இப்படியே விடக் கூடாது/ந. ஜெயராமன்

சுந்தரம் வீட்டில் எல்லோரிடமும் சிடுசிடுவென்று நடந்து கொள்கிறான்.  இப்பொழுதெல்லாம் அவன் வீட்டிற்குள் நுழைந்தாலே ரகளை ஆரம்பமாகிவிடுகிற தெனறு எல்லோருக்கும் அபிப்ராயம்.  அதுவும் அவன் தன் அக்காள் ரேவதியைக் கரித்துக் கொட்டுவத சொல்லி மாளாது.
“அம்மா, உன் அருமைப் பிள்ளையாண்டான் வந்துட்டான்.  எல்லாத்தையும் ரெடியா வச்சுடு,” - ஜன்னலைப் பார்த்தவாறு உட்கார்ந்து கதைப் புத்தகம் படித்துகக் கொண்டிருந்த ரேவதி அம்மாவிற்குக் குரல் கொடுத்தாள்.
“அவன் வர்றபோதே துருவாசர் மாதிரி வருவான்.  அவன் வம்புக்குப் போகாதே. உன் வாயைப் பொத்திண்டிரு.”
“இந்த வீட்டிலே ஏன்தான் எல்லாரும் அவனுக்கு இப்படிப் பயப்பறாளோ தெரியலை,” ரேவதி அலுத்துக்கொண்டாள்.
வேர்வை கசகசப்பில் முகம் கறுத்துப் போய், தெருப் புழுதி அத்திக் காயில் சாம்பற்பூத்த மாதிரி காலில் மண்டிக் கிடக்க சுந்தரம் உள்ளே நுழைந்தான்.
“இந்தாடீ, பையை எடுத்து வை.”
“பெரியவர் வந்துட்டா, இனிமே அதிகாரம் தூள் பறக்கும்.”
“ஆச்சு. சண்டை ஆரம்பமா யிடுத்து.  இனிமே பாயிலே உடம்பு

சாயறவரைக்கும் இதே பாடுதான். நீங்க இரண்டு பேரும் பூர்வ ஜன்மத்திலே விரோதிகளாக இருந்திருக்கணும்.”
பாத்ரூம் போனவன் வாளி ஜலத்தையும் அப்படியே சாய்த்துக் கொண்டான்.
“தண்ணியைப் பார்த்துக் கொட்டுடா. சொம்பாலே எடுத்து அலம்பிண்டா என்ன? என்ன அவசரம் இப்போ? எங்கே என்ன கொள்ளை போயிடறது?”
டிபன் தட்டைக் கையில் வாங்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தான்.
“என்னடீ என்ன?”
“என்ன அதட்டல் பலமாயிருக்கு?”
“என்ன பெரிசா ஸ்டைல் பண்ணிக்கறே? நீ இனிமே இரட்டைப் பின்னல் போட்டுக்கக் கூடாது. அசிங்கமாயிருக்கு.”
“நீ யாருடா என்னை அதிகாரம் பண்ண? நான் என் இஷ்டப்படிதான் இருப்பேன். பெரியவாள்ளாம் சும்மா இருக்கிறப்போ உனக்கு என்ன வந்தது?”
“சரி சரி தண்ணி கொண்டா”
ரேவதி எழுந்து போனாள்.
“தாவனியைச் சரியாப் போட்டுண்டு போயேன். இந்த ஸ்டைல் எங்கேந்து கத்துண்டே? ஐய்ய, நடையைப் பாரு..”
“உனக்கு இனிமே நான் ஒண்ணும் பண்ணமாட்டேன். என் வழிக்கு நீ வராதே.” பாதிதூரம் போனவள் திரும்பி வந்து உட்கார்ந்தாள்.
“தண்ணி தராட்டா புத்தகம் கிடைக்காது.” ரேவதி பாதி படித்துவிட்டுக் கவிழ்ந்து வைத்திருந்த புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டான்.
“வரவர மாது கூட உன்னை ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறான். அதான் உனக்குத் திமிர் ஏறியிருக்கு. நீ கதை படிக்கக்கூடாதுன்னு மாது சொல்லிட்டுப் போயிருக்கான். நீ படிச்சே அவன் வந்ததும் சொல்லிவிடுவேன். அப்பாவும் உதைப்பா. சொல்லிட்டேன்.”
உள்ளே நுழைந்த அம்மா சொன்னாள்:
“இதோ பாரு சுந்தரம், நான் சொல்றேன்னு எங்கிட்டே நாய் மாதிரி விழாதே. பரீட்சை முடியறவரைக்கும் கதைப் புஸ்தகம் போகாதே. சொல்லிட்டேன். அப்புறம் ஒங்கப்பா பாடு. உன் பாடு. ஒங்க அண்ணன் பாடு.”
“நீ ஏம்மா பயப்படறே? அந்தக் கழுதைகிட்டே என்ன பயம்? இப்படி நீங்க பயந்து பயந்து பேசறதுனாலேதான் அவன் தலைமேலே ஏறி உட்கார்றான்.”
“எனக்குத் தெரியும் எப்ப
என்ன பண்ணனும்னு. நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்.”
“இந்த மாதிரி அகராதி பிடிச்சு அலைஞ்சேன்னா நீ உருப்படி மாட்டே சொல்லிட்டேன்.”
அம்மா கசந்து கொண்டாள்.
“ஏய் ரேவதி, நாற்காலியை விடு. நான் உட்கார்ந்துக்கணும்..”
அவள் எழுந்ததும் ஒரு கிழிசல் துண்டை எடுத்து நாற்காலியைத் தட்டினான். அவன் துண்டை விசிறி உதறியபோது அம்மாவின் கண்ணில் கொடுக்கு பட்டது.
“பாத்துடா. இது என்ன நாசூக்கு?”
“போம்மா. ஒரே தூசி.”
“ஆமாண்டா. இப்ப அவள் உட்கார்ந்த இடத்திலே உனக்குத் தூசி எங்கேந்து வந்தது?”
“எனக்கு அருவருப்பா இருக்கு. நான் தட்டறேன். இதுக்கெல்லாம் நீ ஏன் ஏதாவது சொல்றே?”
“என்ன சுந்தர், ரெண்டு குரல்லே பேசறே. நீ இந்த மாதிரி பண்றதெல்லாம் ஸ்டைல் இல்லையோ?”
“அது தானா வர்றது.. உன்னை மாதிரி வேணும்னு நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்.”
“ஏய் ரேவதி, உன் புஸ்தகத்தை எடுத்துண்டு நீ அந்தண்டை போ. அவனோட சண்டைக்குப் போகாதே. உங்களோட மல்லுக்கு நிக்க என்னாலே முடியாது.”
“புஸ்தகத்தை இப்ப தர மாட்டேன். நான் கொஞ்ச நேரம் படிக்கப் போறேன்.
“எக்கேடு கெட்டுப் போங்கோ. “ அம்மா கீழே காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்து தனக்குத்தானே சொல்வது மாதிரி பேசினாள்.
“இப்ப எல்லா நல்ல வழக்கமும் போயாச்சு. துர்குணம்தான் ஜாஸ்தியாப் போச்சு. சாமி படத்தைத் துடைச்சு பூ போடறது, விளக்கு ஏத்தினதும் ஸ்தோத்திரம் சொல்றது எல்லாம் போன இடம் தெரியலை. இப்படியே இருந்தா உருப்படற வழி எங்கே?”
சுந்தரம் சூள் கொட்டிவிட்டுப் புஸ்தகத்தைப் பார்ப்பதில் கவனத்தைச் செலுத்தினான். ரேவதி விளக்கேற்றிவிட்டு அம்மாவிற்குக் குங்குமம் கொடுத்தாள்.
“கதை படிச்சது போதும். படிப்பைக் கவனி.”
“சே…ஏன் இப்படி பிடுங்கித் திங்கறேன்?”
சுந்தரம் புஸ்தகத்தைத் தரையில் வீசியெறிந்து விட்டு எழுந்தான். சோம்பல் முறித்தான்.
“இனிமே நான் தினமும் எகிஸ்ர்சைஸ் பண்ணப் போறேன். அப்பாத்தான் கைகால் எல்லாம் திண்டுன்னு ஆகும். எல்லாரும் தள்ளிப்போங்க.” கையை நீட்டி உடம்பை வளைத்து அவனுக்குத் தெரிந்த தேகப் பயிற்சி செய்தான்.
“இது ஒண்ணும் எக்ஸர்சைஸ் இல்லை.”
“சும்மா இருடீ. வெறுமனே தோப்புக் கரணம் போடறதுகூட உடம்புக்கு நல்லதுதான்.”
நடையில் காலடியோசை கேட்டது. ரேவதி திரும்பிப் பார்த்துவிட்டு, “அப்பா வந்தாச்சு..”
என்றாள்.
அம்மா எழுந்துகொண்டு சமையலரைக்குப் போகக் கிளம்பினாள்.
“அவனுக்கும் சேர்த்துக் காப்பி கலந்துடு. அவனும் வந்திண்டிருக்கான். மளிகைக் கடைக்காரன்கிட்டே ஆர்லிக்ஸ் இருக்கான்னு விஜாரிச்சுண்டு வரப்போனான்.”
அப்பா சட்டையைக் கழற்றிவிட்டு கை. கால் கழுவப் பாத்ரூமிற்குள் போனார்.
தலையை ஒதுக்கிவிட்டுக் கொண்டு, நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு பள்ளிக்கூடப் புத்தகங்களையெடுக்க மேஜையடிக்கு வந்த சுந்தரம் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ரேவதியின் முதுகில் பலமாக ஒரு தட்டுத் தட்டினான்.
முகத்தைத் துண்டால் துடைத்துக்கொண்டு வந்த அப்பா இதைக் கவனித்துவிட்டு,
“அவள் கிட்டேன என்ன சேஷ்டை? படிக்கிற வழியைப் பார்,” என்று அதட்டல் போட்டார்.
“ஒருத்தர் மாத்தி ஒருத்தர் என்கிட்டே குத்தம் கண்டு பிடிச்சுண்டே இருங்கோ.”
அப்பா சிரித்துக் கொண்டார். கையில் காப்பியோடு வந்த அம்மா சொன்னாள்:
“பின்னே ஒன்னை மெச்சுவாளோ? பெரியவா, சின்னவாங்கறது இல்லாம என்ன பேச்சுப் பேசறே, நீ?”
“அம்மா, மாதுவும் வந்துட்டான்.” ரேவதி சொன்னாள்.
மாது கூடத்துப் பெஞ்சியில் உட்கார்ந்து பூட்ûஸக் கழற்றிக் கொண்டிருந்தான். அவன் கொண்டு வந்திருந்த சாமான்கள் பெஞ்சியில் இருந்தன.
“என்ன அண்ணா, காலண்டரா?”
“ஆமாம். மளிகைக் கடைக்காரன் கொடுத்தான்.”
சுந்தரம் அதைப் பிரித்தான்.
“இதை இங்க மாட்ட வேண்டாம், அண்ணா. யாருக்காவது கொடுத்துடலாம்.”
“ஏன்?” என்று கேட்டுக்கொண்டே எழுந்து மாதுவும் படத்தைப் பார்த்தான். மார்பகமும், புஜங்களும் லேசாகத் தெரிய ஒரு பெண் சிரித்துக் கொண்டிருந்தாள்.
“இளிப்பைப் பாரு. கர்மம்.” சுந்தரம் சத்தமாகச் சொன்னான்.
“அவன் கிடக்கிறான். இதை நாம்பளே வச்சுக்கலாம்.” ரேவதி காலண்டரை எட்டிப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.
“அது பாட்டுக்கு எங்கேயாவது மூலையில் இருந்துட்டுப் போகட்டும். உன்னை என்னப் பண்ணப் போறது அது?”
அம்மா இப்படிச் சொன்னதும் ரேவதி சுவரில் ஒதுக்குப்புறமாக இருந்த ஆணியில் அதை மாட்டினாள்.
சுந்தரம், üஎனக்கென்ன?ý என்று சொல்லிவிட்டு உள்ளே போனேன்.
“இதோ நான் அரை மணியிலே வந்துடறேன்.” அப்பா சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார். வேஷ்டியைச் சுற்றிக்கொண்டு மாது பாத்ரூமிற்குள் போனான். அம்மா அவனைத் தொடர்ந்து சமையலறைப் பக்கம் சென்றாள்.
“இங்கே வாயேன் மாது. இவன் காலண்டரில் கிறுக்கிறான்.”
“சுந்தரம், சும்மா இரு.” மாட்டியிருந்த காலண்டரைக் கழற்றி ரேவதி அவனிடம் கொண்டுபோய்க் காண்பித்தாள்.
“என்னடா இது?”
“ஒண்ணும் இல்லே. வெறுமனே அவள் ஜாக்கட்டுக்கு டிசைன் போட்டேன்.”
படத்திலிருந்து பெண்ணின் ஜாக்ட் தோளிலிருந்து வெகுவாகச் சரிந்திருந்தது. அந்த இடத்தில் தெரிந்த வெற்றுடல், கழுத்து வளைவு ஆகிய இடங்களில் சுந்தரம் பேனாவால் கோடுகள் போட்டிருந்தான்.
மாது சிரித்துக் கொண்டான்.
“நீ அவனைக் கண்டிக்க மாட்டேங்கறே. அதான் அவன் இப்படி இருக்கான்.” ரேவதி புகார் பண்ணினாள்.
மாதுவிற்கு காப்பி கொடுத்த அம்மா கேட்டாள்:
“ஏண்டா இன்னிக்கும் உனக்குத் துணி வாங்காம வந்திருக்கே?”
“வாங்கினாப் போச்சு. ஒரே டயர்டா இருந்தது. பஸ்ஸ÷ம் சட்னுகிடைச்சது. ஏறி வந்துட்டேன்.”
“நாளைக்காவது வாங்கிடு. அப்புறம் பணம் செலவாயிடும்.”
“அண்ணா, அடுத்த மாசம் எனக்கு ரெண்டு நாலு முழ வேஷ்டி வாங்கித் தாயேன். நான் வேஷ்டி கட்டிப் பழகிக்கப் போறேன்.”
“நீ சுண்டைக் காயாட்டம் இருக்கே. அதுக்குள்ளேயும் உனக்கு என்ன வேஷ்டி வேண்டியிருக்கு?”
“ஏய் ரேவதி, ஏதாவது பேசினால் உதைப்பேன்.”
“ஆகட்டும் பார்க்கலாம். இப்ப நீ படி.”
“இன்னிக்கு நான் படிக்கலை. போர் அடிக்கிறது. படிக்க ஓடலை.”
“பேஷா இருக்குடா. படிக்கிறதுக்குப் போர் அடிச்சுதுன்னா போக வேண்டியதுதான்.” அம்மா சொன்னாள்.
மாது பேப்பரை எடுத்துக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தான். சுந்தரம் ஏதோ பாடப் புத்தகத்தை எடுத்துப் பிரித்துக் கொண்டு கீழே உட்கார்ந்தான்.
“ஏண்டா சாப்பிட வரலையா?”
“அப்பாவும் வந்துடட்டும்.”
பிரித்த புத்தகத்தின் முன்னால் சுந்தரம் உட்கார்ந்திருந்தான். அவன் எங்கோ கவனமாக இருந்தான். பக்கத்தில் எங்கிருந்தோ சினிமா பாட்டு கேட்டது. ஆண் குரலும், பெண் குரலும் மாறி மாறிக் கேள்வி, பதில் ரூபத்தில் வந்து கொண்டிருந்தது.
“இப்ப படிக்கிற மாதிரி பேர் பண்ண வேண்டாம். சாப்பிட்டுட்டு ஒழுங்கா ஒரு மணிதேசாலம் படி.” சுந்தரத்தைக் கவனித்த அம்மா சொன்னாள்.
“தட்டை வையுங்கோ.” உள்ளே நுழைந்துகொண்டே அப்பா சொன்னார்.
சாப்பிடுகையில் அப்பா மாதுவிடம் சொன்னார்.
“சாம்பசிவத்தோடு பிள்ளைக்கு ஏதோ புஸ்தகம் வேணுமாம். நம்மாத்துலே இருந்தா கொடேன்.”
“பார்க்கிறேன்.”
சுந்தரம் லேசாக முணுமுணுத்தான்.
“சின்னதுரை என்ன சொல்றான்?”
“அவனுக்கு அந்த பிள்ளையைக் கண்டா இப்ப ஆகிறது இல்லே. ஏன்னு தெரியலை.” அம்மா சொன்னாள்.
“ரொம்ப தயாள குணம்.”சுந்தரம் சொன்னது அப்பாவின் காதில் விழுந்தது. அவருக்குக் கோபம் வந்துவிட்டது.
“அசிகை பிடிச்ச ராஸ்கல். உனக்குப் புஸ்தகம் இருக்காதேன்னு நீ ஒண்ணும் கவலைப் பட வேண்டாம். எங்களுக்குத் தெரியும் உன்னைப் பார்த்துக்கறதுக்கு.”
“போறும் பேசாம இருங்கோ. அவனுக்கு சரியா நீங்க சத்தம் போட வேண்டாம்.” சுந்தரம் அவசரம் அவசரமாகச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு எழுந்து போனான்.
“இந்தப் பயலை இப்படியே விடக்கூடாது. கொட்டத்தை அடக்கணும்.”
“தானே சரியாப் போயிடும், அப்பா.”
“இருந்தாலும் மாது, உன்னை மாதிரி அவன் இல்லை.” அம்மா சொன்னாள்.
“நானும் அப்படித்தான் இருந்திருப்பேன். அவன் வயசிலே நான் சித்தப்பா வீட்டிலே இருந்தேன். உங்களுக்குத் தெரியலை.” மாது சிரித்துக்கொண்டேசொன்னான்.
“எல்லாம் புதுசா இருக்கு,”என்று அம்மா இழுத்தாள் .

(நன்றி : கசடதபற ஆக்டோபர் 1970)

One Comment on “இப்படியே விடக் கூடாது/ந. ஜெயராமன்”

  1. நல்ல இயல்பான நடையில் அன்றைய குடும்பம் கண் முன் விரிகிறது.
    பக்கத்தில் எங்கிருந்தோ பாட்டு. படிப்பில் லயிப்பு இல்லாமல் இருப்பதை அம்மா சுட்டிக்காட்டுவது , அப்பா சன்னமாக கோபப்படுவது என அத்தனையும் அருமை.
    எனக்கும் என் அக்காவிற்கும் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள் ஞாபகம் வருகிறது. நல்ல இயல்பான நடை. வாழ்த்துகள்

Comments are closed.