவது இப்படி வெளியில் வந்து விடுகிறேன். அவ வீட்டிலேயே நாள் முழுவதும் வெந்துண்டு இருக்கா.’
அதற்கு பின் நாராயணன் வெகு நேரம் காரை ஓட்டுவதிலேயே கவனமாக இருப்பதுபோல் இருந்தான். கார் அந்தப் பெரிய சாலையின் மறுகோடிக்கு வந்தபின், ‘எப்படிப் போகணும்?’ என்றான்.
இவன், ‘தேனாம்பேட்டை,’ என்றான்.
அவன் காரை இடது பக்கம் திருப்பி வேகத்தை அதிகப்படுத்தினான்.
‘தேனாம்பேட்டையில் எங்கே?’
‘நேராப் போய் ரைட் சைடுல திரும்பினா மூனாவது தெரு.’
‘யாரு?’
‘அவ பேர் கமலா, ரொம்ப நல்லவ. சின்ன வயசு. சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு இங்க வந்து இப்படி ஆயிட்டா.’
‘என்ன வயசு இருக்கும்?’
‘இருபத்துமூனுதான் இருக்கும். ரொம்ப க்ரேஸ்புல்லா இருப்பா.’
நாராயணன் அந்த மூன்றாவது தெருவில் திரும்பினபோது இவன் வீட்டின் அடையாளத்தைச் சொன்னான். காரை அங்கு நிறுத்தினவுடன், ‘நீ இங்கேயே இரு. நான் வரேன்,’ என்று சொல்லிவிட்டு கீழே இறங்கிப் போனான்.
ஐந்து நிமிஷம் கழித்துத் திரும்பி வந்தான். ‘அவ இல்லையாம், வெளியில் போயிருக்காளாம்,’ என்றான்.
‘எப்ப வருவாளாம்?’
‘தெரியலை.’
‘இப்ப என்ன பண்ணலாம்?’ என்றான் நாராயணன்.
‘எனக்கு இன்னொரு இடம் தெரியும். அங்கே போகலாமா?’
‘எங்கே?’
‘அடையாறு பக்கத்துல.’
‘சரி.’
அவன் காருக்குள் ஏறி உட்கார்ந்தவுடன், கார் கிளம்பிற்று. ‘இவ ரொம்ப நல்லவ. இன்னிக்கு என்னமோ இப்படி ஆகிவிட்டது,’ என்றான்.
நாராயணன் பதில் பேசாமல் இன்னொரு சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டு அடையாறு பக்கம் காரைச் செலுத்தினான். அவன் ஜன்னல் வழியாக தெரிந்த போஸ்டர்களில் சிரிக்கும் பெண்களைப் பார்த்துக்கொண்டே வந்தான். வயிறு பசித்தது. அதை நாராயணனிடம் சொல்ல தயக்கமாய் இருந்தது.
அடையாறு வந்ததும் அவன் வழி சொல்ல ஆரம்பித்தான். அந்த வீடு தனியாக இருந்தது. காரை நிறுத்தினவுடன் நாராயணனும் அவன் கூடவே கீழே இறங்கி நடந்து வந்தான்.
ஒரு பெண் கதவைத் திறந்துகொண்டே சிரித்து வரவேற்றாள். அவள் உடம்பைப் பார்த்தபோது நாராயணன் தனக்குள் ஏற்பட்ட ஒரு த்ரில் ஐ மறைக்க முயன்றான்.
‘என்ன ஜெயராம் சார். சௌக்கியமா?’ என்றாள் அவள்.
‘ம்………. இவர் பேரு நாராயணன், அழைச்சுக்கிட்டு வந்தேன்.’
‘உள்ளே வாங்க..’
அவர்கள் உள்ளேபோய் அவள் காட்டிய சோபாவில் உட்கார்ந்து கொண்டார்கள். அவள் ஃபானைச் சுழல விட்டாள். அவளும் அவர்களுக்கு எதிரில் இருந்த ஒரு பிரம்பு நாற்காலியை முழுசாக அடைத்துக்கொண்டு உட்கார்ந்தாள்.
‘ஏதாவது சாப்பிடறீங்களா?’
‘ம்…. பையனைக் கூப்பிடு. சோடா வாங்கிட்டு வரச் சொல்லு. அவரு விஸ்கி கொண்டாந்திருக்காரு. சாப்பிடணுமாம்.’
அவள் எழுந்து உள்ளே போனாள். ஒரு பையனுடன் வந்தாள். பையன் நாராயணனிடம் பணம் வாங்கிக்கொண்டு வெளியே போனான். அவள் ரேடியோவைத் திருப்பினபோது இவன் வேண்டாம் என்றான். நாராயணன் தன் பையில் இருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து மேஜைமேல் வைத்தான்.
சிறிது நேரத்தில் சோடாவும் இரண்டு பிளேட் வறுவலும் வந்தது. இவள் மூன்று கண்ணாடித் தம்ளர்களை எடுத்து வந்து மேஜை மேல் வைத்துவிட்டு விஸ்கியை ஊற்றக் குனிந்தபோது நாராயணன் அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். ‘இவன் எனக்கு வேண்டாம். நான் இப்ப சாப்டறதில்லை,’ என்றான். அவள் சிரித்துக்கொண்டே இரண்டு தம்ளர்களிலும் சோடாவை ஊற்றிக் கலந்தாள். விஸ்கியை விட இவள் நன்றாக இருப்பாள் என்று நாராயணன் பல்லைக் கடித்துக்கொண்டான். அவர்கள் ஐந்தே நிமிஷத்தில் அந்த பாட்டிலைத் தீர்த்துவிட்டு வறுவலைக் கொறிக்க ஆரம்பித்தார்கள்.
‘உன் பேர் என்ன?’ என்றான் நாராயணன் அவளைப் பார்த்து.
‘கிரிஜா.’
‘நல்ல பேர்.’
‘ம்?’
‘ம்.’
…………
‘உனக்குப் பசிக்கலை? வேணும்னா ஏதாவது வாங்கிட்டு வரச் சொல்லேன்.’
‘வேணாம். நான் நீங்க வரதுக்கு முன்னாடிதான் டிபன் சாப்பிட்டேன். இனிமே ராத்திரிதான் சாப்பாடு.’
மீண்டும் அவர்கள் மௌனமானார்கள். சிறிது நேரம் கழித்து நாராயணன் ஆட ஆரம்பித்தான். சட்டென்று அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘நீ ரொம்ப நல்லாயிருக்கே,’ என்றான்.
அவள் சிரித்துக்கொண்டே ஒரு பழக்கமான வசனத்தைக் கேட்பது போல் அவன் தோளைப் பற்றிக்கொண்டு, ‘போகலாமா?’ என்றாள். நாராயணன், ‘ம்’ என்று கண்களை பெரிதாக விரித்துச் சொன்னான். அவர்கள் இரண்டு பேரும் எழுந்து உள்ளே போனார்கள்.
அவனுக்கு இன்னும் பசித்தது. அம்மாதிரி ஒரு வீட்டில் இப்படி உட்கார நேர்ந்து விட்டதற்காக முதன்முதலாக வருத்தப்பட்டான். கொஞ்ச நேரம் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான். நாராயணா ‘சீக்கிரம் வாயேன்,’ என்று சொல்லிக்கொண்டே அவர்கள் போன அறையின் கதவைப் பார்த்தான். நாராயணன் வருவதாய் இல்லை. தெருவில் ஒரு நாய் உரக்கக் குரைப்பது தெளிவாகக் கேட்டது.
பக்கத்து வீட்டு ரேடியோவில் ஏதோ ஒரு நிகழ்ச்சி முடிந்து செய்திகள் வாசிக்க ஆரம்பித்தபோது அவர்கள் இருவரும் வெளியே வந்தார்கள். இவன் எழுந்து நின்றான். அவள் மிகவும் கலைந்துபோய் களைத்திருந்தாள். இந்த நாராயணனின் விஸ்கி கலந்த வெறி முழுவதும் அவள் மேல் விளையாடியிருக்கும். அவனுக்கு அவள் மேல் பரிதாபம் ஏற்பட்டது.
‘என்ன போகலாமா?’ என்றான் நாராயணன். இவன் சரியென்று தலையாட்டிவிட்டு அவளிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.
அவர்கள் மீண்டும் காரில் ஏறி மெயின் ரோடுக்கு வந்த போது ‘உன்னை எங்கே இறக்கிவிடணும்?’ என்றான் நாராயணன். அவன் இடத்தைச் சொல்லிவிட்டு கொஞ்சம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். நாராயணன் ஏதும் பேசுவதாக இல்லை. அவன் இறங்க வேண்டிய இடம் வந்ததும் காரில் இருந்து கீழே இறங்கி நின்றான்.
‘என்ன?’
‘ஒரு பத்துரூபாய் பணம் வேணும். வீட்டுக்கு ஏதாவது வாங்கிண்டு போகணும்’
‘பத்து ரூபாயா?’
‘ம்’
அவன் பர்ûஸ எடுத்து அதிலிருந்து ஒரு புது பத்துருபாய் எடுத்து அவனிடம் நீட்டினான்.
‘தேங்க்ஸ்’
‘சரி. அப்ப நான் வரட்டுமா?’
‘ம்… குட்நைட்’
கார் போனவுடன் அவன் சாலையைக் கடந்து எதிரேயிருந்த ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தான். எதையோ தருவித்து அவசர அவசரமாய் விழுங்கி தண்ணீரைக் குடித்துவிட்டு சர்வரிடம் இன்னும் ஏதோசொல்லி அவைகளைப் பொட்டலமாய்க் கட்டி வாங்கிக்கொண்டான். பில்லுக்கான பணத்தை கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி வேகமாய் நடந்தான். அவனுடைய தெருவுக்குள் திரும்பியபோது தெரு அநேகமாய்த் துங்கிப்போய் இருந்தது. தெருமுனை நாயர்கடையில் மட்டும் இந்திப்பாட்டு அலறிக்கொண்டிருந்தது. தெரு விளக்குகள் அனைந்து போயிருந்ததால் இருட்டில் நடக்க சிரமமாய் இருந்தது.
அவன் வீட்டுக்குள் நுழைந்தபோது அவள் ஒரு ஓரத்தில் சுருண்டு கிடந்தாள். இவன் வருவதைப் பார்த்தவுடன் எழுந்திருக்க முயன்றாள்.
‘இந்தா. டிபன் வாங்கிக்கொண்டு வந்தேன். நீ இன்னும் சாப்பிடலையே?’
‘இல்லை.’
அவன் பொட்டலத்தை அவளிடம் கொடுத்துவிட்டு ஜன்னல் ஓரமாக ஒரு பாயைப் போட்டுக்கொண்டு அவளுக்கும் ஒரு படுக்கையை விரித்துவிட்டுப் படுத்தான். தூக்கம் விரவில்லை. மறுபக்கம் திரும்பி அவள் சாப்பிடுவதைப் பார்த்தான். அவள் சாப்பிடும் வேகத்தில் அவளின் பசிதெரிந்தது. தலையைத் திருப்பி ஜன்னல் வழியாக நிலா விழுவதைப் பார்த்தான். தெரு அடங்கிப் போய் சத்தமே இல்லாமல் அமைதியாய் இருந்தது. வெளியே ஒரு காகம் நேரம் தவறிக் கத்துவதை உன்னிப்பாய்க் கேட்டான். அதை ரசிப்பதில் தான் எதிலிருந்தோ தப்ப முயலுவதை உணர்ந்தான்.
அவள் பின் பக்கம் கை அலம்பும் சத்தம் கேட்டது. கையைத் துடைத்துக்கொண்டு கதவுகளைச் சாத்திவிட்டு அவள் இப்போது இங்கு வந்து படுத்துக்கொள்வாள். தன்னை இதுவரை அவள் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. அசாத்தியப் பொறுமை. கோபமே வந்து அவன் பார்த்ததில்லை. அதிர்ந்து ஒரு வார்த்தை பேசினதில்லை. அந்த வேப்ப மரத்துக் காக்கை திசை தெரியாமல் தன் சிறகுகளை அடித்துக்கொண்டு பறக்கும் சத்தம் கேட்டது. லேசாகக் காற்று அவனைக் கடந்து போயிற்று.
அவள் அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து அவன் தலையைத் திருப்பினாள். கலைந்திருந்த அவன் தலைமயிரை சரி செய்து விட்டாள். அவன் சட்டென்று எழுந்து அவள் பக்கம் திரும்பினான். அவள் கழுத்தைத் தன்கைகளால் கட்டிக்கொண்டு தன் வாழ்க்கையிலேயே முதன் முதலாய் குலுங்கிக் குலுங்கி அழுதான்.