தண்ணி வண்டி/நாகேந்திர பாரதி

‘ரெண்டு குடம் தான் கணக்கு அதுக்கு மேல கிடையாது’ கண்டிப்பாகச் சொல்லிவிட்டு ‘அடுத்தடுத்து ‘என்று விரட்டிக் கொண்டிருந்தான் தண்ணி வண்டி வேலு .’ஒவ்வொரு இடத்திலும் இதே பிரச்சனை. பத்துத் தெருவுக்கு இந்தத் தண்ணி வேணும் .கடைசித் தெருவுல தண்ணி பத்தாம தினசரி தகராறு. ‘கடைசி ஆளுக்குத் தண்ணி திருப்பி விட்டதும் , தும்பிக்கைக் குழாயைத் தூக்கித் தண்ணித் தொட்டி மேல போட்டு ‘ரைட்’ என்று கத்தினான்.

அந்தப் பெரிய வாகனம் கிளம்பி தண்ணீரை விசிறியபடி அடுத்த தெருவை நெருங்கும்போது அங்கே கலர்க் கலர் பிளாஸ்டிக் குடங்கள் வரிசையாக நெருக்கி அடித்துக் கொண்டு இவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தன. வண்டியை நிறுத்தியதும் தான் தாமதம். ‘காச்சு மூச்சு’ என்று ஒரே சத்தம் .’நான் முன்னாடியே குடத்தை வச்சிட்டு வீட்டுக்குப் போய் புள்ளையை விட்டுட்டு வந்தேன். அதுக்குள்ள குடத்தைத் தூக்கி பின்னால வச்சுட்டாளுக .’ பெண்களின் சண்டைச் சத்தத்தோடு தண்ணீர் வடியும் ”ப் ச்ச் ச் ச்” சத்தம் பீடியைப் பல்லில் இறுக்கிய படி ‘இந்தச் சனியன் புடிச்ச வேலை எப்பத் தான் தொலையும். காலையிலிருந்து சாயந்திரம் வரை இதே வசவு சத்தம். கேட்டுக் கேட்டு காது புளிச்சுப் போச்சு ‘என்று சலித்துக் கொண்டான் மனதிற்குள் வேலு.

காலையில் கிளம்பி நுங்கம்பாக்கம் தண்ணி டேங்க் போக வேண்டியது. தண்ணீர் நிரப்பிய லாரியோடு டிரைவர் கந்தசாமி கத்துவான்.’ என்ன துரை ஆடி அசஞ்சு வர்றீங்க. தொத்துங்க சீக்கிரம் ‘ என்ற படி லாரியை விருட் ‘ என்று கிளப்புவான். ஒவ்வொரு தெருவாய் நிறுத்தி கணக்குப் பார்த்து ஒழுங்காக இரண்டு குடம் மட்டும் .அதுல தாட்சண்யம் பார்க்கிறது இல்லை. முடிஞ்சதும் ரைட் சொல்லி ஒவ்வொரு தெருவிலும் ஒருத்தருக்கு ரெண்டு குடம் மட்டும். திருப்பி மறுபடியும் ரைட் சொல்லி நடுவிலே ரோட்டோரக் கடையிலே ‘டீ ‘ அப்புறம் , மத்தியானம் வாடிக்கை மெஸ்ஸிலே சாப்பாடு. முடிச்சு சாயந்திரம் வீடு திரும்பறப்போ உடம்பு ஒவ்வொரு பார்ட்டும் ‘கழட்டிப் போடு’ என்று கேட்டு வலிக்கும்.

‘எப்பவாவது சாராயம் ஊத்திக்கிட்டா அன்னைக்கு உடம்பு வலி இருக்காது ஆனா வீட்டுல வள்ளி பேச்சைக் கேட்டு உள்ளுக்குள்ள வலியாயிடும் .’ என்னடா பிழைப்பு இது’ என்று அலுத்துப் போய் வீடு வந்தான். வாசலில் கிடந்த நாலு செருப்புகளை பார்த்ததும் ‘அப்பா அம்மா வந்திருக்காங்க போலிருக்கு’. ‘ வாங்கப்பா வாங்கம்மா ‘வரவழைத்த புன்னகையோடு உள்ளே நுழைந்தவனை முறைத்துப் பார்த்தபடி நின்றார்கள் அவன் அப்பனும் ஆத்தாளும். வள்ளி பக்கம் திரும்பினான், அவள் முகவாயை உயர்த்தியபடி ஸ்டவ்வைப் பற்ற வைத்தாள் , அவனுக்கு ‘டீ’ப் போட .

‘ என்ன இது ஏண்டா நம்ம ராமசாமி தெருவுக்கு நீதானே தண்ணி ஊத்துற,’
;ஆமா நான் தான்’
இது என்ன பால் ஊத்துற கணக்கா . ஏண்டா நம்ம மாப்பிள்ளை சோமு இரண்டோட சேர்த்து இன்னொரு குடம் தண்ணி கேட்டானாமே. முடியாதுன்னு மறுத்திட்டியாமே ‘ பொரிந்தார் அப்பா . அவருக்கு அவர் கவலை. ரெண்டு தடவை மகளை இவர் வீட்டுக்கு அனுப்பிட்டானே மருமகன் எதுக்கோ கோச்சுக்கிட்டு .

வேலு எங்கே முகத்தைப் பார்த்தான். கையையும் குடத்தையும் பார்த்து கரெக்டா சொல்லிச் சொல்லி பழகிப் போயிருச்சு இதுல மாப்பிள்ளையை எங்கே பார்த்தான் . பார்த்திருந்தாலும் கூட ஒரு குடம் கொடுத்திருக்கப் போறதில்லே. இவன் சொல்லி யாருக்கு புரியும் . ‘ சரி சரி நாளைக்குப் பாத்துக்கிறேன்’ என்றபடி ‘டீ ‘ யை வாங்கிக் குடித்தபடி . ஓரத்தில் இருக்கும் தண்ணீர் குடங்களைப் பார்த்தான் . மூன்று குடங்கள் .

‘ மாமா வர்றாங்கன்னு , இன்னைக்கு இன்னொரு குடம் தண்ணி வாங்கி வச்சேன் நல்லவேளை இந்தத் தெருவுக்கு நீங்க வந்திருந்தா இந்த மூணாவது குடம் எனக்கு கிடைச்சிருக்குமா என்னவோ’ என்றபடி அவள் கொடுத்த தண்ணீரை ‘ வேண்டாம்டி, இப்பதானே டீ குடிச்சேன் ‘ என்றான், பாதி காலியான குடங்களைப் பார்த்தபடி. .

————-

2 Comments on “தண்ணி வண்டி/நாகேந்திர பாரதி”

  1. மிகவும் அழகான நடையில்,ஒரு அன்றாடம் நடக்கும் சம்பவத்தை அருமையாக கண் முன்னே நடப்பது போல சித்தரிதிருக்கிரர்.
    வாழ்த்துக்கள்.

Comments are closed.