
அடை மழையென
பெய்து தீர்க்கிறது
நமக்கான வானம்!
தானியங்களை கொத்தி
திங்கும் சிறு பறவையாய்
நினைவுகளோடு…
பயணிக்கிறது காலம் !
சிறு மாடத்தில் அசையும்
அகல் விளக்கின்
தவிப்பாய்…
நித்தமும் தொடர்கிறது கனவுகளோடு வாழ்வு!
வசந்த காலத்தில்…
பூவாய் பூத்துக்
குலுங்கிய மரம் அது!
மரவளையங்களின்
அடையாளங்களோடு
நாட்களை கடத்துகிறது!
இன்றும்…
சிறகுகள் உதிர்த்த
அம்மரத்தின்…
கூட்டில் வசிக்கும்
பறவைக்குத் தெரியும்
தன் சாயலில் அது
சுமைகள் சுமக்கிறது என்று…?!
இலையுதிர் காலத்திலும்
விடாத அதன் பிரியம்
வாழும் நிமிடத்திற்கு
பல நேரங்களில்…
வண்ணங்களைச் சேர்க்கிறது !
நம் அந்திம காலத்தின்
இறுதியில்… இப்படி
நாம் சந்திக்காமலே
இருந்திருக்கலாம்!
ஆனால்…
எதுவுமற்ற நாட்களில்
நம்மை உயிர்த்தெழ செய்வது என்னவாக இருக்கும்?!
பெரும் அன்பைத் தவிர…!!?
ஆதலினால்…அன்புச் செய்வோம்!
