ராபர்ட் பிர்சிக்கின் Zen and the art of motorcycle maintenance நாவல்/எம்.டி.முத்துக்குமாரசாமி

Phaedrus

ராபர்ட் பிர்சிக்கின் Zen and the art of motorcycle maintenance நாவல்சொல்லியின் பெயர் ஃப்யாட்ரஸ், ஆமாம் பிளேட்டோவின் உரையாடல்களில் வரும் கிரேக்க தத்துவஞானியான அதே ஃப்யாட்ரஸ்தான்.. நினைவின் புதைகுழிகளிலிருந்து இந்த நாவலைத் தோண்டி எடுத்தபோது முதலும் கடைசியுமாக நிற்பது இந்தப் பெயர் மாத்திரம்தான். நீட்ஷே ஃப்யாட்ரஸை சிலாகித்து எழுதியிருக்கிறார். ஃப்யாட்ரஸ் ஒரு ஒளிபொருந்திய சிந்த்னையாளன் சுதந்திரத்தின் முழு வீச்சுள்ளவன். சமூக வாழ்க்கை, லட்சியங்கள், அன்பு, பாசம், விருப்பு, வெறுப்பு சாய்வுகள் எதுவுமே சிந்த்னையை பாதிக்காத வண்ணம் கேள்விகளை எழுப்புபவன். ஃப்யாட்ரஸை பிளேட்டோவின் உரையாடல்களில் படித்தபோது anarchic agency of untamed thought, the compaction of pure intellect என என் நோட்டுப்புத்தகங்களில் குறித்து வைத்திருக்கிறேன். மோட்டார் சைக்கிள் நாவலில் ஃப்யாட்ரஸ் எதற்கு? இத்தனைக்கும் மோட்டர் சைக்கிள் நாவல் ஒரு சாதாரண இரண்டு கருத்துகள் அல்லது நபர்களுக்கிடையிலுள்ள மோதலை விவரிக்கிற நாவல்தான். கிறிஸ் என்ற பதின்பருவத்தினனும் அவன் அப்பாவும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கின்றனர் அவர்களுடைய எண்ண ஓட்டங்களில் மதிப்பீடுகளில் உரையாடல்களில் வரும் முரணே கதை. அவர்கள் செல்லும் மலைப்பாதை கூட புதிதில்லை பீட் எழுத்தாளரான ஜேக் கிராவ்க்கின் on the road முதற்கொண்டு எராளமான அமெரிக்க தொலைக்காட்சிகளில் பார்த்த நிலக்காட்சிகள்தான். அப்பா: பிள்ளை, சிந்தனையின் சிக்கலான கட்டுமானம்: எந்திரத்தின் எளிமை, வேகத்தை வேண்டுகிற நவீன உலகு: பொறுமையை வேண்டுகிற சிந்தனை, நுகர்வு கலாச்சாரத்தின் பேராசை: இயற்கையின் பேரழகும் அபாயமும்- என இரு எதிரெதிர் முரண்களின் trsnscendence ஆகவே ஃப்யாட்ரஸ் மோட்டார் சைக்கிள் நாவலில் வருகிறான். மனசாட்சியாக, தீவிரமான கேள்விகளை முன் வைப்பவனாக, குறியீடாக ஃப்யாட்ரஸ் இருக்கிறான். மகன் கிறிஸுக்கு அப்பாவின் பிளவுபட்ட மனதின் ஒரு பாகமாகவும் ஃப்யாட்ரஸ் முன்வைக்கப்படுகிறான். நம்முடைய எந்திரமயமான சூழலோடு நுண்ணுணர்வற்று, வீணடிக்கிற விதமாய், உபயோகி தூக்கி எறி என்று மட்டுமே நாம் உறவு கொள்வதை மீறுவதற்கு நமக்கு எப்போதுமே ஒரு ஃப்யாட்ரஸ் தேவை. கொரானாவுக்கு பிந்தைய உலகு புத்தம் புதிய சவால்களை நமக்கு முன் வைக்கப் போகிறது. நம்முடைய நவீன இலக்கியத்தின் பல படைப்புகள் அர்த்தமிழந்து வெறும் வரலாற்று மதிப்பு மட்டுமே கொண்டவையாக மாறிவிடலாம். இந்த பெரிய சிந்தனை உடைசலுக்கு (epistemological break) பிறகு நாம் எதிர்கொள்ளப்போகும் புதிய முரண்களை வார்த்தைப்படுத்தவும் அதன் transcendence என்ன என்பதைப் பற்றி யோசிப்பதற்கும் மோட்டார்சைக்கிள் நாவலை ஊன்றிப் படிப்பது உதவக்கூடும்.