நகுலன் கவிதைகள்/வாசுதேவன்

நகுலன் கவிதைகளில் கவிதைக்கான எந்த இலக்கணமும் பார்க்க முடியாது….ஆடம்பரம், அலங்காரம், ஜோடனைகள் அவர் எழுத்தில் கிடையாது…அவர் எழுத்தில் முன்வைத்தது இந்திய தத்துவத்தின் சூன்யவாதத்தை…இதற்கு அடிப்படை அவருடைய தனிமை வாழ்க்கை….அவருடைய எழுத்து தனித்துவமான அகமொழியுடன் இந்திய தத்துவத்தையும் இணைத்து எழுதியவர்….அதனால்தான், முதல் வாசிப்பில் அவர் எழுத்து புரியாது….ஒரு கவிதை தர்க்கபூர்வமாக புரிய வேண்டும் என அவசியமில்லை…..போர்ஹே, புரியாத கவிதைகளோடு மல்லுகட்டி நிற்கவேண்டாம் என்கிறார். நகுலன் கவிதைகள் எளிமையானவை, ஆனால் ஆழ்ந்த தத்துவ சரடுகளை உள்ளீடாக கொண்டுள்ளன…நகுலனின் எழுத்து தர்க்கத்தில் அடங்காது…..அ-நேர்கோட்டு தன்மை (Non Linerar) எழுத்து அவருடையது…. படிமம், உருவம், உருவகம் இத்தியாதிகளை தேடும் வாசகர்களுக்கு நகுலனின் எழுத்தில் சூன்யத்தையே பார்க்கமுடியும்…. எளிமையாக இருந்தாலும் புதிராக இருக்கும். கவிதையில் உரையாடல் என்பதை இரு தளங்களில் அணுகியவர். தனக்குள் நடக்கும் அக உரையாடல் மற்றும் பிறருடன் நடக்கும் உரையாடல். இந்த உரையாடல்களில் வாழ்வின் அபத்தங்களை முன் வைத்தவர். அவருடைய கவிதைகளை வாசிக்கலாம்…

(1) அன்றிரவு அவன்
ஒரு கனாக் கண்டான்
வெகு நேரம்
கோட் – ஸ்டான்டில் தொங்கிக்
கொண்டிருக்கும் உடலையே
பார்த்துக் கொண்டு நின்றான்
அதைக் கழற்றிக்
கோட் – ஸ்டான்டில்
தொங்கவிட்டு விட்டான்
என்பது என்னவோ சரி.
ஆனால்
அவன் இப்பொழுதெல்லாம்
காணாமல் போன
தன் நிழலையே
தேடிக்கொண்டிருக்கின்றான்
நிழல்கள் மாத்திரம்
எங்குமே இருப்பதில்லை;
இங்கு கூட என்று இல்லை;
அங்கும்

(2) ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி / ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு

(3) வந்தவன் கேட்டான்
என்னைத் தெரியுமா ?
தெரியவில்லையே
என்றேன்
உன்னைத்தெரியுமா ?
என்று கேட்டான்
தெரியவில்லையே
என்றேன்
பின் என்னதான் தெரியும்
என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன்.

(4) களத்துமேட்டில்
வாளுருவி
மீசைதிருகி
நிற்கிறான் ஒரு மாவீரன்
போகும் பறவைகளனைத்தும்
அவன் தலை மீது
எச்சமிட்டன
அவன் மீசையை
எறும்புக்கூட்டங்கள்
அரித்தன
ஆனால் அவன் முகத்திலோ
ஒரு மகா சாவதானம்.