ஒரே ஒரு சொல் தவறாக/எம்.டி.முத்துக்குமாரசாமி

ஒரே ஒரு சொல் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுவிட்டதால் மொத்த நாவலுமே சொதப்பிவிட்டதாக மூலத்தைப் படித்த நீங்கள் என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியொரு துர்பாக்கியம் எனக்கு நிகழ்ந்தது.
சில்க் ( 1996 ) என்பது இத்தாலிய எழுத்தாளர் அலெஸாண்ட்ரோ பாரிக்கோவின் நாவலாகும், இது 1997 இல் கைடோ வால்ட்மேன் என்பவராலும் 2006 இல் ஆன் கோல்ட்ஸ்டைன் என்பவராலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான நாவல் தமிழில் ‘பட்டு’ என்ற தலைப்பில் சுகுமாரனால் மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு பதிப்பகத்தினால் 2012-இல் வெளியிடப்பட்டிருக்கிறது.

அலெஸாண்ட்ரோ பாரிக்கோவின் நாவலை நான் எப்போது ஆங்கிலத்தில் படித்தேன் என்று நினைவில்லை ஆனால் அந்த நாவலின் கவித்துவத்தினால் அது என் மனதில் ஊன்றிக் கிளை பரப்பியிருந்தது. தமிழில் அந்நாவல் வெளிவந்தபோது மிகுந்த ஆர்வத்துடன் அதை வாங்கினேன்.

நாவலின் மொழிபெயர்ப்பில் ஏற்பட்டிருக்கும் ஒற்றைச் சொல் சொதக்ப்பலின் தீவிரத்தை கதையைச் சொல்லாமல் விளக்க இயலாது.

நாவலில் ஹெர்வே ஜான்கர் என்பவன் பட்டுப்புழு முட்டைகளை வாங்க தான் வசிக்கும் லாவில்லேடியூ நகரத்திலிருந்து (ஃபிரான்ஸ் தேசம்) ஐரோப்பா ஆசியா என பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து ஜப்பானுக்குப் போக வேண்டியிருக்கிறது. கதை 19 ஆம் நூற்றாண்டில் நடப்பதால் பயணத்திற்கே மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. ஜப்பான் அப்போது உலக நாடுகளோடு திறந்த உறவில் இல்லாமல் இருந்ததால் மூடப்பட்ட தேசமாக இருந்தது. தரமான பட்டு நூலை உருவாக்கும் பட்டுப்புழு முட்டைகள் ஜப்பானில்தான் அப்போது கிடைக்குமென்பதாலும் லாவிலேடியூ நகரமே பட்டுத் தாயாரிப்பை நம்பித்தான் இருந்தது என்பதாலும் ஹெர்வே ஜான்கர் ஜப்பானுக்கு டச்சு கள்ளக்கப்பல்களில் சென்றடைகிறான். ஜப்பானிய கிராமமொன்றில் செல்வந்தபிரபு ஒருவரின் வீட்டையடைந்து அவரிடமிருந்து பட்டுப்புழு முட்டைகளை வாங்கி வருகிறான். ஹெர்வே ஜான்கர் அப்படியாக பரிவர்த்தனையில் ஈடுபட்டிருக்கையில் ஜப்பானிய பிரபுவின் அருகே உள்ள பேரழகியின் மேல் காதல் வசப்படுகிறான். மொழியற்ற அந்தக் காதல் இருவருக்குமிடையில் கண்ணோடு கண் கலப்பதாலும் தேநீர் அருந்துகையில் பரிமாறிக்கொள்ளப்படும் சமிக்ஞைகளாலும் பலப்படுகிறது. தன்னுடைய கையுறையை அவளுக்கு ரகசியமாக அனுப்பும் ஹெர்வே ஜான்கருக்கு அவள் தனக்கு ஈடாக ஒரு பணிப்பெண்ணை அனுப்பி வைக்கிறாள்; அவளோடு அவன் உடலுறவு கொள்கிறான். அவள் அவனுக்கு ரகசியமாக ஒரு ஜப்பானிய மொழிக்கடிதத்தையும் அனுப்பிவைக்கிறாள். ஊருக்குத் திரும்பிய பின் அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அறிவதற்காக அவன் ஜப்பானிய உயர்தர வேசி ஒருவளின் உதவியை நாடுகிறான். அவள் அவனுக்கு அக்கடிதத்தில் “ திரும்பிவா இல்லையென்றால் நான் மரித்துவிடுவேன்” என்று எழுதியிருப்பதாக வாசித்து சொல்கிறாள். ஹெர்வே ஜான்கரும் அவன் மனைவி ஹெலனும் பட்டுப்புழு முட்டை வணிகத்தால் கிடைத்த பணத்தைக் கொண்டு நன்றாகவே வாழ்கிறார்கள்; விடுக்ப்பமறைகளுக்குச் செல்கிறார்கள். மீண்டும் ஒருமுறை பட்டுப்புழுக்களுக்கான தேவை ஏற்படும்போது ஜப்பானில் போர் நடப்பதாக செய்தி கிடைக்கிறது. ஹெர்வே ஜான்கரை சீனாவிலிருந்து பட்டுப்புழு முட்டைகளை வாங்கி வந்தால் போதும் என்று பட்டுநூல் தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள் ஆனால் ஹெர்வே ஜான்கர் ஜப்பானுக்கே தன் காதலின் பொருட்டு செல்ல விழைகிறான். அவன் மனைவி ஹெலென் கண்டிப்பாக நீ திரும்பி வந்துவிடுவாய்தானே என்று கேட்கும்போது அவள் மேல் ஆணையிட்டு திரும்பி வருவதாகச் சொல்லிப் பிரிகிறான்.

இந்த முறை ஜப்பானை அடையும்போது அவன் வழக்கமாக பட்டுப்புழு முட்டைகள் வாங்கும் கிராமம் முற்றிலுமாக போரினால் அழிக்கப்பட்டிருக்கிறது. ஹெர்வே ஜான்கர் ஒரு சிறுவனின் உதவியுடன் மூட்டை முடிச்சுகளுடன் குடிபெயர்ந்து சென்றுகொண்டிருக்கும் கிராமத்தாரையும் அவர்களின் பிரபுவையும் இவன் காதலிக்கும் பெண்ணின் சிவிகையையும் கண்டடைகிறான். சிறுவன் காதலின் தூதுவனாக அடையாளம் காணப்பட்டுவிட்டதால் தூக்கிலிடப்படுகிறான். காதலியைக் காணாமல் அவள் சிவிகையை மட்டுமே கண்ட ஹெர்வே ஜான்கர் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறான். சீனாவில் பட்டுப்புழு முட்டைகளை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பும்போது புழுக்கள் அனைத்தும் இறந்திருக்கின்றன.

லாவில்லேடியூவில் இருக்கும்போது ஹெர்வே ஜான்கருக்கு ஏழு பக்க ஜப்பானிய காதல் கடிதம் ஒன்று வருகிறது. அதில் என்ன எழுதியிருக்கிறதென்று அறியாத ஹெர்வே ஜான்கர் மீண்டும் அதே ஜப்பானிய வேசியின் உதவியை நாடுகிறான். அந்தக் கடிதம் உச்ச பட்ச காமத்தையும் காதலையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

ஹெர்வே ஜான்கரின் மனைவி ஹெலென் நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறாள். அவளுடைய கல்லறையில் ரோஜாக்களை வைக்கபோகும் ஹெர்வே ஜான்கர் வேறொருவர் நீல நிற மலர்களை அக்கல்லறையில் வைத்திருப்பதைப் பார்க்கிறான். அந்த மலர்களை அவன் ஜப்பானிய வேசியின் வீட்டில் அவள் கைகளில் மோதிரங்களைப் போல அணிந்திருப்பதைப் பார்த்திருக்கிறான். சிந்தனைவயப்பட்டு சஞ்சலங்களுக்கு ஆளாகும் ஹெர்வே ஜான்கர் ஜப்பானிய வேசியைத் தேடிச் செல்கிறான். அந்த ஏழு பக்க காதல் கடித்தத்தை எழுதியது அவள்தானே என ஹார்வே ஜான்கர் கேட்கும்போது அந்தக் கடிதத்தை ஜப்பானிய மொழியில் வடித்தது மட்டும்தான் தான் மற்றபடி அந்தக் கடித்தத்தை எழுதியது அவன் மனைவி ஹெலென் என அவள் உண்மையைச் சொல்கிறாள்.

ஹெலெனின் இறப்புக்குப் பிறகு 23 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த ஹெர்வே ஜான்கர் அவ்வபோது ஹெலெனின் கல்லறைக்குசென்று அவளோடு பேசுவதை போகிற போக்கில் சொன்னபடி நாவல் முடிகிறது.

நாவலில் 62 ஆவது அத்தியாயத்தில் ஹெலெனின் மரணத்திற்குப் பின் அவள் கல்லறையில் ஹெர்வே ஜான்கர் ‘ஹெலோஸ்’ என்ற ஒற்றைச் சொல்லைப் பொறித்தான் என்று மூலத்திலும் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் அதன் அர்த்தம் ‘alas’ என்றும் இருக்கிறது. ஹெலென் என்ற பெயருக்கு ஒத்திசைவுடைய ‘ஹெலோஸ்’ என்ற சொல் alas என்பதற்கு ஈடாக ‘ஐயகோ’ என மொழிபெயர்க்கப்படிருக்கவேண்டும். தன் அருகில் வாழும் மனைவின் காதலை உணராமல் எங்கோ மொழி தெரியாத பெண்ணின் மேல் காதல் வசப்பட்டுக்கிடந்த ஹெர்வே ஜான்கரின் கதையிலுள்ள அங்கத முரணை, கவித்துவ உச்சத்தைச் சொல்லாமல் சொல்லும் வார்த்தை ஹெலோஸ் (ஐயகோ) என்பது. நாவலின் ஆன்மாவே அந்த ஒரு சொல்லில்தான் இருக்கிறது. அதுவும் தனக்கு வந்த காதல் கடிதத்தை எழுதியது தன் மனைவி ஹெலன் என்பதை ஹெர்வே ஜான்கர் அறிவதற்கு முன்பே நடப்பதால் அச்சொல் கூரிய அங்கத அனுபவம் கொண்டதாய் வாசிப்பின் பின்னோக்கில் முகிழ்க்கிறது.

அதை நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பிலோ (பக்கம் 114) “அவள் கல்லறைக்கல்லில் ஹெர்வே ஜான்கர் ஒரே ஒரு வாசகத்தை மட்டும் பொறித்தான் “ஹெலன்” “ என்றிருக்கிறது. போச்சா? அத்தனை அர்த்தமும் நாவலின் கவித்துவ தருணமும் சீரழிந்துவிட்டதா? ஏகப்பட்ட வாக்கியங்கள் இந்நாவலின் மொழிபெயர்ப்பில் நேர்செய்யப்பட வேண்டியிருக்கின்றன என்பதையும் மீறி மொழிபெயர்ப்பில் இந்த நாவல் சிறப்பாகவே நகர்ந்துகொண்டிருந்தது ஆனால் பக்கம் 114 இல் ஒற்றைச் சொல் முழு
மொழிபெயர்ப்பையும் சொதப்பிவிட்டது.

இதை எழுதுவதன் எனது நோக்கம் குற்றம் காண்பதல்ல, இனி வரும் பதிப்புகளிலாவது இந்தப் பிழை களையப்பட்டு இந்த அற்புதமான நாவல் தமிழ் வாசகர்களை சென்றடையவேண்டும் என்பதுதான்.

One Comment on “ஒரே ஒரு சொல் தவறாக/எம்.டி.முத்துக்குமாரசாமி”

  1. மூலத்தையும் மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு, இரண்டையும் கவனத்துடனும் அக்கறையுடனும் வாசிக்கும் வாசகர்கள் மிகக் குறைவு. தங்கள் ஞானம் பிரமிக்கவைக்கிறது.

    சில காலச்சுவடு மொழிபெயர்ப்புகள் உண்மையிலேயே சிறப்பாக இருப்பதையும் மறுக்கமுடியாது. மொழிபெயர்ப்பாளர்களுக்கு அதிக ஊதியம் தரும் நிறுவனம் காலச்சுவடு என்கிறார்களே!

Comments are closed.