குரல்கள்/அனங்கன்

தெருக்களில் கூவிவிற்பவர்களின்
குரல்கள்
ஏற்ற…இறக்கமாய்
அவர்கள் விற்கும் பொருளை
வேறொரு கோணத்தில்
அறிமுகம் செய்கிறது.

சிலநேரங்களில் சொற்கள்
பிடிபடாமல் காதை தீட்டிக்கொண்டு
கவனத்தை
ஒருங்கிணைக்க வேண்டியதிருக்கிறது.

அவர்களின் குரலின் வலிமை
எல்லா நேரங்களிலும் ஒரே
விதமான ஓசையுடன்தான் இருக்கும்
என்று சொல்வதற்கில்லை.

பூண்டை கூவிவிற்பவன் சொல்…
ஒருவசைச்சொல்போல் சிரிப்பைத்தூண்டுகிறது.

கீரைவிற்கும் பொக்கைவாய்கிழவியிடம்
கீரை அரைபட்டுத்தான் வெளிவருகிறது.

என்னவென்று புரிந்துகொள்ளமுடியாமல்
கடந்துபோன பொருள்கள்
எத்தனையோ.

தேவையைஒட்டித்தான் விற்கும்
குரல்கள்
கேட்கப்படுகின்றன என்றாலும்…
அவற்றில் இனிமையை எதிர்பார்க்க
முடியாது.

இப்போது சிலரிடம் ஒலிபெருக்கியில்
பதிவுசெய்யப்பட்ட குரல்கள்
கேட்கின்றன….
திரும்பத்திரும்ப கேட்கும் அவ்வோசை
எரிச்சலைமூட்டுகிறது.

அம்மிகொத்துவது…
ஆட்டுக்கல்கொத்துவது போன்ற
குரல்களெல்லாம் தற்போது
கேட்பதே இல்லை.

காலமாற்றம் சில குரல்களை
முடக்கிப்போட்டுத்தான்
வைத்திருக்கிறது.

ஒரு மாறுதலுக்காய் கவிதை
நூல்களையும் கூவிவிற்றாலென்ன
எனத்தோன்றுகிறது.

அதற்கான குரல்வலிமை
கவிஞர்களிடம் இருக்குமா
என்பது ஐயத்திற்கு உரிய
வினாதான்.

2 Comments on “குரல்கள்/அனங்கன்”

  1. “ஒரு மாறுதலுக்காய் கவிதை
    நூல்களையும் கூவிவிற்றாலென்ன”
    என்கிறீர்கள். யாராவது அடிக்கவந்தால்
    தாங்கும் வலிமை கவிஞனின் உடலில்
    இருக்கவேண்டுமே!

    விடுங்கள், கவிதை எழுதிவிட்டோம், (சொந்தச் செலவில்)
    புத்தகம் போட்டும்விட்டோம்.
    விற்கும்போது விற்கட்டும்!

Comments are closed.