வைகுண்டத்தின் வேதம் – 1/ஜெயராமன் ரகுநாதன்

சென்னை வெயிலுக்குத்தயாராகும் துல்லிய வானம். சென்ட்ரல் ஸ்டேஷனின் வழக்கமான பரபரப்புகள் சற்றே ஓய்ந்து பஸ்களும் கார்களும் அதிகமாகும் ராஜபாட்டை. சகல ரோகங்களுக்குமாய் சாட்சி நிற்கும் “ஜென்லாஸ்பத்ரி” என்று செல்லமாக விளிக்கப்படும் ஜி. ஹெச்.

ஏழிலிருந்து ஒன்பது வரைதான் ஓபி எனப்படும் Outpatient அனுமதி. நீண்ட க்யூ. இருமலும், கனைப்பும், முனகலும் அனத்தலுமாய் சோர்ந்தும் தொய்ந்தும் போன க்யூ. மூடின கதவின் வாசலில் ஆகாகான் போல அமர்ந்திருக்கும் வார்டு பையன் என்னும் நாற்பத்தைந்து வயது ஆசாமி.

“ஒண்ணியும் ஆவாது. இரு, ஒனுக்கு இன்னிக்கு அட்மிசந்தான்”

“இன்னா, துலுக்காணம், ரிஷ்கா இஸ்துக்கினு வண்ட்ட. நோவல?”

“இந்தாம்மா, நான்தான் நேத்தே சொன்னேனே, கொயந்தீங்கல்லாம் எட்த்துக்கினு வராதன்ன்ட்டு..”

ஒன்பது மணிக்கு உள்ளே போனவர்கள் வரைதான், கதவு சாத்தி விடுவார்கள். அப்புறம் நாளைக்குதான்.

சென்ட்ரல் ஸ்டேஷன் கடிகாரத்தில் ஏழு காட்டினவுடன் திறக்க, வார்டு பாய் ஒவ்வொருத்தராய் உள்ளே அனுப்பினான்.

ஒன்பது மணிக்கு “ சரி, அவ்வளவுதான். நீங்கல்லாம் நாளைக்குதான். போங்க போங்க, இங்கே கூட்டம் கூடாதீங்க. பெரிய டாக்டர் வந்தா என் வேல போய்டும்”.

சற்றுத்தள்ளி சின்ன டாக்டர்கள் நாலு பேர். இளைஞர்கள். ஒரு வித அலுப்புடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். வரும் நோயாளிகளின் தொந்திரவால் கடுகடுப்புடன் வேறு இருந்தார்கள். வரும் பெஷண்டுகளை முதல்லில் செக் பண்ணி பெரியவரிடம் அனுப்பினார்கள். சுலபமான வேலை அல்லதான். நோயால் அவஸ்தைப்படும் ஜனனகளின் பிடுங்கல்கள் கஷ்டம்தான்.

ஒரு வயதான அம்மாள் தன பத்து வயது மகனுடன் நின்றிருந்தாள். சின்னப்பையன் விடாமல் இருமிக்கொண்டிருந்தான். தொண்டையில் லேசான வீக்கம். டாக்டர் மூர்த்தி போன வருஷம் தான் ஹவுஸ் சர்ஜன் முடித்து இங்கே போஸ்டிங்.

”வாம்மா இங்க! என்ன பையனுக்கு!”

”நாலு நாளா இருமலுங்க! சொரம் வேற இருக்கு!”

“நாலு நாளாவா? ஆடி அசஞ்சு இன்னிக்கு வர்ரீங்களா?’

“நேத்தும் முந்தா நாளும் வந்தேனுங்க! ஓபியில கூட்டம் க்யூவுல வர்ரதுக்குள்ர கதவு மூடிட்டாங்க!”

“ஆமா எல்லாத்துக்கும் காரணம் சொல்லுங்க! லேட்டா வந்து எங்க கழுத்த அறுங்க!”

“வாடா தம்பி! இங்க படு!”

“இந்தாம்மா! வெறு ஜுரம்தான்! நெஞ்சுல கபம் கட்டியிருக்கு! இந்தாங்க சீட்டு! அங்க போய் மருந்து வாங்கி குடுங்க! ரெண்டு நாளுல சரியாய்டும்!”

“இல்ல…?”

“என்னம்மா நிக்கற ! கூட்டத்தப்பாத்தியில்ல! உயிர வாங்காம போம்மா! போய் அடுத்த பில்டிங்கில் மருந்து வாங்கி சாப்பிடச்சொல்லு! சவரி! அடுத்த பேஷண்ட்ட அனுப்பேன்யா! தூங்கிட்டியா நீயி?”

“இல்லீங்க…?”

“என்னம்மா வேணும்? ரோதனை பண்றியே?”

“என்ன சாப்புடக்கொடுக்கணும்னு…?”

“ஆமா பெரிய விக்டோரியா மகாராணி. ஹார்லிக்ஸ் இருக்கா, இல்ல த்ரெப்டின் இருக்கா. சும்மா தொண தொணன்னுட்டு..! சாம்பார்தானே கொடுக்கப்போறே, போ அதையே கொடு”!

அம்மாள் பயத்துடன் தயங்கி நகரும்போது குரல்.

“இந்தாம்மா, இங்க வா!”

பெரியவர்!

சின்னப்பையனை உற்றுப்பார்த்தார். முதுகில் கை வைத்தார். வாயைத்திறந்து காட்டச்சொன்னார்.

மூர்த்தி! கெட் தெ ஸ்டெத்!”

”அந்தச்சீட்டைக்குடும்மா!” மை காட்! மூர்த்தி! என்ன எழுதியிருக்க?”

“ எரித்ரோமைசின் டாக்டர்! கோல்ட், ஃப்ளெம், ஃபீவர்!”

“ எரித்ரோமைசின்! மை ஃபுட்!”

“மூர்த்தி! சிம்ப்டம்ஸைப்பாருய்யா! தொண்டையில லிம்ஃப் நோட்ஸ்! இருமலைக்கவனிச்சியா? பார்கிங் காஃப்! ஸ்டெத்துல என்ன பாட்டா கேட்டே? ஸ்டுப்பிட்! அப்நார்மல் ஹார்ட் ரேட் தெரியல? மையோகர்டிடிஸ் இருக்கலாமேய்யா! க்ளியர் கேஸ் ஆஃப் டிஃப்தீரியா! ஆனா நீ எரித்ரோமைசின் குடுக்கறியா?”

மூர்த்தி அமைதி.

”இந்தாம்மா! நீ இங்க உட்காரு! ப்யூலா! கம் ஹியர்!ப்ரோண்டோ! இந்தப்பையனை உடனே அட்மிட் பண்ணு! டிராகியோடாமி புரோசீஜருக்கு ஏற்பாடு பண்ணு! ஜஸ்ட் கெட் மூவிங்!

இப்போது மூர்த்தி பக்கம் திரும்பல்.

“மூர்த்தி! கால் தி அதர் ட்யூட்டி டாக்டர்ஸ் இன் ஓபி!”

“இங்க பாருங்க! இது ஜிஹெச். இலவச ஆஸ்பத்திரி. இங்க இப்படிப்பட்டவங்கதான் வருவாங்கன்னு ஒங்களுக்கு முன்னமே தெரியுமில்ல. அப்புறம் ஏன் இவ்வளவு எரிச்சல் கோபம் எல்லாம். If the patient is angry, you be strong. If arrogant, you be intelligent! But if vulnerable, you be kind!”

சின்ன டாக்டர்கள் அமைதி, தலை குனியல்.

“சே சம்திங் யங் மென்!”

இடி இடித்தது.

“யெஸ் டாக்டர்!”

“கெட் மூவிங்!”

அம்மாள் பயத்துடன் இவரைப்பார்த்தல்.

“ஒண்ணும் பயப்படாதம்மா! ஒரே வாரத்துல சரியாய்டும்! ஆனா ஆஸ்பத்திரியில இருக்கணூம்! என்ன? ஒண்ணும் இல்லை. கவலையே படாதீங்க. நான் பாத்துக்கறேன்!”

படு சாந்தமாகச்சொல்லிவிட்டு பையனைக் ்கவனிக்கப்போனார், ஆம் டாக்டர் வைகுண்டம்தான்!.