2014 பிப்ரவரி 4 /சா கந்தசாமி

மாலை மூன்று மணி. டெலிபோன் அடித்தது. எடுத்தேன் “ஐராவதம் போய்விட்டானாம்?” என்றார் அசோகமித்திரன். அவர் குரலில் சோகமும் பதற்றமும் சேந்திருந்தன.
“எப்பொழுது?”
“இரண்டு மணி நேரத்திற்குமுன்னாலாம்.”
“நான் போய்ப் பார்க்கிறேன்” என்று டெலிபோனை கீழே வைத்தேன்.
ஐராவதம் என்ற புனைப்பெயரில் சிறுகதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகள், புத்தக மதிப்புரைகள் எழுதி வந்தவர். அவர் இயற்பெயர் ஆர்.சாமிநாதன். நல்ல படிப்பாளி. தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் படித்து வந்தார். அவை பற்றி பேசவும், எழுதவும் கூடியவராக இருந்தார்.
1964-ஆம் ஆண்டில் சென்னை அண்ணாசாலையில், புதிய மத்தி நூலகம் கட்டப்பட்டது. நூலகத்தில் இலக்கியக் கூட்டங்கள் நடத்த இரண்டு ரூபாய் கட்டணத்தில் இடம் கொடுத்தனர். நூலகத்தில் புத்தகங்கள் எடுத்துப் படித்துக்கொண்டிருந்த நாங்கள், அதாவது நான், நா.கிருஷ்ணமூர்த்தி, க்ரிய எஸ்.ராமகிருஷ்ணன் ஒன்றாகச் சேர்ந்து இலக்கியச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி இருந்தோம். மாதத்திற்கு இரண்டு கூட்டங்கள் சேர்ந்தாற்போல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டத்திற்குத் தலைவர் கிடையாது. பேச்சாளர்கள் எழுதி வாசிக்க வேண்டும். வாசகர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும். கூட்டம் மாலை ஆறு மணிக்குத் தொடங்கும். இரவு எட்டு மணிக்கு முடிவடையும்.
இலக்கியச் சங்கக் கூட்டத்தில் க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி, வல்லிக்கண்ணன் எல்லாம் கட்டுரை எழுதி வாசித்தார்கள். லா.ச.ராமாமிர்தம், நா.பார்த்தசாரதி, அசோக மித்திரன் கலந்துகொண்டார்க்ள. கூட்டத்தில் பழைய எழுத்தாளர்களோடு இலக்கியத்தில் ஆர்வங்கொண்ட இளைஞர்கள் வருகை புரிந்து கொண்டிருந்தார்கள். சிலர் இரண்டு, மூன்றுகூட்டங்களோடு நின்று போனார்கள். சிலர் தொடர்ந்து கலந்து கொண்டார்கள்.
ஒரு கூட்டத்தில் அவர் பக்கத்தில் உட்கார்ந்து விசாரித்தேன். தன் பெயர் ஆர்.சாமிநாதன் என்றும். பக்கத்தில் உள்ள டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும். படிப்பத்தில் ஆர்வம் இருப்பதால் கூட்டங்களுக்கு வருவதாகச் சொன்னார். பின்னர் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். ஆறு மாதத்திற்கு பிறகு ரீசர்வ் வங்கிக்கு வேலைக்குப் போய் இருப்பதாக சொன்னார். அவர் தியாகராய நகரில் நடேசன் தெருவில் குடியிருந்து வந்தார். அவர் தந்தை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரு இளைய சகோதரரும், சகோதரியும் அவருக்கு இருக்கிறார்கள். 1968-ஆம் ஆண்டில் இலக்கியச் சங்கத்தின் சார்பில் கோணல்கள் – என்னும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றைக் கொண்டுவர முயற்சி செய்துகொண்டு இருந்தோம். பன்னிரண்டு சிறுகதைகள். நான் மற்றும் நா.கிருஷ்ணமூர்த்தி, ம.இராஜாராம், க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் – என்று இலக்கியச் சங்கத்தோடு சம்பந்தப்பட்ட நான்கு ஆசிரியர்களின் புதிய சிறுகதைகள் பத்திரிக்கைகளில் வெளிவராத கதைகள். பத்திரிகை பிரசுரத்திற்கு அனுப்பப்படாத கதைகள்.
கோணல்கள் தொகுப்பிற்கு யாரிடம் முன்னுரை கேட்பது என்று யோசித்தபோது, ஒருமனதாக ஆர்.சாமிநாதனிம் கேட்பது என்று முடிவு செய்தோம். கதைகள் எழுதியிருக்கும் நான்கு பேர்களிலும் வயதில் இவரே இளைஞர். அதிகமாக இலக்கியம் அறிந்தவராகவும் பட்டார். அவரிடம் அத்தனை கதைகளையும் கொடுத்து முன்னுரை எழுதி கொடுக்கும்படி கேட்டுக் கொண்டோம். அவர் பத்து நாட்களில் நான்கு பக்க அளவில் ஒரு முன்னுரை எழுதி கொண்டு வந்து கொடுத்தார். அதில் ஐராவதம் என்று பெயர் எழுதி இருந்தார்.
“இது என்ன ஐராவதம். புது பெயர்” என்று கேட்டதற்கு, “பாட்டி அப்படித்தான் கூப்பிடுவார்; அதோடு சொந்தப் பெயர் தெரியாமல் இருப்பதும் நல்லது தானே’ என்றார்.
1968-ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது எளிய முறையில் அடக்கத்தோடு – ஐராவதம் எழுதிய முன்னுரையுடன் கோணல்கள் வெளியிடப் பட்டது. மத்திய நூலக சிற்றரங்கில், தி.ஜானகிராமன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
கசடதபற – தொடங்கப்பட்டதும், அதற்கு கட்டுரைகள், புதுக்கவிதைகள் எழுதி கொடுத்தார். கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் புகழ்பெற்ற உரையான “வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்னும் பேச்சின் ஒரு பகுதியை மொழி பெயர்த்துக் கொடுத்தார். எங்கள் கூட்டம் அசோகமித்திரன், ஞானகூத்தன், ந.முத்துசாமி, பதி என்று பெருகியபோது ஐராவதம் எல்லோருக்கும் பிடித்தமானவராக இருந்தார். இலக்கியம் தெரிந்தவர் என்பதற்காகவே மதிக்கப்பட்டார். அவர் சண்டைக்காரர் இல்லை. ஆனால் நழுவக் கூடியவர் கிடையாது. அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு மாறுதல். அதனை இலக்கியச் சங்கம் வெளியிட்டது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் எளிமையாக மொழி பெயர்ப்பது மாதிரி, தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் ஆற்றல் பெற்றிருந்தார். என் கட்டுரைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இருக்கிறார். எப்பொழுது வேலை கொடுத்தாலும் அதனை உடனே செய்து முடித்துவிடுவார்.
1986-ஆம் ஆண்டில் க.நா.சுப்பிரமணியம் டில்லியில் இருந்து சென்னைக்கு வந்தார். அவருக்குச் சென்னையில் தங்கியிருக்க வீடு இல்லை. வாடகைக்கும் வீடு பிடிக்கவில்லை. எங்குத் தங்குவது என்று தீர்மானம் இல்லாமல் வந்தவரை ஐராவதம் தம் விருந்தினராக அழைத்துச் சென்றார். ஒரு மாதத்திற்கு மேலாக பெசன் நகர் ரிசர்வ் வங்கி குடியிருப்பு வீட்டில் வைத்திருந்தார்.
தன் நண்பர்களோடு சேர்ந்து இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார். பி.எஸ்.ராமையா தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நான் பேசினேன். எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம் அவருக்கு உதவினார். எப்பொழுதாவது அவர் வீட்டிற்குச் சென்று வருவார். வந்ததும், இலக்கிய நண்பர்கள் அனைவரையும் லா.ச.ராமாமிர்தம் விசாரித்தது பற்றி சொல்வார். இசையில் நாட்டம் கொண்டவர். கச்சேரிக்குச் சென்று கொண்டிருந்தார்.
1994-ஆம் ஆண்டில் விசாரணைக் கமிஷன் நாவலை எழுதி முடித்தேன். அதற்கு ஐராவதம் முன்னுரை எழுதினால் சரியாக இருக்குமென்று பட்டது. அவரிடம் கேட்டேன். அதற்கென்ன எழுதிவிடலாம் என்றவர் பதினைந்து நாட்களில் எழுதி கொடுத்தார். தமிழர்க்ள அங்கீகாரம் செய்யவேண்டிய நாவல் என்று ஒரு வரி குறிப்பிட்டிருந்தார். 1998-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
அவர் சொந்த வீடு வாங்கிக் கொண்டு, மேற்கு மாம்பலம், நாயக்கமார் தெருவிற்குச் சென்றார். நான் பலமுறைகள் அவர் வீட்டிற்கு சென்று இருக்கிறேன். அவர் மனைவி சுமதி நல்ல காபி கொடுப்பார்; சில முறை சாப்பாடு போட்டிருக்கிறார். ஐம்தாண்டு காலம் ஐராவதத்தோடு நெருக்கமாகப் பழகி இருக்கிறேன். பிணக்கு எதுவும் ஏற்பட்டதில்லை. அதற்கு அவரின் குணமே காரணம்.
நவீன விருட்சம் பத்திரிகையில் அவர் அதிகமாக எழுதி வந்தார். அவருக்கு எதையும் லேசான நகைச்சுவையோடு சொல்லம் திறன் இருந்தது. அவர் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து, கெட்டவன் கேட்டது என்ற தொகுப்பை சென்ற ஆண்டு அழகிய சிங்கர் கொண்டு வந்தார். அதில் ஐராவதம் எளிமையும், நகைச்சுவை உணர்வோடு, பேச்சின் வசீகரமும் தெரிகிறது.

(டிசம்பர் 2014 ல் வெளி வந்த 96வது நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கட்டுரை)