திண்ணை இருந்த வீடு – தஞ்சாவூர்க் கதைகள்/ஜெ.பாஸ்கரன்

புத்தக அறிமுகம் – 3.

சசி எம். குமார்.

தஞ்சாவூர் மானோஜ்பட்டி கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தற்போது திரைப் படத்துறையில் இணை இயக்குனராய் செயலாற்றுகிறார் சசி எம்.குமார். சின்னச் சின்னக் கதைகளாக 23 கிராமீய மணம் வீசும் கதைகளின் தொகுப்புதான் இந்நூல். கிராமத்து மனிதர்கள், அவர்கள் பேச்சு வழக்கு, அன்றாட செயல்கள், உறவுகள், சிக்கல்கள் என தஞ்சாவூர் கிராமங்களின் சுவாசம் உணர்த்தும் அழகான கதைகள். காவிரி மண்ணில் கொட்டிக்கிடக்கின்ற எண்ணற்ற மனிதர்களும், அவர்களின் கதைகளும் தஞ்சை வீடுகளின் திண்ணைகளில் பேச்சாகச் சிதறிக் கிடக்கின்றன!

லஜ்ஜா சிறுகதையில், மராட்டிய மொழிப்புத்தகம் படிக்கும் லஜ்ஜா சாமியார் வந்த நேரம் பலருக்கும் நல்லவைகள் பல நடக்கின்றன. ஊரில் ஒருவராகிப்போன லஜ்ஜா சாமியாரின் இருப்பிடம் மாரியம்மன் கோவில். தொண்ணூறுகளில் கோவில்களில் பித்தளை உண்டியல்கள், கதவுகள், பூட்டுகள் வந்தன. மனிதர்களும் தங்கள் தன்மையை இழக்கத் தொடங்குகிறார்கள். வீடுகளும் பாகப்பிரிவினை காரணமாகத் தங்கள் திண்ணைகளை இழக்கின்றன. நகரத்துவம் பெற்றுவிட்ட கிராமத்தில், இன்று கோவில்களும், வீடுகளும் சாத்தியே கிடக்கின்றன, லஜ்ஜா சாமியாரும் ஊரை விட்டுப் போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. திண்ணை வைத்த, கதவு சாத்தப்படாத வீடு ஒன்றைக் கட்டி, ஓங்கிக் குரலெடுத்து ‘லஜ்ஜா’ எனக் கூப்பிட வேண்டும் என்று ஏங்குகிறார் கதைசொல்லி! அதிகார ஆக்கிரமிப்பில் கோவில்களும், கிராமங்களும்!

வீதியோரக் கடைகளின் விளம்பரப் பலகைகளில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும் – சித்திரமாடன் ஆர்ட்ஸ் சேகரின் கைவண்ணம்! சேகரின் காதல் தோல்வி, ஆண்டன் செகாவ் புத்தக வாசிப்பு, சிறப்பான வாழ்க்கை எனச் சொல்லிய பிறகு, அவரின் அருமையான ஓவியங்கள் எல்லாம் (அதிகமாகப் பெண்களை, ரேவதிகளை வரைவாராம்) தேர்தல் விதிகள், பிளக்ஸ் போர்டுகள் வருகையால் மறைந்து போக, யாருமற்ற அனாதையாகப் பையில் ரேவதி சாயலில் பெண் ஓவியங்கள், அண்டன் செகாவ் சிறுகதைகள், கவிஞர் மீராவின் கவிதைகள், அலுமினியத் தட்டு, பிளாஸ்டிக் டம்ளருடன் பூட்டப்பட்ட ஹோட்டலின் முன்பு அமர்ந்திருந்ததைச் சொல்லி முடிக்கிறார். ஓர் அருமையான கலைஞனின் வீழ்ச்சிக்கு எப்படி இன்றைய புதிய கண்டுபிடிப்புகள் காரணமாகின்றன என்பதை கனக்கும் மனதுடன் எழுதுகிறார்.(சித்திரமாடம்).

கிருஷ்ணவேணியின் காதல் கடிதங்கள், எங்கள் ஊரும் முருகேசன் மாமாவும், சுப்ணி அண்ணன், மரங்களின் பெரும் காதலன், முருகேசகாந்தும் பிரேமலதாவும், லெட்சுமி டீஸ்டால் என கிராமத்து மனிதர்களையும், அவர்களது தினசரி வாழ்க்கையின் சுவாரஸ்யங்களையும் சிறப்பாக, எளிமையான நடையில் சிறு சம்பவங்களாக, சிறு கதைகளாக எழுதியிருக்கிறார்.

‘ஏதோ நினைவுகள்’ – கிராமத்துக் காதல் தோவியைச் சொல்கிறது – சேகர் மாமா, பிருந்தா மிஸ் காதல், சிறுவர்களின் துணையோடு வளர்வது, பிருந்தா வேறு ஒருவருடன் திருமணமாகி பாண்டிச்சேரி செல்வது, சேகர் மாமா சோகம், பின்னர் அவரது திருமணம் என இயல்பாக நடப்பவைகளை சின்ன சின்ன வரிகளில் விவரிக்கிறார். இறுதில் சேகர் மாமா தன் பெண்ணுக்குத் திருமணம் என பத்திரிக்கை கொடுத்துவிட்டு ரயிலில் செல்கிறார். பெண்ணின் பெயர் சே.பிருந்தா!

கடைசியில் திண்ணை இருந்த வீடு, அய்யனார், காலத்தின் ஆசான் என்று மூன்று கவிதைகள் – கிராமங்கள் தங்கள் சுயமுகத்தை எப்படி இழந்துவிட்டன என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டவை – மனதைத் தொடுகின்றன.

சுவாரஸ்யமான தொகுப்பு!

(திண்ணை இருந்த வீடு – தஞ்சாவூர்க் கதைகள் – சசி எம்.குமார். சந்தியா பதிப்பகம். 04424896979).