ட்யூன் (2021) : பாலை நிலவுலகம்


கால சுப்ரமணியம்

நான் இளமையிலிருந்தே அறிவியல் புனைகதை படைப்புகளில் திளைத்து அதிலுள்ள மிகச் சிறந்த படைப்புகளையெல்லாம் படித்துவிட வேண்டும் என்று ஏராளமாகப் படித்தேன். பின்பு அதே போல் சினிமா, டிவி தொடர்களையும் பார்த்து வருகிறேன். எல்லோரையும் படித்தாலும் நான் மிகவும் அபிமானிப்பவர்கள் ஹெச்.ஜி.வெல்ஸ், ரே பிராட்பரி, ஆர்தர் சி கிளா(ர்)க், பிரையன் ஆல்டிஸ், வில்லியம் கிப்சன் (இன்னும் சிலர் உண்டு) போன்ற உன்னதங்களே. திரில்லர் வகை அசிமோவோ, ஜனரஞ்சகமான ஃபிராங்க் ஹெர்பர்ட்டோ அல்ல. எனவே அசிமோவை பௌண்டன் வரிசை, சில கதைகள் என்று படித்தாலும் ட்யூன் வரிசையைப் படிக்க நினைக்கவில்லை. ஆனால் பின்பு திரையில் பார்த்தேன். (இப்படி எழுத்தில் ஒதுக்கிய சுமாரானவர்களை இப்போது திரையில் தேடிப்பிடித்துப் பார்த்துவிடுகிறேன்).


ஆலிஸின் அற்புத உலகம், ஜே.ஆர்.ஆர். டோல்கினின் ‘மிடில் எர்த்’, ஊர்சுல லா குனின் ‘எர்த் ஸீ’’, சி.எஸ். லூயிஸின் ’நார்னியா’, பிற்கால ஹாரி போட்டரின் ஹோக்வார்ட்ஸ் – இவையெல்லாம் ஃபேண்டஸி இலக்கியத்தின் அற்புத உலகங்கள் தான். அ.பு.வில் அர்ராகிஸ் என்ற பாலை மணல் நில உலகைப் படைத்துவிட்டார் ஹெர்பர்ட். பிற்கால ஸ்பேஸ் ஓபராவான ’ஸ்டார்வார்‘ போன்ற பல படங்களுக்குத் தீனியாக அவரது கற்பனை உலகம் (பிரபஞ்சம் அல்ல) அமைந்துவிட்டது.


பாலைநிலம் என்பதால் அராபியத் தன்மை, இன்றைய சுற்றுச்சூழலியல், இனஒடுக்குமுறை, டிஸ்டோப்பியச் சித்தரிப்புகளுக்கு வசதியாகவும் அவரது உலகம் அமைந்துவிட்டது. கோபோ அபேயின் The Woman in the Dunes என்ற ஜப்பானிய இலக்கிய நாவல் 1962லேயே வந்து மணல் நில உலகை இலக்கியத்தில் பரிச்சயப்படுத்திவிட்டது. (அதை மணற்குன்றுப் பெண் என்று தமிழில் முழிபெயர்த்திருக்கிறார்கள்),


இன்றுள்ள தொழில் நுட்ப வசதிகள்தான் ஃபேண்டஸி, அ.பு., காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களின் வகைதொகையற்ற பெருக்கத்துக்குக் காரணமாகி விட்டுள்ளன. ஜார்ஜ் லூகாஸும் ஸ்பீல்பெர்க்கும் அதற்கு உரமளித்தனர். அதற்கு முந்தைய இவ்வகைப் படங்களெல்லாம் கதைச் சிறப்பாலும் நடிப்புத் திறமையாலுமே தம்மை வழிநடத்திக் கொண்டன. 2001 ஸ்பேஸ் ஒடிசி அவ்வகையில் ஒரு மாஸ்டர்பீஸ். பிறகு ரைட்லி ஸ்காட்டின் ‘பிளேடு ரன்னர்‘ தான் தொழில் நுட்பத்துடன் கலைநுட்பத்தைக் காட்டியது.
முதலில் தோன்றிய தாமஸ் மோரின் உட்டோப்பியாவுக்குப் பின்வந்த சிறந்த அ.பு. எல்லாம் டிஸ்டோப்பிய உலகைச் சித்தரித்த நாவல்கள்தான். திரைப்படமாக்க முடியாத சிக்கலான கதையையும் காட்சிஉலகையும் கொண்ட நாவல்கள் சிலதில் ட்யூனும் ஒன்று. (அனிமேசனிலேயே காலம் கழித்த லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஹோபிட் படங்கள் வெற்றி பெற்றது டிஜிடல் தொழில் நுட்ப வசதியால் தான். சமீபத்தில் புதிய தொழில்நுட்பத்தை திரை உலகுக் அளித்தது The Falcon and the Winter Soldier).

ட்யூன் என்ற பெயரை ஒட்டுவாலாக் கொண்டு இன்று நிறைய அபத்தப் படங்கள் வருகின்றன. அந்தப் பெயர் செய்த மயக்கத்தில் சமீபத்தில் Dune World (2021) என்ற அபத்தத்திலும் அபத்தமான ஒரு படத்தையும் பார்த்துத் தொலைத்தேன்.

படமாக எடுக்கமுடியாத ட்யூனை முதல் படமாக்க முயன்றவர் Jodorowsky (2013ல் வந்த Jodorowsky’s Dune என்ற விவரணப் படத்தைப் பார்த்து அவரது அதிதீவிர ஏற்பாடுகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. சர்ரியலும் மிஸ்டிசிசமும் ஆன்மீகமும் கலந்த அவரது படங்கள் அவர் ஒரு எக்ஸ்செண்ட்ரிக்கான ஜீனியஸ் என்பதையே காட்டுகின்றன இந்த பரிசோதனையாளர்கள் சில சமயம் நமக்குச் சோதனையாகவும் அமைந்துவிடுவார்கள். (அவர் அறையைக் காட்டும் போது ஒரு ‘சிவ ராம’ பிளாஸ்டர் பொம்மை அசிங்கத்தையும் பார்க்கமுடிந்தது. கோணங்கித் தனம். அவர் டாலி, பிங்க் பிளாய்டு போன்ற பலரை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தது, சிறந்த டிசைனர்களைக் கொண்டு டிசைன்களை முழுதும் வரைந்து முடித்தது (அந்த டிசைன்கள் பிறகு பல ஹாலிவுட் பிரபல படங்களில் பயன்படுத்தப்பட்டன. ஸ்பீல்பெர்க்கின் E.T. வந்தபோது சத்யஜித் ராயிக்கு ஆர்தர் சி கிளாக் ‘உங்கள் ஏலியன் பட டிசைன்களை திருடியுள்ளார்கள்’ என்று கடிதம் எழுதியதுபோல் பல படங்களிலும் அவரது டிசைன்களை திருடினார்கள். பல ட்யூன் படங்களிலும் அது நிகழ்ந்துள்ளது.)

ஜோடொரோவ்ஸ்கி பணம் திகையாமல் தன் திட்டத்தைக் கைவிட நேர்ந்தது. ஆனால் அதற்காக அவர் செலவிட்ட உழைப்பு ஆச்சரியமானது. (ஹென்றிமில்லர் தன் ரோஸிகுரூசிபிகேஷன் நாவல்கள் தொடரில் ஒரு மகத்தான நாவலுக்கான ஆயத்தங்களையே நாவல்கள் ஆக்கியிருப்பார். அந்த நாவல் எழுதப்படவேயில்லை என்றாலும் அதற்கான பயணமே அவரது மாஸ்டர்பீஸ்களை உருவாக்கியது. அந்த வாய்ப்பு ஜோடொரோவுக்கு இல்லை. ஒரு டாக்குமெண்டரியைப் பார்த்து நிறைவுகொள்ள வேண்டியுள்ளது.), அவரது டிசைன்கள் பின்பு ட்யூன் காமிக்ஸ் புத்தகங்களுக்கு பெருமளவில் உதவியிருக்கும் போல் தெரிகிறது.


படிப்பதற்கு ரசிக்காத கேம் ஆஃப் த்ரோன் (GOT) மிகச் சிறப்பாகப் படமாக்கப் பட்டிருந்தது. படித்து ரசிக்கவும் படமாக சுவாரஸ்யமும் கொண்டிருந்தது ஹாரி போட்டர்.


பெருந்திரளான கதையும் விந்தை வியப்புகளும் நுட்பங்களும் கொண்ட லார்ட் ஆஃப் த ரிங்ஸ் 3 பாகங்களில் அடைத்து முடிக்கப்பட்டது (நல்லவேளை ஒரு நீண்ட டிவி தொடர் வரப்போகிறதாம்.) சிறிய நாவலான ஹோபிட் 3 படங்களாக விரிக்கபட்டுவிட்டது. (டோல்க்கினின் இந்த இரண்டு நாவல்கள் தான் இலக்கியத்தின் / ஃபேண்டஸி இலக்கியத்தின் இதிகாசங்கள். கொடுமுடிகள்). ஹாரி போட்டரின் மூலமான ஊர்சுலா லா குனின் எர்த் ஸீ மோசமாகப் படம் ஆக்கப்பட்டு, ஹாரி போட்டரைப் பார்த்து சூடு போட்டுக்கொண்டதானது ஒரு விடம்பனம்தான்.


David Lynch கையில் ட்யூன் படம் ஒருவழியாக முடிந்தது. அதைப் பார்த்துவிட்டு ஜோடொரோவ், லின்ச் தோற்றுவிட்டார் என்று சந்தோசப்பட்டார். தன்னுடைய தோல்வியுற்ற படமாக ட்யூன் திரைப்படத்தை கருதிய லின்ச் தன் பெயரையே அதில் இடம் பெறாமல் செய்துவிட்டார். ஆனால் அவர் பெயரைச் சொல்லித்தான் மூன்று அல்லது ஐந்து பிரதிகள் வரை இன்று உலா வருகிறது.


பிறகு இரு டிவி மினி சீரியல்கள் வந்தன (2000 & 2003). Frank Herbert’s Dune (2000) என்ற பெயரில் வந்த 3 பகுதி கொண்ட John Harrison இயக்கி படம். அதன் தொடர்ச்சிதான் Children of Dune (2003) என்ற தொலைக்காட்சிப் படமும். அதில் இரண்டாவது பரவாயில்லை. ஒட்டுமொத்தத்தில் லின்ச் படத்துக்கு எவ்வளவோ மேல்.
இந்த முன்கதைகளுக்குப் பின்தான் வந்துள்ளது இன்றைய ட்யூன் (2021). இதன் இயக்குநர் Denis Villeneuve முன்பே Arrival (2016), Blade Runner 2049 (2017) போன்றவற்றில் நல்ல பேர் எடுத்தவர். (ஆனால் ரைட்லி ஸ்காட்டின் பிளேட் ரன்னரை அவரால் எட்ட முடியவில்லை).


இங்கே இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மேற்கில் ரிலீஸ் ஆகிவிட்டதால் ஆவலில் சென்ற மாதமே ஒரு தியேட்டர் காப்பியைப் பார்த்தேன். அதே கதைதான். சில மாற்றங்கள். ஒடுக்கப்பட்டவர்களாக வருபவர்கள் கருப்பினத்தவராக வருகிறார்கள். இளவரசி இருளன் கதையை எடுத்துரைப்பு செய்வதற்கு பதில் இதில் அந்த ஒடுக்கப்பட்ட ஃபரிமென் பூர்வகுடிப் பெண் ஷானி எடுத்துரை செய்கிறாள். கதையை நன்றாகத் தெரிந்தவர்களால்தான் பல நுணுக்கமான காட்சிகளைப் புரிந்துகொள்ள முடியும். அந்த பூதாகார மணல் புழு பல படங்களில் வந்துவிட்டது என்றாலும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. “spice” எனப்படும் கதையின் ஆதாரமான அமிர்தம் போன்ற ஒரு லாகிரிப் பொருளை சேகர அறுவடை செய்யும் காட்சிகள், மணல் வெளியில் சூரிய உக்ரத்தில் பகலில் அல்லாமல் இரவிலேயே வாழும் வாழ்க்கை, எனவே படத்தின் முக்கிய காட்சிகள் இருளிலேயே எடுக்கப்பட்டிருக்கும் உத்தியின் மாய மயக்கு என்று பல ஜால யதார்த்தங்கள் இந்தப் படத்தில் உள்ளன.


இந்த ட்யூன் (2021) படத்தின் இரண்டாம் பகுதி அடுத்த வருடம் வருமாம். (டிவி தொடரின் அடுத்த பகுதியும் வரப்போகிறதாம்). எனவே இந்த முதல் பகுதிப் படம் தொடரும் என்று அந்தரத்தில் முடிந்து போனது ஒரு முழுமையின்மை. அதை விசுவலாக பிரமாதமாக நிறைவு செய்ய முயன்றிருக்கிறார் டைரக்டர். (நான் முதலில் பார்த்த தியேட்டர் காப்பி நிறைவுதராமல், மறுபடியும் இங்கே ரிலீஸ் ஆன பிறகு சென்ற வாரம் மீண்டும் பார்த்தேன். ஓரளவு நிறைவு தந்தது படம். இடையில் (முன்பே பார்த்திருந்த) டேவிட் லின்ச் பெயரில் உள்ள ஒரு படத்தையும் இரு டிவி சீரியல்களையும் ஜோடரோவின் டாக்குமெண்டரியையும் பார்த்துத் தயார் படுத்திக் கொண்டேன்.


பல நல்ல நடிகர்கள் படத்தில் இருந்தாலும் நாயகன் அவ்வளவுக்கு சிறக்கவில்லை.
ஒரு சினிமா பார்த்து ரசிக்க வேண்டிய கலை. அதைப் படித்து உணரவே முடியாது.
எனவே படத்தின் உள்ளடக்கத்துக்குள் நுழையாமலேயே சுற்றிச் சுற்றி வந்து ஒருவழியாக இப்போதைக்கு முடிக்கிறேன்.