குங்குமம்/ஜெ.பாஸ்கரன்


அன்று வெள்ளிக்கிழமை.
அம்மன் சன்னதியில் கொஞ்சம் கூட்டம் கூடுதலாய் இருந்தது.
இந்து, கோயில் வாசலில் செருப்பை விட்டு, வரிசையாய் அமர்ந்திருந்த பிச்சைக்காரர்களைத் தாண்டி உள்ளே சென்றாள். இடதுபுறம் குழாயடியில் பாதம் கழுவி, நேரே தெரியும் விநாயகரை வணங்கினாள்.
நாற்பத்தைந்து வயதினைக் கடந்தும், இன்னும் ஒரு மென்மையான கவர்ச்சி; அவள் நடை, உடை, புன்னகை, அமெரிக்கையான பேச்சு, எல்லாமே, பார்த்த மாத்திரத்தில் எவரையும் தன்பால் கவர்ந்துவிடும் இனிமையான சுபாவம். ஐ.டி. கம்பெனியில் வேலை செய்யும் ஒரு மகனுக்குத் தாய் என்று சொன்னாலும், நம்பத் தயங்குபவரே அதிகம்! அழகாகப் பதிய கட்டிய வெளிர்நீல பெங்கால் காட்டன் புடவை, மாட்சிங் பிளவுஸ், மிதப்பதுபோன்ற பதுவிசான நடை; பார்த்தாலே ஒரு மரியாதையை ஏற்படுத்தும் தோற்றம்.
தனியார்ப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியை . அங்கும் அவளைப் பார்த்துப் பரவசப்படுபவர்களை விட, பொறாமைப் படுபவர்களே அதிகம்! மானேஜ்மெண்ட், மாணவிகள் எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும் . “அன்புக்கும், அறிவுக்கும் ஓர் இலக்கணம் இந்து”! இந்து டீச்சர்ன்னாலே ஒரு காந்தம் போன்ற ஈர்ப்பு!
இந்துவின் மனதுக்கு எப்போதுமே பிடித்தமானது இந்தக் கோயிலும், அதன் அமைதியும். திருமணமாகி வந்த நாளிலிருந்து, வாரம் தவறாமல் இங்கு வந்துவிடுவாள். கோயில் குருக்களுக்கும் இந்துவின் மீது மிகவும் மரியாதை. அவரது ஒரே பெண் இந்துவின் பள்ளியில்தான் படிக்கிறாள் . தலைமை ஆசிரியரிடம் சொல்லிச் சேர்த்துவிட்டதே இந்துதான்! அதனால் விசேஷ தீப ஆராதனை, கையில் பூவும், குங்குமப் பிரசாதமும் கொடுக்கத் தவறியதே இல்லை குருக்கள்!
நவக்கிரக சன்னதியைச் சுற்றி, அம்மன் சன்னதிக்கு இந்து வந்தபோது,குருக்கள் அர்ச்சனை முடித்து கர்பக்கிரகத்திலிருந்து வெளியே வந்தார். அர்ச்சனைத் தட்டைக் கொடுத்துவிட்டு, எல்லோருக்கும் குங்குமம் கொடுத்துக்கொண்டே வந்தவர், இந்துவைப் பார்த்துப் புன்னகைத்தாரா இல்லையா என்று நிச்சயமாகச் சொல்லிவிட முடியாத ஒரு முகபாவத்துடன், அவளுக்கு மட்டும் குங்குமம் கொடுக்காமல், அவளைத் தாண்டிச் சென்று விட்டார்!.
’சட்’டென்று உறைத்தது இந்துவுக்கு, “ஒ, இனி எனக்கு இந்த பாக்கியம், மரியாதை எல்லாம் கிடையாதோ? எப்படி மறந்தேன்?” மனது அனலாய்ச் சுட்டெரிக்க, அம்மனை ஒரு வினாடி வெறித்துப் பார்த்தாள். சாந்தம் தவழும் முகத்துடன் இருந்த அம்மன் மேலிருந்த பூச்சரம் ஒன்று நழுவி விழுந்தது. இது ஆசீர்வாதமா, அங்கீகாரமா? எப்படி எடுத்துக்கொள்வது? திடீரெனெத் தனியாய் உணர்ந்தாள்!
விடுவிடென்று திரும்பி வேகமாக நடந்தாள். செருப்பைக்கூட மறந்து, பிச்சைக்காரர்களைக் கடந்து, வெளியேறினாள். எப்போதும் பின்னாலேயே வந்து பிச்சை பெறும் கட்டைக்கால் தாடிக்காரன் கூட, உட்கார்ந்த இடத்திலிருந்தே அவள் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தான்!
அந்தப் புராதனமான பெரிய வீட்டின் நடு ஹாலில் புதிதாய் மாட்டியிருந்த போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தான் சேகர் .காலையில் சார்த்திய மாலை இன்னும் முழுதும் வாடவில்லை. ரெடாக்சைட் தரையில் சீவனற்று சரிந்தாள் இந்து.. கண்களில் கசிந்த கண்ணீர், சோகத்தில் கசந்தது.
சேகர் இந்து திருமணம் ஆகி இருபத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டன. சேகரும் அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகத்தான் இருந்தான். ஏதோ தூரத்துச் சொந்தம். பெரியவர்களாகப் பார்த்து செய்து வைத்த திருமணம்தான்! சுபாவத்தில் சேகர் அமைதியானவன்; எதிலும் பட்டுக்கொள்ளாமல், தன் கடமைகளைச் செய்யும் தாமரை இலைத் தண்ணீரைப் போன்றவன். இந்துவின் மேல் பாசாங்கற்ற அன்பும், அக்கறையும் கொண்டவன். தனக்கென ஏதும் செய்துகொள்ள விரும்பாதவன். பிறர் விருப்பங்களுக்குத் தடை போடாதவன்.
இந்து வித்தியாசமானவள் . அவளது எதிர்பார்ப்புகள் . பெரிய குடும்பம், இயற்கையுடன் இசைந்த வாழ்வு, நல்ல புத்தக வாசிப்பு, மனதைத் தொடும் இசை, மணத்துடன் காப்பி, காலையில் கூவும் குயில் . நியாயமானவை.
சேகருக்கு பாடல்கள், சினிமா, இலக்கியம் என எதிலும் அவ்வளவாக நாட்டம் கிடையாது. ஆனாலும், இந்துவுக்காக, அவள் விரும்பும் ஜெயகாந்தன், எண்டமூரி, நா.பா. கல்கி, தி.ஜா.,லக்ஷ்மி நாவல்களை வாங்கி வைப்பான். ‘ஒல்ட் இஸ் கோல்ட்’ சினிமா பாடல் சிடிக்களையும், ப்ளேயரையும் அவள் படுக்கையருகில் வைத்திருப்பான். எங்கு சென்றாலும் அவளுக்குப் பிடித்த காட்டன் புடவைகலை வாங்கி வருவான்.- இப்போது கட்டியிருப்பது கூட அவன் வாங்கியதுதான்!
இந்துவுக்காக கும்பகோணத்திலிருந்து காப்பிப்பொடி வரவழைப்பான். அவன் காப்பி குடிப்பதில்லை!
இந்துவுக்கும் அவனுக்குப் பிடித்த சமையல் செய்வதிலோ, அவன் வேலைகளைச் செய்வதிலோ ஏதும் தயக்கமோ, தடையோ இருந்ததில்லை!அது கூட அவன் வாய் திறந்து சொன்னதில்லை, இவளாகப் பார்த்துத் தெரிந்துகொண்டது.
திருமணமான புதிதில் சேகர் சொன்னது: “இந்து, நான் ரொம்பவும் பிராக்டிகல் ஆனவன். செண்டிமெண்ட்ஸ், இயற்கையை ரசிப்பது, இசை கேட்பது இப்படி எதுவும் கிடையாது. ஆனால், உனக்கு வேண்டிய எதையும் நீ செய்துகொள்ளலாம், அதற்கு என் பரிபூரண சம்மதம் உண்டு. ஒரு தனியனாய் வளர்ந்து, வாழ்ந்து பழகிட்டேன். என்னுடன் வாழ்வதில் உனக்கு ஒரு சிரமமும் இருக்காது. இருக்கக் கூடாது.”
இந்துவுக்கு அந்த வயதில் சேகரைப் புரிந்து கொள்வதில் அதிகச் சிரமம் இல்லை. ஆனாலும் சிறிது ஏமாற்றம் இருந்தது. அவளது கனவுக் கோட்டைகள் சிறிது தகர்ந்துதான் போயின. கூடவே இருந்து, இளங்காலைத் தென்றலையும், குயிலின் குரலையும், நிலவையும், மழையையும், நீல மேகத்தையும் ரசிக்கும் கணவனையும் கற்பனை செய்திருந்தாள். அதெல்லாம் இல்லாத ஒரு மனித இயந்திரத்தை. நல்லிதயம் கொண்ட மனித இயந்திரம். தன்னுடன் இணைத்த விதியை நினைத்து சில காலம் வருந்தினாள்.
விருப்பு வெறுப்பற்ற ஓரு அமைதியான, ஆரவாரமற்ற வாழ்க்கை. தனித்தனி வாழ்க்கை – இணையாகத் தண்டவாளத்தைப் போல ஓடிக்கொண்டிருந்தது! அவ்வப்போது எட்டிப்பார்க்கும் திருமண பந்தம்! காலம் எந்தவித மாற்றத்தையும் சேகரிடம் ஏற்படுத்தவில்லை. இந்துவும் மாறவில்லை!
ஒருநாள் கையில் காப்பிக் கோப்பையுடன் ஜன்னல் ஓரம் அமர்ந்து, வெளியில் மரத்தில் ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்த அணிலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பல வண்ணங்களில் இறகுகளுடன் வந்தமர்ந்த அந்தப் புதுப் பறவையைப் பார்த்து விழிகள் விரித்தாள்! வண்ணப் பூக்கள் தலையசைத்து ஆடுவதைக் கண்டு குதூகலித்தாள்!
அவசரமாகக் கிளம்பிய சேகர் இந்துவிடம், ”இன்னைக்கு இன்ஸ்பெக்ஷன்,கொஞ்சம் சீக்கிரம் கிளம்பறேன். மதியம் லஞ்ச் ஸ்கூலில் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறியபடி, இவள் பதிலுக்குக் காத்திராமல் வெளியே சென்றான்.
“சரி” என்று தலையாட்டினாள் இந்து. எதிர்பார்ப்புகள் இல்லாத இந்த வாழ்க்கை பழகிவிட்டது,! இரண்டு நாட்கள் சென்ற பின், பள்ளியிலிருந்து வந்தவள், தோட்டத்தில் மர நிழலில் அழகிய மூங்கில் ஜூலா ஒன்று. அமர்ந்து ஆடும் ஊஞ்சல். இளஞ்சிவப்பு குஷனுடன் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து வியந்தாள். பல நாட்கள் தோட்டத்தில் ஒரு ஊஞ்சலைக் கற்பனை செய்திருக்கிறாள் இந்து! ஆனால் கேட்டதில்லை!
“ஜன்னல்ல ஏன் கஷ்டப்பட்டு உட்கார்ந்துகிட்டு. உனக்கு வேண்டும்போதெல்லாம் இந்த ஜூலாவுலெ ஆடிக்கிட்டே, இயற்கையையும் ரசிச்சுக்கிட்டே, காப்பி குடிக்கலாமில்லே? இது நல்லா இருக்கா, உனக்குப் புடிச்சிருக்கா? என்றான் சேகர்.
இந்துவின் கண்களில் நீர் நிறைந்தது. “சேகர், எனக்கு உங்களைப்புரிஞ்சுக்கவே முடியலையே; நான் என்ன செய்யணும்னும் தெரியலையே” என விம்மினாள்.
சிரித்தான் சேகர். “இந்து அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு. எனக்குப் பிடிச்சது உனக்கும், உனக்குப் பிடிச்சது எனக்கும் பிடிக்கனும்னு அவசியம் இல்லே.
பிறரை மகிச்சியடையச் செய்யறது ஒரு பெரிய கலை. என்னோடயேஇருக்கிற இந்துவுக்கு இதைக் கூடச் செய்ய மாட்டேனா?”
“நான் ஒண்ணுமே செய்யறதில்லையே சமையல் தவிர . உங்களுக்குப் பிடிச்சதைக் கூட எங்கிட்டே நீங்க சொன்னதில்லையே?”
“நீ என்னோட இருக்கிறதே எனக்குப் பிடிச்சிருக்கு. உன் கடமையிலிருந்து எப்பவுமே நீ தவறினதில்லையே . எனக்குத்தான் உன் ரசனைப்படிவாழத்தெரியலே, கத்துக்கவும் முடியலே” என்றவாறே ஜூலாவில் அமர்ந்தான். பின் எழுந்து இழுத்துப் பார்த்தான்.”ம்.. ஸ்ட்ராங்காத்தான் இருக்கு, உட்கார்ந்துக்கோ இந்து.” என்று உச்சியில் ஒரு முத்தமிட்டு, உள்ளே சென்று விட்டான்.
அவன் அறையில் துணிகள் அயன் செய்யப்பட்டு, அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேசை சுத்தமாக இருந்தது அவன் டைரி, கண்ணாடி கூடு, பேனா, வாட்ச் எல்லாம் ஒழுங்காக வைக்கப் பட்டிருந்தன. சிரித்துக்கொண்டே, டவலை எடுத்துக்கொண்டு, பாத் ரூமுக்குள் சென்றான். புது மிதியடி போடப்பட்டிருந்தது!
நம் வாழ்க்கையின் சில விநோதங்கள், ‘சட்’ டென்று புரிந்துபுரிந்து விடாது; புரியும்போது நாம் வாழ்க்கையை இழந்திருக்கக் கூடும்! இந்துவுக்கும் அப்படித்தான், சேகரைப் புரிந்துகொள்ள முடியவில்லை!
நினைவுகள் கலைந்தவளாய், சேகர் படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டாள் இந்து. மனம் முழுதும் கேள்விகள் – “ஏன் சேகர் எதுவுமே சொல்லாமெ போய்ட்டீங்க? ஒரு குழந்தை பெற்றுத் தந்ததைத் தவிர, வேறொன்றுமே நான் உங்களுக்கென்று செய்யவில்லையே. செய்ய விடவில்லையே நீங்க. ஏன் சேகர்? ‘கல்லுக்குள் ஈரமா’ உங்க உணர்வுகளை ஏன் சேகர் உங்களுக்குள்ளேயே மறைச்சிக்கிட்டீங்க?”
‘இருக்கும்போதுதான் இப்படியென்றால், போகும்போதும் உங்கள் உடல்நலம் பற்றி ஒன்றுமே சொல்லாமல் . . . . . திடீரென்று என் கண் முன்னாலேயே என்னை விட்டுப் போனது ஏன் சேகர்?
மறுநாள் டாக்டர் மனோ சொன்னபோது நொறுங்கிப் போனேனே சேகர் இதயம் பல்ஹீனமாகி விட்டதை என்னிடமிருந்து ஏன் மறைத்தீர்கள் சேகர்?
நான் இதயமற்றவள் என்றா? ஏன் இந்த சுயநலம்? ‘அப்படிச்
செய்திருக்கலாமோ , இப்படி மாற்றியிருக்கலாமோ என்று எண்ணி, எண்ணித் தனியே புலம்ப வைத்துவிட்டீர்களே சேகர். உங்களை விட என் சுய விருப்பு, வெறுப்புகள் எனக்கு முக்கியம்ன்னு நெனச்சிட்டீங்களா சேகர்? நாம் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் ஏதாவது இருக்கிறதா சேகர்?
மனதிற்குள் புலம்பினாள் இந்து.
காலை எழுந்தது முதலே உடலும், மனதும் மிகவும் சோர்வாய் இருந்தது. கையில் கோப்பையுடன் இருள்பிரியாத அந்தக் காலையில் ஜூலாவில் வந்து அமர்ந்தாள் . மரக்கிளையில் கழுத்து சுருக்கி அமர்ந்திருந்த குருவியைப் பார்த்தாள் . ஊர்க்குருவி, கரிக்குருவி, கல்லுக்குருவி, கீச்சாங்குருவி, தினைக்குருவி, தூக்கணாங்குருவி . எத்தனைக் குருவிகளை இழந்துவிட்டோம், எண்னியவாறே காப்பியை உறிஞ்சினாள்.எங்கோ ஒருகுயில் குக்கூ என்றது.
“உனக்குப் பிடிச்சிருக்கா, இந்து?”
மனது வெறுமையாய் இருந்தது. கரம் பிடித்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, நெருப்பைச் சுற்றி வந்து, வாழ்நாள் முழுதும் உன்னைக் கை விடமாட்டேன் என்று செய்த சத்தியத்தை மீறியது பெரிய துரோகம் அல்லவா? இப்படித் தனியே புலம்புவதற்கா இந்த பந்தம்?அன்று பள்ளிக்குள் சென்றதும், வீணா ஓடிவந்தாள் . இந்துவின் மிக அணுக்கமான தோழி . சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள, சில இறுக்கமான நேரங்களில் தோளில் சாய்ந்து கொள்ள, ஒரு நெருக்கமான தோழி.
“என்ன இந்து, ஒரு மாதிரியா இருக்கே? உடம்பு சரியில்லையா?”
“ம், மனசுதான் சரியில்லே . மீதி நாட்கள் எப்படிப் போகும்ன்னு புரியல்லெ.எதையெல்லாம் மாற்றிக்கொள்ளணும்னு தெரியலே”
“ஏன் மாற்றிக்கணும்? ரயில் பயணத்தில் உடன் வருகின்றவர்கள் இறங்கிட்டா நாமும் இறங்கிடறோமா? நல்ல நினைவுகளைச் சுமந்துக்கிட்டு, அப்படியே பயணம் செய்ய வேண்டியதுதான்.”
வெள்ளிக்கிழமை கோயிலில் நடந்ததைச் சொன்னாள் . “சேகருக்கு முன்னாடியே இந்தப் பூவும் பொட்டும் என்கூட வந்துக்கிட்டு இருக்கு. இப்போஏன் மறுக்கிறாங்க? அதைவிட, சேகர் இல்லை என்பதை நினைவு படுத்தி, மூலைலெ துரத்தி அடிக்கிறாங்க.
“இப்போ அந்தப் பழக்கங்கள் எல்லாம் மாறிட்டு வருது இந்து. கணவன் ஒரு நண்பனைப் போல . அவனை இழப்பது வருந்தத் தக்கது, ஈடு செய்ய முடியாததும் கூட. . ஆனால் அதற்காக, மீதி வாழ்க்கை பூரா வாசங்களை இழந்து, சுயத்தை இழந்து வாழணும்னு கிடையாது”
பேசிக்கொண்டிருக்கும்போதே, காயத்ரி . குருக்களின் பெண் குழந்தை . ஓடி வந்தது. “குட் மார்னிங் டீச்சர்” என்றபடி, ஒரு மல்லிகைச் சரத்தையும், சிறிய குங்குமப் பொட்டலத்தையும் இந்துவிடம் கொடுத்தது. “எங்கப்பா குடுக்கச் சொன்னாங்க. வெள்ளிக்கிழமை ராத்திரி பூராதூங்கலையாம். அம்மாகிட்டெ உங்களைப் பற்றி ரொம்ப நேரம் பேசிட்டுஇருந்தாங்க.
‘பூவும் பொட்டும் பொறந்ததிலேர்ந்து அவ கூட வந்துக்கிட்டு இருக்கு .நடுவுலெ அதெ வேணாம்னு சொல்ல நாம யாரு? டீச்சர் முகம் வாடினதப் பார்த்தபோது, மனசுக்கு ரொம்ப சங்கடமாப் போச்சு இன்னைக்குக் காலைலெ, கோவில்லேர்ந்து அவசரமா இந்தப் பிரசாதம் கொண்டு வந்து, உங்க கிட்டே குடுக்கச் சொன்னாங்க” என்றது குழந்தை .
பள்ளிக்கூட மணி அடித்ததால், திரும்பிப் பார்க்காமல், வகுப்புக்குள் ஓடி மறைந்தாள் காயத்ரி.
இரண்டாவது மணி அடித்தபோது, அது அந்தக் கோவில் மணியோசையாய்க் கேட்டது இந்துவுக்கு!

4 Comments on “குங்குமம்/ஜெ.பாஸ்கரன்”

  1. அருமை!
    மிக அருமையான கதை.
    இல்லை, கதை அல்ல,நிஜம்.
    என் மனதிலும் பல முறை இந்த எண்ணங்கள் ஓடியது உண்டு.
    சமுதாய மாற்றங்கள் அவசியம்.

  2. மிக மிக அருமையான கதை. ஆரம்பிக்கும் போது ஒரு அழகு தேவதையை கண் முன் நிறுத்தி விட்டு சட்டென்று சோகத்தை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள். சோகத்தின் நடுவே குருவிகளின் வரிசைகளையும் கொண்டு வந்த விதம் அருமை. முடிவில் என் கண்ணீர் என்னைக் கரைத்தது. பாராட்டுகள்.

  3. சுகமோ சோகமோ நிரந்தரமில்லை, இதனை தெளிவாக கதை கொண்டு செல்கிறது
    ஏதோ ஒன்றை வீணாக நாம் சுமந்து துயரம் கொள்கிறோம்.

Comments are closed.