
கழுவித் துடைத்த தரையில்
புழுதி படிந்த பாதத்தால்
எழுதிக் கிறுக்குகிறாய்
இடித்து வைத்த மாவை
எடுத்து வீடெங்கும் நீ
இறைத்து வைக்கிறாய்
பிடித்து உரலடியில் பிணைக்க
முடிந்தால் கூட புண்ணியம்
நினைத்துப் பார்க்க முடியுமா உனைப்
பிடித்து அடைக்கும் காரியம்

படைக்க வைத்த பழங்களை
எடுத்து நீ கடித்துச் சுவைக்கப்
பிடித்து வைத்துக் கேட்டால்
அடித்தது போல் நடித்தழுது
வெடிச் சிரிப்பினூடே உலகு
காட்டுகிறாய் வாயில்
வெடித்திடுமோ எனப் பயத்தில்
சீடை முறுக்கு தட்டை செய்ய
அடுக்களை தவமிருக்கையில்
சிலிண்டரைப் பிடித்து ஆட்டி எனை
கிலி கொண்டலறச் செய்வாய்
போதுமினி தாங்காது நீ என்னை
பூதகை என்றுகூட சொல்லிக் கொள்
பாதம் வரையும் வேலையுமிருக்கு
வீதியில் போய் விளையாடி வா

கண்ணனின் திருவிளையாடல்களை இதுபோல் ஒவ்வொரு இளம் தாயும் ஒவ்வொருநாளும் சந்தித்துக் கொண்டே இருக்கிறாள்! நீங்காத இன்பப் பரவசம் அல்லவா அந்த அனுபவம்! அழகான கவிதை!