உன்னிடத்தில் ஒப்புவித்த உள்ளத்தால்/அழகியசிங்கர்

பகவான் ஸ்கந்தாஸ்ரமத்தில் வாசம் செய்த காலம் பகவானது பரம பக்தரான ஸ்ரீ டி கே சுந்தரேச ஐயர் தினம் பகவானைத் தரிசிக்கச் செல்லும்போது அவருக்காக ஏதாவதொரு தின்பண்டம் வாங்கிச் செல்வது வழக்கம்.

ஒருநாள் டிகேஎஸ் அவர்களிடம் பகவானுக்குத் தின்பண்டம் வாங்கக் கையில் பணமே இல்லாததால் என்ன செய்வதென்று கவலைப்பட்டார். எப்படியாயினும் பகவானைத் தரிசிப்பதை நிறுத்தக்கூடாது என்று மலைக்குப் புறப்பட்டார்.

அவர் பகவானை நமஸ்கரித்து வருத்தம் தோய்ந்த குரலில், “பகவானே இன்று தங்களுக்குச் சமர்ப்பிக்க இந்த ஏழை ஒன்றும் கொண்டு வரவில்லை” என்று கூறி நின்றார்.

டி கே எஸ் அவர்களை நோக்கி பகவான் கூறினார், “ஏன்? நீ தான் முக்கியமானதைக் கொண்டு வந்திருக்கிறாயே; மற்றவை எல்லாம் முக்கியமல்ல” என்றார்.

டி கே எஸ் அவர்கள் ஒன்று புரியாமல் திகைத்து நிற்க, பகவான், “ஏன்! புரியவில்லையா? நீ உன்னைக் கொண்டு வந்திருக்கிறாய் அல்லவா! ” என்று கூறிச் சிரித்தார்.

பகவான் தமது அன்பர்களிடம் விரும்பியது ஒன்றுதான்; அது ஆத்ம சமர்ப்பணம். டி கே எஸ் அவர்கள் பகவானிடம் தன்னையே ஒப்பவித்தவராயிற்றே!

(ரமண விருந்து – பாகம் 3 என்ற புத்தகத்திலிருந்து)